வியாழன், 30 ஜனவரி, 2014

பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க....யாருக்கு எத்தனை தொகுதிகள்?

தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமையும், தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., மற்றும் ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகள், இணைய உள்ளன. இந்த கட்சிகளுடன், முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.> தே.மு.தி.க.,வின் முடிவுக்கு பின், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொள்ள பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பிப்ரவரி, 2ம் தேதி நடக்கும் அக்கட்சி மாநாட்டுக்கு பின், முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.பா.ஜ., தலைவர்கள் அவரை சந்தித்தபோது, கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேர உள்ளன, அவை எதிர்பார்க்கும் தொகுதிகள் விவரம் ஆகியவை பற்றி, பேசப்பட்டுள்ளது. அதேபோல், அவரது எதிர்பார்ப்பும் அறியப்பட்டுள்ளது.இந்நிலையில், அடுத்த மாதம், 8ம் தேதி, சென்னை வரும் நரேந்திர மோடிக்கு, கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளார். அதற்குள், கூட்டணி கட்சிகளை முடிவு செய்து, தொகுதிகள் பங்கீட்டையும் முடித்து விட வேண்டும் என, விரும்புகிறார்.
கண்டிப்பாக வேண்டும்:

இதையடுத்து, கடந்த வாரத்தில், ம.தி.மு.க., தலைவர் வைகோவை, பா.ஜ., மேலிட தலைவர் முரளீதர் ராவ் சந்தித்தபோது, ம.தி.மு.க., போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் கேட்டுப் பெறப்பட்டுள்ளது. மொத்தம், 13 தொகுதிகள் அடங்கிய பட்டியலை, வைகோ கொடுத்துள்ளார். 10 தொகுதிகளில் போட்டியிடவும், அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.குறிப்பாக, விருதுநகர், ஈரோடு, பொள்ளாச்சி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து தொகுதிகள், ம.தி.மு.க.,வுக்கு கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும்; எக்காரணத்திற்காகவும், அதில் மாற்றம் செய்யக் கூடாது என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில், பா.ஜ., கூட்டணிக்கான முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட, காந்திய மக்கள் இயக்கத் தலைவர், தமிழருவி மணியனிடம் பேசும்போதே, வைகோ இதை வலியுறுத்தி உள்ளார். பின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் பேசும்போது, வைகோவின் இந்த நிபந்தனை பற்றி, தமிழருவி மணியன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அதனால், பா.ஜ., கூட்டணிக்கு தே.மு.தி.க., வரும்பட்சத்திலும், ம.தி.மு.க., கேட்கும் தொகுதிகளில், இந்த ஐந்து அவசியம் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பா.ம.க., தரப்பில் நடத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில், அக்கட்சி தற்போது, 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த முயன்றுள்ளது. எனவே, இந்த, 15 தொகுதிகளை பா.ம.க., குறிவைத்துள்ளது. அதில், புதுச்சேரியும், காஞ்சிபுரமும் அடங்கும். எனவே, காஞ்சிபுரம் ம.தி.மு.க.,வுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை. மேலும், ம.தி.மு.க.,வை விட கூடுதல் தொகுதிகள் கேட்கவும் பா.ம.க., திட்டமிட்டுள்ளது. எனவே, கூட்டணி நலன் கருதி,ம.தி.மு.க., விட்டுக் கொடுக்க நேரிடும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிபந்தனை:

இதற்கிடையில், தே.மு.தி.க., தரப்பில், 16 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில், குறைந்தபட்சம் 12 தொகுதிகள் தேவை என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், ஆரம்பத்திலேயே தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, கூட்டணியில், அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சியாகவும் இருக்க வேண்டும் என, விஜயகாந்த்நிபந்தனை விதித்துள்ளார். கூட்டணிக்கு தலைமை ஏற்கும் பா.ஜ.,வும், இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளது. குறைந்தபட்சம், 10 தொகுதிகளிலாவது அக்கட்சி நிற்க வேண்டும்.இந்நிலையில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, நாமக்கல் தொகுதியையும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியையும் கேட்டுள்ளன. இக்கட்சிகளுக்கு இந்த தொகுதிகள் ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், பா.ஜ., கூட்டணியில் சேர முன்வந்துள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என, பா.ஜ.,வுக்கு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.எனவே, புதுச்சேரி தொகுதி, என்.ஆர்.காங்கிரசுக்கு போய் விடும். தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், கொ.ம.தே.க., மற்றும் ஐ.ஜே.கே.,வுக்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விடும். மீதமுள்ள, 37 தொகுதிகளை தான், தே.மு.தி.க., - பா.ஜ., - பா.ம.க, - ம.தி.மு.க., ஆகியவை பங்கிட வேண்டும். அந்த நிலை ஏற்படும்போது, தே.மு.தி.க., - 11. பா.ஜ., - 10, பா.ம.க., - 8, ம.தி.மு.க., - 8 என, ஒதுக்கப்படலாம் அல்லது, பா.ம.க.,வை திருப்திப்படுத்த 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ம.தி.மு.க.,வின் கணக்கில் ஒன்று குறைக்கப்படலாம் என, பா.ஜ., வட்டாரம் தெரிவித்தது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக