ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கேரள கள்ள நோட்டு கும்பல் தமிழகத்தில் ஊடுருவல்

கேரள கள்ள நோட்டு கும்பல், சேலம் வழியாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் வகையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், இந்திய ரூபாய் நோட்டுக்களை போன்ற, கள்ள நோட்டுக்களை பிரின்ட் செய்து, இந்தியாவில் புழக்கத்தில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.இந்திய ரூபாய் நோட்டுக்களின் அனைத்து சாரம்சங்களையும் இந்நாடுகள் பின்பற்றுவதால், கள்ள நோட்டுக்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டுக்களை அடையாளம் காணும் வகையில், லேசர் தொழில் நுட்ப வசதியுடன் வந்துள்ள கள்ள நோட்டு மிஷின் கூட திணறும் அளவுக்கு நோட்டு வடிவமைக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகும் கள்ள நோட்டுக்களில் நடுவில் உள்ள அச்சுகளில் மட்டும், 'ஆர்.பி.ஐ.,' (ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா) என்பதை கள்ள நோட்டுகளில் பிரின்ட் செய்யப்பட வில்லை.


ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நோட்டுக்களில் 'ஆர்.பி.ஐ.,' என்னும் எழுத்துக்கள், ஆங்கிலம், இந்தியில் இருக்கும்.அதே போல், பல்வேறு மாற்றங்களை கள்ள நோட்டுக்களில் மிக துல்லியமாக கவனித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இந்த நோட்டுக்கள் தற்போது கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து, சேலம் வழியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் புழக்கத்தில் விடப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு லாட்டரி சீட்டு பார்சல்களுடன், கள்ள நோட்டு பார்சல்களும் லாரி, வேன் மூலம் கொண்டு வரப்பட்டு, சப்ளை செய்யப்படுகிறது. சேலம் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களில் விழும் பரிசுகளுக்கு கள்ள நோட்டுக்களே வழங்கப்படுகிறது.

இந்த நோட்டுக்களை சப்ளை செய்யும் கும்பலுக்கு, கமிஷனாக அதிக பணம் கிடைப்பதால், சப்ளை செய்யும் பணியில் ஈடுபடும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சில நாட்களுக்கு முன், கோவையில், கள்ள நோட்டுக்களை கடத்தியதாக, சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்த மயில்சாமி,50, தாதகாப்பட்டியை சேர்ந்த ரகுராமன்,54, ஆகியோரிடம் இருந்து, 19,500 ரூபாய் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதே போல், சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஜனவரி மாதத்தில் மட்டும், பத்துக்கும்
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ள நோட்டுக்கள் அனைத்துமே கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சேலம் வழியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சப்ளை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.

சேலம், திருச்சி, மதுரையை சேர்ந்த கும்பல்கள், தங்களுக்குள் 'லிங்க்' அமைத்துக் கொண்டு, கள்ள நோட்டுக்களை கடத்தல், சப்ளை செய்தல், மாற்றுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கும்பல் அனைத்தும் சேலத்தை மையமாக கொண்டு செயல்படுவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்களை சப்ளை செய்யும் கும்பல் ஊடுருவியுள்ளது, வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- -நமது சிறப்பு நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக