ஞாயிறு, 19 ஜனவரி, 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் ! வீரமணி போர்க் கொடி!


  •  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?
  • மூத்த வழக்குரைஞர் காந்தியின் ரிட் மனு வரவேற்கத்தக்கதே!
தமிழ்நாட்டுத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழு
சட்ட அமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

  • தி.மு.க. எம்.பி.க்களை சமூகநீதிக்கான திராவிடர் இயக்கத் தலைவர் கலைஞர் அவர்கள் அனுப்பி வைக்கக் கோருகிறோம்
ஜனவரி 24ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள சமூகநீதிக்கான போர்க் குரல்!


சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக் கம் அதிகரித்து வரும் நிலையை எதிர்த்துச் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து வரும் 24.1.2014 அன்று அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆகும். தற்போது 47 நீதிபதிகள்தான் உள்ளனர். காரணம் பலர் ஓய்வு பெற் றுள்ள நிலை; காலியாக இருந்த நீதிபதி பதவிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்கள் 12 பேர் ஆவார்கள்.  (அடுத்து ஒரு பதவி காலியாக உள்ளது - 13) இவர்கள் மாவட்ட நீதிபதிகளிலிருந்தும், வழக்குரைஞர்களிலிருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். (From the Bench and the bar).
திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்! 

இந்தப் பட்டியல், அரசியல் சட்டம் கூறும் சமூக நீதிக்கு எதிரான பட்டியலாக உள்ளது என்பதை நாம் 10.12.2013 தேதி சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்தோம்;  இந்த சமூக அநீதிப் பட்டியலை மாற்ற வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் 16.12.2013 அன்று மக்களைக் கூட்டி நடத்தினோம்.
இந்தப் பட்டியலில்  தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி ஒருவர் பெயர்கூட இடம் பெறவில்லை. தாழ்த்தப்பட் டோரில் குறிப்பாக அருந்ததியர் போன்ற வாய்ப்பு, காலங் காலமாக மறுக்கப்பட்ட பிரிவினருக்கும்கூட இடம் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்றத் திலும், மாவட்ட நீதிமன்றங்களிலும் அனுபவம் வாய்ந்த வர்கள் இருக்கவே செய்கின்றனர்.
அதுபோலவே மீனவர், சலவையாளர், முடி திருத்து வோர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஜாதிகளின் பிரதிநிதியாக எவரும் இடம் பெறவே இல்லை.
ஏராளமானவர்கள் உள்ள வன்னியர், யாதவர் போன்ற ஜாதியினர் பிரதிநிதித்துவம் வெகுக் குறைவே.
மாறாக, ஏற்கெனவே (மக்கள் தொகையில் 3 சதவிகிதமே உள்ள) பார்ப்பன நீதிபதிகள் இதுவரை இருபாலருமாக ஆறு பேர் உள்ளனர்.
இப்போது இந்த பரிந்துரைக்கப்பட் டுள்ள 12 பேர் பட்டியலில் சரியாக இங்கே வக்கீல் தொழில்கூட நடத்தாத பார்ப்பனர்கள் மூன்று பேர்  இடம் பெற்றுள்ளனர்.
இதைவிட பச்சையான சமூக அநீதி வேறு உண்டா?
மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்களின் ரிட் மனு
நாம் எடுத்துரைத்த இந்த சமூக அநீதியைக் களைந்து, சமூகநீதியும், போதிய அனுபவமும், திறமையும் உடைய வர்கள் இடம் பெற வேண்டும்; சம வாய்ப்பு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற இரண்டு முக்கிய அளவுகோல்கள் புறக்கணிக்கப்பட்ட பட்டியலாகவும் இது உள்ளது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் திரு. ஆர். காந்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்து, வாதாடினார்.
சென்னை உயர்நீதிமன்ற இரண்டு மூத்த நீதிபதிகள் இம்மனுவை விசாரித்து, இடைக்கால தடையையும் இப்பட்டியல்மீது அளித்தனர்.
பெரியார் மண்ணான தமிழ்நாடு, சமூக நீதிக்கே இந்தியாவிற்கு வழிகாட்டும் மண்ணாகும்.  இங்கே இப்படி ஒரு அநீதி நடக்க அனுமதிக்க முடியாது என்ற உணர்வை வழக்குரைஞர்கள் - கட்சி, ஜாதி, மதம் இவைகளையெல் லாம் ஒதுக்கி விட்டு பெருந்திரளாகக் கூடி, நீதிமன்றப் புறக்கணிப்பு என்ற அமைதி வழியில் - கொந்தளிப்பான மன நிலையிலும்கூட - வாதாடுகிறார்கள்.
இந்த சுவர் எழுத்தை கொதி நிலை உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள், உச்சநீதிமன்றம் - உயர்நீதி மன்றம் கூர்ந்து கவனித்து, வீம்பு காட்டாமல், இந்தப் பட்டியலைத் திரும்பப் பெற்று - மனு பரிசீலனைக்குட் படுத்தி, புதிய பட்டியலைத் தயாரிக்க முன் வருவதுதானே சரியான முடிவாக இருக்க முடியும்?
நீதியரசர் கர்ணன் அவர்களின் போர்க் கொடி!
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே இந்த சமூக அநீதிப் பட்டியல் கண்டு மனங்குமுறி, நானும் இதனை எதிர்த்து தனி மனுச் செய்ய விரும்பு கிறேன் என்று விசாரித்த அமர்வு முன்கூற, அந்த இரு நீதிபதிகளும், தாராளமாக மனு செய்யுங்கள் என்று இந்த நீதிபதிக்கு அனுமதியும் அளித்துள்ளனர். இவர் தலைமை நீதிபதியிடமும் முறையிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு
இதற்கிடையில் திடீரென்று உச்சநீதிமன்றமே தானே முன் வந்து இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாகவும், வழக்கு முழு விசாரணையும் நடத்தாமலேயே சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் விசாரித்து - ஒரு குறிப்பிட்ட தேதி வரை தடை- வழங்கியதை ரத்து செய்தும், மூத்த வழக்குரைஞர் காந்தி போட்ட வழக்கினை எடுத்துக் கொண்டுள்ளனர்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இது மேல் முறையீடாக அமையவில்லை. மாறாக, தாமே அவசர அவசரமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எடுத்துக் கொண்டு பட்டியலை மறுபரிசீல னைக்கு உட்படுத்தக் கூடாது என்று கூறுவது சரியான நீதிபரிபாலன முறைதானா என்பது சட்ட அறிஞர்கள் மத்திய சட்ட அமைச்சர், குடிஅரசுத் தலைவர் ஆகியவர் களால் ஆராயத் தக்கதாகும்.
ஏனிந்த அவசரம்?
கொலிஜியம் என்ற முறையை மாற்றி - உயர்நீதி மன்ற - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு வேறு ஒரு புதிய நியமன முறை - நீதிபதிகளை நியமன செய்யும் கமிஷன் (Judicial  Appointment Commission)  மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அதாவது நாடாளுமன்றம் அதுபற்றிய சட்டம் இயற்றுவதற்கு முன்பே இது முடிக்கப்பட்டாக வேண்டும் என்பது போல இந்த அவசர நடவடிக்கைகளின் வேகம் தொனிக்கிறது.
சமூகநீதியை புறந்தள்ளும் இம்முயற்சியை - சமூகநீதிப் போராளிகள், அத்துணை அமைப்புகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
அவசரமாக தூதுக் குழுவை அனுப்புக!
தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு தூதுக் குழுவை அனுப்பி, இந்தப் பட்டியல் நியாயமற்ற பட்டியல் என்பதை மத்திய சட்ட அமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் முதலியோருக்கு விளக்கிச் சொல்லி, இதனை தடுத்து நிறுத்திட வேண்டும்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சமூக நீதிக்கான குரல் ஓங்கும் நிலையில், இப்படி ஒரு நிகழ்வு என்றால் அதை யாருக்கோ வந்தது என்று ஜனநாயகத்தில், கட்சித் தலைவர்கள் சும்மா வேடிக்கை பார்க்கலாமா?
தாமதிக்காமல் ஒரு தூதுக் குழுவினை உடனே டெல்லிக்கு அனுப்ப வேண்டும். மற்றவர்கள் நிலை எப்படியானாலும், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், அவரது எம்.பி.க்களை அனுப்பி, உடனே இதற்கான பரிகாரத்தைத் தேடிட முன் வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம். சமூகநீதிக்கான முக்கிய திராவிடர் இயக்கத் தலைவர் அவர்.
மூத்த வழக்குரைஞர் திரு. ஆர். காந்தி அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கோடானு கோடி ஒடுக்கப் பட்டவர்கள் நிச்சயம் துணை நிற்பார்கள். சுமூகமாக தீர வேண்டிய இப்பிரச்சினை தேவையற்ற சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டால், அது நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையைத் தூண்டி விட்டது போல்கூட ஆகக் கூடும்!
24ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
எனவே, சமூகநீதியில் நம்பிக்கையும், அக்கறையும் உள்ள அனைவரும் ஓர் அணியில் திரண்டு, ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன் வருவது அவசியம்; அவசரம்.
எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் இதுகுறித்து ஓர் கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஒத்தக் கருத்துவர்களையும் இணைத்து வரும் 24ஆம் தேதி வெள்ளியன்று நடத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக