திங்கள், 6 ஜனவரி, 2014

கோயிலை தீட்சிதர்களின் தனிச்சொத்தாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ! பார்பனர்களிடம் தோற்றுவிட்ட தமிழகம்

ஜெயலலிதா, தீட்சிதர்கள்
தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு.சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின் படி 2009 –ம் ஆண்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோயிலை, தீட்சிதப் பார்ப்பனர்களின் தனிச்சொத்தாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. பார்பனர்களிடம் தோற்றுவிட்ட தமிழகம்

இப்படி ஒரு அநீதி இழைக்கப்படவிருக்கிறது என்பதை நவம்பர் மாத இறுதியில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிய கணத்திலிருந்து நாங்கள் கூறிவந்திருக்கிறோம். மக்கள் தரப்பில் நின்று மக்கள் சொத்தைக் காப்பாற்ற வேண்டிய தமிழக அரசு தீட்சிதர்களின் அரசாகவே செயல்பட்டது. 2009-ல் திமுக ஆட்சியில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி  சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட போது, போயஸ் தோட்டத்துக்கே சென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்த தீட்சிதர்கள் அதன் பலனைப் பெற்று விட்டார்கள்.
தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு.
இவ்வழக்கில் வாதியான தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு என்பதையும், மூத்த வழக்குரைஞர்களை யாரையும் நியமிக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருவரைக் கூட டில்லிக்கு அனுப்பாமல் இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் வேலையை ஜெயலலிதா அரசே செய்கிறது என்று அம்பலப்படுத்தி, தில்லைக் கோயிலிலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தினோம். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளும் துவக்கம் முதலே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதையும், அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியசாமியை கண்டிக்காததையும் கூட ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.
தீட்சிதர்கள்
பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள் (உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் தரிசனம்).
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் சிவனடியார் ஆறுமுகசாமி, வி.எம்.சவுந்தரபாண்டியன் ஆகியோர் மூலம் இவ்வழக்கில் தலையிட்டிருந்த எங்களுடைய வழக்குரைஞர்களை சுமார் பதினைந்து நாட்கள் டில்லியிலேயே தங்கியிருந்து உழைத்தார்கள். மக்கள் மத்தியில் நிதி திரட்டி மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி வாதிட்டோம். இருந்த போதிலும், அரசுத் தரப்பே எதிர்தரப்புடன் கை கோர்த்துக் கொள்ளும் போது, நீதிமன்றமும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளும் போது வழக்கில் வெல்வது இயலாத காரியம்.
சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடக்கூடாது என்று தடை விதித்த தீட்சிதர்கள் கோயிலைக் கவர்ந்து கொண்டால், அதைவிட அவமானம் தமிழர்க்கு இல்லை” என்று நாங்கள் இயன்றவழியில் எல்லாம் எச்சரித்தோம். ஆனால், உலகத்தமிழர்களுக்காகவும், ஈழ விடுதலைக்காகவுமே உயிர் தரித்திருப்பதாக கூறிக்கொள்ளும் யாரும் இதற்காகப் போராடவில்லை. முக்கியமாக ஜெயலலிதா அரசை கண்டிக்கவில்லை. மவுனம் சாதித்தன் வாயிலாக “தீட்சிதர்கள், பாரதிய ஜனதா, சு.சாமி, சோ, ஜெயலலிதா கூட்டணி”க்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தவர்கள் இவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ்மக்களைக் கோருகிறோம்.
சுப்பிரமணியசாமி
அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியசாமியை நீதிமன்றம் கண்டிக்கவில்லை.
பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள். அன்று நால்வர் பாடிய தேவாரத்தை சிதம்பரம் கோயிலுக்குள் முடக்கி வைத்து அழிக்க முனைந்த தீட்சிதர்கள்தான் பத்தாண்டுகளுக்கு முன் திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையிலிருந்து அடித்து வீசினார்கள். அன்று நந்தனாரை எரித்துக் கொன்றது மட்டுமல்ல, 1935 -ம் ஆண்டுவரை நடராசர் கருவறைக்கு எதிரே இருந்த நந்தனார் சிலையை அகற்றியவர்களும் அவர்கள்தான். நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை மறித்து தீண்டாமைச் சுவர் எழுப்பிவைத்துக் கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள்தான்.
தீட்சிதர்கள் பக்தர்களை எப்படி நடத்தினார்கள் என்பது பக்தர்களுக்குத் தெரியும். தீட்சிதர்கள் எந்த சட்டத்தையும், எந்த பக்தரையும் மதித்ததில்லை. பக்தர்களிடம் பணம் பறிப்பது, சாமி நகைகளை களவாடியது, கள்ளக் கையெழுத்துப் போட்டு கோவில் சொத்தை விற்றது என்று தீட்சிதர்கள் செய்த அயோக்கியத்தனங்களைப் பற்றி சக தீட்சிதர்களே அரசுக்குப் புகார் கொடுத்ததன் விளைவாகத்தான் 1982-ல் எம்.ஜி.ஆர் அரசு நிர்வாக அதிகாரியை நியமித்தது. எம்.ஜி.ஆர் அரசு போட்ட ஆணையைத்தான் தற்போது ஜெயலலிதா அரசு குப்பையில் வீசியிருக்கிறது.
ஜெயா-மோடி
பாரதிய ஜனதா- ஜெயலலிதா இடையேயான கள்ள உறவு தமிழகத்தின் கோயில்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூடாரங்களாக மாற்றும்.
இது சிதம்பரம் கோயில் பிரச்சினை மட்டுமல்ல, எல்லாக் கோயில் சொத்துக்களையும் பார்ப்பனக் கும்பல் விழுங்குவதற்கான சதியின் தொடக்கம் என்பதை நாங்கள் பலமுறை எச்சரித்து விட்டோம். தற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் ஜெ அரசு இதையும் சாதித்துக் கொடுக்கும். பாரதிய ஜனதா- ஜெயலலிதா இடையேயான கள்ள உறவு தமிழகத்தின் கோயில்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூடாரங்களாக மாற்றும்.
இப்படி ஒரு அநீதியான தீர்ப்பு வருமென்பதை நாங்கள் எதிர்பார்த்திருப்பதால் இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. “காடு திருத்தி கழனியாக்கிய உழவனுக்கு நிலத்தை சொந்தமாக்க முடியாது” என்று சொல்லும் அரசியல் சட்டமும் நீதிமன்றமும்தான், “மணியாட்டும் அர்ச்சகனுக்கு கோயில் சொந்தம்” என்று தீர்ப்பளித்திருக்கிறது.  “குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியைத் தெரிவு செய்யலாம்” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்த  நீதிபதிகள்தான், கோயில் நகைகளைத் திருடிய தீட்சிதர்களுக்கு கோயிலையை சொந்தமாக்கித் தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று வெளிப்படையாகவே சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டியது மட்டும்தான் பாக்கியிருக்கிறது.
சுயநிதிக் கல்விக் கொள்ளையர்களுக்கும், அணு உலைக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கும் ஆதரவாக அடுக்கடுக்காகத் தீர்ப்பளித்து வரும் உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதில் வியப்பில்லை. உச்ச நீதிமன்றம் என்பது நீதிக்காக நாம் போராடும் பல்வேறு களங்களில் ஒன்று; அவ்வளவுதான். அது ஒன்றும் நீதி தேவதையின் உறைவிடம் அல்ல. உச்சுக்குடுமி மன்றம் என்று ஏற்கெனவே அறியப்பட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் தீட்சிதனைப் போலவே முன்குடுமி போட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தமிழக அரசு தனிச்சட்டமொன்று இயற்றி சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் சட்டமன்றத்தில் “வரலாற்று சிறப்பு மிக்க ஒருமனதான தீர்மானம்” இயற்றும் ஜெயலலிதா அரசு, இதற்கு ஒரு மசோதா கொண்டு வந்து ஒருமனதாக அதை ந்நிறைவேற்றி சட்டமாக்க முடியும். அவ்வாறு சட்டமியற்ற வேண்டும் என்பதற்காகப் போராடுவோம். அது மட்டுமல்ல, பார்ப்பன சாதிவெறி பிடித்த தீட்சிதர்கள், தமிழ் மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வண்ணம் கோயிலின் தெற்கு வாயிலில் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும். கோயிலில் இருந்து திருட்டுத்தனமாக அகற்றிய நந்தனார் சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்பதற்காகவும் போராடுவோம்.
வென்று விட்டோம் என்று தீட்சிதப் பார்ப்பனக் கும்பல் இறுமாப்பு கொள்ள வேண்டாம். பார்ப்பனக் கும்பலுக்கு பாரதிய ஜனதா என்றால், தமிழ் மக்களுக்கு நாங்கள்! இது வரலாற்றுப் பகை என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்துவோம். பகை முடிப்போம்!
இவண்
 சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர். வினவு.கம 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக