செவ்வாய், 7 ஜனவரி, 2014

தேவ்யானியின் மனுவுக்கு பிரீத் பராரா எதிர்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இந்திய துணை தூதரக அதிகாரியாக இருந்த தேவ்யானி கோப்ரகடே விசா முறைகேடு செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.  அவர் தன்னிடம் பணிபுரிந்த சங்கீதா ரிச்சர்டு என்ற பணிப்பெண்ணுக்கு சம்பளம் அளித்தது தொடர்பாக தவறான தகவல்களை தெரிவித்ததால் அது தொடர்பாக மற்றொரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த விவகாரத்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டு உள்ளது.  இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் வரை அமெரிக்காவுடனான நட்புறவு வழக்கம்போல் இருக்காது என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், தேவ்யானியின் வக்கீல் டேனியல் அர்சாக் நியூயார்க் நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.அதில், அமெரிக்க அரசு முதல் கட்ட விசாரணை மேற்கொள்ளும் வரை விசா முறைகேடு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்போது, இந்த வழக்கு ஜனவரி 13ந்தேதி வரை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.  வழக்கை 30 நாட்கள் நீட்டித்து அதாவது பிப்ரவரி 12ந்தேதிக்கு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடும்படி அமெரிக்க மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி சாரா நெட்பர்னிடம் அவர் கேட்டு கொண்டு இருந்தார்.
ஆனால், 30 நாட்கள் கால அவகாசம் என்பதற்கு அவசியமில்லை என்று இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க வக்கீலான பிரீத் பராரா நியூயார்க் நகர நீதிபதியிடம் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.  அர்சாக்கின் மனுவை தொடர்ந்து, பராரா நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்க அரசு கால அவகாசம் எதுவும் கோரவில்லை.  ஜனவரி 13ந்தேதிக்கு முதற்கட்ட விசாரணை தள்ளி வைக்கப்பட்டதற்கு காரணம் தேவ்யானி மற்றும் தனது அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று வரும் விவாதங்களுக்காகவே ஆகும்.
எனவே, மேலும் 30 நாட்கள் நீட்டிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டியதில்லை என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதிக்கு கடிதத்தில் கூறியுள்ளார்.  இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பது தொடர்பான மனு மீதான விவாதங்கள் அமெரிக்க அரசு விசாரணை நடத்திய பின்னரும் தொடரும் என்று பிரீத் பராரா குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக