செவ்வாய், 7 ஜனவரி, 2014

கலைஞர்: சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினை - அரசு முடிவுக்கு எதிராக தீர்ப்பு வர காரணம் என்ன?:

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘'சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் நேற்றையதினம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்தக் கோவில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துப் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினை நீண்ட நெடுங்காலமாகப் பேசப்பட்டு கடைசியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2–2–2009 அன்று அந்தக் கோவில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்த்து, சிதம்பரம் தீட்சிதர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அதிலே அவர்கள் வெற்றி பெறமுடியவில்லை. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்டார்கள். அந்த வழக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்த போது சுப்பிரமணியசாமி திராவிட இயக்கத்தைப் பற்றி தேவையில்லாமல் மனம் போன போக்கில் தெரிவித்த கருத்துகளுக்கு அப்போதே திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி தக்க பதில் அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராகவும், இந்து அறநிலையத் துறை அமைச்சராக ஆர்.எம்.வீரப்பனும் இருந்த போதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் எடுக்கப்பட்ட
நடவடிக்கையை எதிர்த்து அப்போதே தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள்.

"கோயிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட தாலேயே கோயிலுக்குச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்" என்று அரசுத் தரப்பில்வாதிடப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில், 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பில், "கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மதவழக்கமோ அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.
எனவே இந்த வழக்கில் மதம் தொடர்பான சட்டத்தின்படி பொது தீட்சிதர்கள் பாதுகாப்பு கோர முடியாது.

கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றால், அந்தக் கோயிலுக்கு செயல்
அதிகாரியை நியமிக்க இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரம்
உள்ளது.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஒரு வார காலத்துக்குள் கோயில் செயல்
அதிகாரியை நியமிக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி
கூறியிருந்தார்.

தீட்சிதர்கள் சார்பில் 4–2–2009 அன்று உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு
செய்யப்பட்டு, நீதிபதி கே.ரவிராஜ பாண்டியன், நீதிபதி டி.ராஜா ஆகியோர் முன்னிலையில்
விசாரணை நடைபெற்று, நீதிபதிகள் 15–9–2009 அன்று பிறப்பித்த உத்தரவில், "பொது
தீட்சிதர்களோ அல்லது அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைக் கட்டவில்லை
என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அரசியல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு
கோர முடியாது.

இந்த நிலையில் செயல் அதிகாரி நியமனத்தில் தலையிட்டால், அது பாரம்பரியம் மிக்க
கோயிலைக் காக்கும் கடமையிலிருந்து நீதிமன்றம் தவறியது போலாகும். அவ்வாறு செய்தால்,
பழம்பெருமை வாய்ந்த கோயில் அழிவதோடு, பொது தீட்சிதர்களின் வருவாய் ஆதாரமும்
பாதிக்கும்" என்று கூறி மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார்கள்.

இந்த இரண்டு தீர்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்
முறையீடு செய்து, அந்த வழக்கில் தான் தற்போது தீட்சிதர்களுக்கு ஆதரவாக உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்த போதே, உடனடியாக தமிழக அரசு வீண் கால தாமதம் செய்யாமல், மூத்த
வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
என்ற கோரிக்கையினை தி.மு. கழகத்தின் சார்பில் நானும், திராவிடர் கழகத்தின் சார்பில்
கி.வீரமணியும் அறிக்கை விடுத்தோம்.

இந்த உத்தரவு ஏதோ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், நான்
முதல்–அமைச்சராக இருந்த போது பிறப்பிக்கப்பட்ட ஆணை என்பதால், அதன் காரணமாக தற்போதைய
தமிழக அரசு அக்கறை இல்லாமல் இருந்து விடக் கூடாது; எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக
இருந்த போதே 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான், இடையிலே தீட்சிதர்கள்
இடைக் காலத் தடை பெற்ற காரணத்தால் நடைமுறைக்கு வராமல் இருந்து 2009ஆம் ஆண்டு கழக
ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது; அதற்கு தீட்சிதர்கள் இடையூறு விளைவிக்க
எண்ணுகிறார்கள்; அதற்கு இன்றைய தமிழக அரசு துணை போய் விடக் கூடாது என்பது தான்
தமிழர்கள் அனைவரது விருப்பம் என்று நான் 6 –12–2013 அன்றே ஒரு நீண்ட அறிக்கை
விடுத்திருந்தேன்.

ஆனால் அரசு "என்ன காரணத்தாலோ" இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டாமல்
அலட்சியப்படுத்தியதன் விளைவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கனவே எடுத்த
முடிவுக்கும், அந்த முடிவை நடைமுறைப் படுத்தியதற்கும் எதிராகத் தீர்ப்பு நேற்று
வந்துள்ளது நான் அரசை நேரடியாகவே குற்றஞ்சாட்டுகிறேன'' என்றூகூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக