வியாழன், 2 ஜனவரி, 2014

பாழாய்ப்போன அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது- கேஜ்ரிவால்


டெல்லி: குடிநீர் வசதி இல்லாதது, மோசமான சாலைகள், பற்றாக்குறை மின் விநியோகம் என அனைத்து அவலங்களுக்குமே இந்த பாழாய்ப்போன அரசியல்தான் காரணம் என்று ஆவேசமாக கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். டெல்லி சட்டசபையில் கேஜ்ரிவால் அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரியது. அதற்கு முன்பு நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் கேஜ்ரிவால் பேசினார். பாழாய்ப்போன அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது- கேஜ்ரிவால் ஆவேசம் கேஜ்ரிவால் பேச்சிலிருந்து சில பகுதிகள்.. அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது. ஊழலில் மூழ்கிப் போய்க் கிடக்கிறது ஒட்டுமொத்த தேசமும். ஊழலை ஒழிக்கவே அரசியல் கட்சியைத் தொடங்கினோம் மோசமான குடிநீர் விநியோகம், மின்விநியோகம், மோசமான சாலைகளுக்கு பாழாய்ப்போன அரசியலே காரணம். ஊழல்வாதிகளை ஒழிப்பதில் உறுதியுடன் இருக்கிறோம். உண்மை என்றும் தோற்காது. முன்பு எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் தற்போது நம்புகிறேன். ஊழல்வாதிகளை ஒழி்ப்பதில் உறுதியுடன் இருக்கிறோம். ஊழலை ஒழிக்காமல் ஓய மாட்டோம். நடுத்தர மக்கள்தான் ஆம் ஆத்மி. சாதாரண தெருவோர வியாபாரிதான் ஆம் ஆ்மி. ஊழலை ஒழிக்க விரும்பும் யாருமே ஆம் ஆத்மிதான். ஊழலுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருமே மக்கள் விரோதிகள்தான். நாங்கள் கட்சி ஆரம்பிப்போம் என்று ஒருபோதும் கற்பனை கூட செய்ததில்லை. நாங்கள் ஏன் தேர்தலை சந்தித்தோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்த அரசைக் காக்க நாங்கள் இன்று இங்கு நிற்கவில்லை. இந்த நாடு ஊழலில் மூழ்கிப் போய்க் கிடக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆம் ஆத்மியை ஆரம்பித்தபோது நாட்டின் அனைத்து முறைகளையும் மாற்றுவோம், தூய்மைப்படுத்துவோம் என்று கூறினோம். அப்போது அனைவரும் எங்களைப் பார்த்து, தைரியம் இருந்தால் தேர்தலில் நில்லுங்கள் என்றனர். கையில் காசு இல்லாமல் எப்படி தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்று கிண்டல் செய்தனர். இன்று நாங்கள் வென்றுள்ளோம். டிசம்பர் 4ம் தேதி அற்புதத்தை மக்கள் நிகழ்த்தி விட்டனர். ஆம் ஆத்மி வென்று விட்டது. சாமானிய மக்களின் வெற்றி இது. விஐபி கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும். 2வது முக்கியப் பிரச்சினை லோக்பால் மசோதா. தற்போது டெல்லியில் உள்ள லோக் ஆயுக்தா, மிகவும் பலவீனமாக உள்ளது. நாங்கள் ஊழலுக்கு எதிரான வலுவான சட்டத்தையே விரும்புகிறோம். குறித்த காலத்திற்குள் ஒவ்வொரு அதிகாரியும் தனது கடமையைச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் புதிய சட்டத்தின்படி தண்டனையை எதிர்நோக்க வேண்டும். மக்கள் விரும்புவதை இதுவரை இருந்த அரசுகள் செய்ததில்லை. தாங்கள் செலுத்தும் வரிப்பணத்தை தங்களது பகுதியின் வளத்திற்காக செலவிட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அது எப்படி செலவிடப்பட வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அதுதான் உண்மையான சுயராஜ்ஜியம். மக்களின் ஆட்சி. அதைத்தான் நாங்கள் டெல்லியில் செய்ய விரும்புகிறோம். டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும். அதை அனைத்து கட்சிகளுமே வலியுறுத்தி வருகின்றன. குடிசைகளில் வாழ்வோரின் தரத்தை எப்படி உயர்த்துவது என்பதற்கு நாம் தீர்வை கண்டுபிடித்தாக வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை நாங்கள் எதிர்க்கிறோம். பாஜகவும் அதை எதிர்க்கிறது. அதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். வர்த்தகர்களைக் காக்க வேண்டும். டெல்லியின் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். அதன் விவசாயிகள் காக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் நன்கொடை பெறுவதை தடை செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தரமான, உயரிய சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார் கேஜ்ரிவால்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக