செவ்வாய், 21 ஜனவரி, 2014

தொண்டி கடற்கரை பகுதியில் தோண்ட தோண்ட சிலைகள் தொல்லியல் துறையினர் ஆய்வு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper



தொண்டி:ராமநாதபுரம் தொண்டி கடற்கரை பகுதியில் தோண்ட தோண்ட கல், வெண்கல, வெள்ளியிலான சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தொண்டி நம்புதாளை கடற்கரை பகுதியில் ஏராளமான சிலைகள் கிடப்பதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ இந்திரா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். குவியல் குவியலாக கடற்கரையை ஒட்டி மண்ணில் பாதி புதைந்த நிலையில் சிலைகள் கிடந்தன. இவற்றை போலீசார் ஒவ்வொன்றாக மீட்டு வருகின்றனர். இதில் மூன்றேகால் அடி உயரமுள்ள பெரிய காளி கற்சிலை முதலில் மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கற்சிலைகள், 50 முதல் 60 வெண்கல, வெள்ளி சிலைகள் இப்பகுதியில் புதைந்துள்ளன. அவற்றையும் போலீசார் மீட்டனர்.


கால் அடி முதல் ஓரடி உயரம் வரை இந்த சிலைகள் உள்ளன. மொத்தம் 300க்கும் அதிக சிலைகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கணக்கிட்டுள்ளனர். தொல்லியல் துறையினர் மற்றும் அருங்காட்சியக அதிகாரிகளுக்கு இதுகுறித்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கடலில் கிடந்து அவ்வப்போது சிலைகள் கரை ஓதுங்குவது வழக்கம். அப்படி இருந்தால் ஓரிரு சிலைகளே கரைக்கு வரும். ஆனால் 300க்கும் அதிக சிலைகள் ஒரே இடத்தில் கிடைத்தது அதிகாரிகளை வியக்க வைத்துள்ளது.

வெளிமாநிலத்தில் இருந்து குறிசொல்வோர், மந்திரவாதிகள் கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டி, மண்ணுக்குள் போட்டு புதைத்து சென்றார்களா, கடற்கரை வழியாக கடத்தி செல்ல யாராவது புதைத்திருக்கலாமா என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த சிலைகளின் காலம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.சிலைகளை பாதுகாக்க பூப்பதனிடுதல் திருவாடானை அருகே ஆனந்தூரில் உள்ள திருமேனிநாத சுவாமி கோயில் சுற்றுச்சுவர் கட்டுமானம் 2004 மே 28ல் நடந்தது. அப்போது கோயிலை சுற்றி பள்ளம் தோண்டியபோது நடராஜர் உள்பட 18 கிலோ பஞ்சலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 1328களில் டெல்லியில் இருந்து முகலாயர்கள் படையெடுப்பு நடந்த காலத்தில், பாதுகாப்பு கருதி இந்த சிலைகள் பூப்பதனிடுதல் முறையில் புதைத்து வைத்திருக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதேபோல் தேவிபட்டினம் பகுதியிலும் சமீபத்தில் பூப்பதனிடுதலில் வைத்திருந்த ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டன. தேவிபட்டினம் அருகே குருக்கள் கண்ணன் என்பவர் கோயில் எதிரேயுள்ள கடற்கரை அருகே வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது ஏராளமான சிலைகள் கிடைத்தன. இதனால் இன்னும் பல இடங்களிலும் சிலைகள் புதையுண்டு கிடக்கலாம் என தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.
 tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக