சனி, 18 ஜனவரி, 2014

ஆம் ஆத்மி விஜயகாந்துடன் கூட்டணியா ? சந்தனம் சேறாகுமா ?

சென்னை: லோக்சபா தேர்தலில் புதிய திருப்பமாக தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. உளுந்தூர்பேட்டையில் பிப்ரவரி 2-ந் தேதி தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில்தான் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கையில், என் மனதுக்குள் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.. யாரும் எதிர்பார்க்காத வியூகம் அது.. என்று பூடகமாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசி வருகிறார். இந்நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று திமுக அறிவித்த கையோடு ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது.

இதனிடையே தேமுதிகவின் மாநில மாநாடுக்கான முழக்கமாக "ஊழலை ஒழிப்போம்" என்ற வாசகம் பிரதானமாக இடம் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தியிருப்பதுடன் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
விஜயகாந்த் கூறிவருவது போல யாரும் எதிர்பார்க்காத வகையில், ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் பெரும்பாலானோர் கவனத்தை ஈர்க்க முடியும், பெருவாரியான தொகுதிகளில் போட்டியிட முடியும் என்றும் தேமுதிக கருதுவதாக தெரிகிறது.
மேலும் ஊழல் கட்சிகளுடனும், மதவாத கட்சிகளுடனும் தேமுதிக எப்போதும் கூட்டணி வைக்காது என்ற புதிய முழக்கத்தை அக்கட்சி முன்வைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
விஜயகாந்த் அமைக்க உள்ள இக்கூட்டணிக்கு தமிழ் திரைப்பட துறையின் முக்கிய நடிகர் ஒருவரும் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக