ஞாயிறு, 19 ஜனவரி, 2014

ஆப்கானிஸ்தானில் முதல் பெண் போலீஸ் உயர் அதிகாரி நியமனம்

காபூல்: ஆப்கானிஸ்தானில், பெண் சுதந்திரத்திற்கு எதிராக, பயங்கரவாதிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளாகவே, பெண் கல்வி மற்றும் அவர்களின் முன்னேற்றத்தில் பயங்கரவாதிகள், பழமைவாதிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இங்கு, தாலிபான்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், பெண்கள் சுதந்திரமாக இருப்பதில், இன்னமும் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு முதல் முறையாக, பெண் ஒருவரை, போலீஸ் உயர் அதிகாரியாக நியமித்துள்ளது. கர்னல், ஜமீலா பயாஜ், 50 என்ற பெண் போலீஸ் அதிகாரி, நாட்டின் தலைநகரான காபூலில் உள்ள தலைமை காவல் நிலையத்தில் உயர் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

பெண் போலீஸ் அதிகாரியான ஜமீலா, தலைநகரில் முக்கிய பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளது, ஆப்கான் மட்டுமின்றி, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கான் அரசின் இந்த செயல், நாட்டில் பெண் சுதந்திரம் மற்றும் அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என, உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தான் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், ஒரு பெண் என்ற முறையில், பல தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளதாக ஜமீலா கூறியுள்ளார். தனக்கு உயர் பதவி கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ள ஜமீலா, நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கு முன் உதாரணமாக இருந்து பாடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
இவர் திருமணம் ஆகி, ஐந்து குழந்தைகளுக்குத் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில், பெண் கல்விக்கு ஆதரவாக செயல்பட்ட சிறுமி மலாலா மீது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த தாலிபான் பயங்கரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
அத்தகைய கொடூர தாலிபான்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள, ஆப்கானிஸ்தானில் பெண் போலீஸ் உயர் அதிகாரியாக பணியாற்றுவது, சவால் நிறைந்ததாக இருந்தாலும், அதை மகிழ்ச்சியுடன் ஏற்பதாக ஜமீலா தெரிவித்துள்ளார்.

Afghanistan’s first-ever female ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக