சனி, 11 ஜனவரி, 2014

தேவயானி வீட்டில் மிகவும் சிரமப்பட்டேன்: பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானியின் இல்லத்தில் வேலை பார்த்தபோது மிகவும் சிரமத்துக்குள்ளானதாக அவரது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு குறை கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சங்கீதா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வந்தார். இந்நிலையில், இது பற்றி முதல் முறையாக அவர் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எனது குடும்பத்துக்கு பணம் அனுப்புவதற்காக சில ஆண்டுகள் வீட்டு வேலை பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் அமெரிக்காவுக்கு வர முடிவு செய்தேன்.
ஆனால், இங்கு நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நான் நினைக்கவில்லை. அதாவது, தேவயானியின் வீட்டில் நான் ஏராளமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இதனால் எனக்கு தூங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ, என் பணிகளைக் கவனிப்பதற்கோ கூட நேரம் இருந்ததில்லை.

தேவயானியின் வீட்டில் பணியாற்றியபோது அவர்கள் என்னை நடத்திய விதம் காரணமாக, இந்தியாவுக்குத் திரும்பிவிட முயன்றேன். ஆனால் நான் இந்தியா திரும்புவதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை.
நான் பட்ட வேதனையைப் போலவே அமெரிக்காவில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கும் மற்ற வீட்டு வேலைக்காரர்களுக்கும் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். "உங்களுக்கு என்று உரிமைகள் உண்டு. உங்களைச் சுரண்ட யாரையும் அனுமதிக்காதீர்கள்' என்பதுதான் அது என்று அறிக்கையில் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அவருக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வாதாடி வரும் "சேஃப் ஹாரிஸன்' என்ற அமைப்பு இந்த அறிக்கையை சங்கீதா சார்பில் வெளியிட்டது. துணைத் தூதர் தேவயானி மீதான குற்றப்பதிவை அந்த அமைப்பு வரவேற்றுள்ளது.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக