வெள்ளி, 17 ஜனவரி, 2014

ராகுலை எதிர்ப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் ! சல்மான் குர்ஷித் ஜால்ரா

பிந்திய செய்தி :
வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுல் நியமிக்கப்படவில்லை. மாறாக, அவர் பிரசாரத்தை வழிநடத்துவார் என, காங்., உயர்மட்ட ஆலோசனைக் குழுவில், நேற்று முடிவெடுக்கப்பட்டது.
புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கட்சியின் துணைத் தலைவர் ராகுலை ஏற்க மறுப்பவர்கள், கட்சியில் இருந்து வெளியேறலாம் என மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்ஜித் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிக்கலாமா என்பது குறித்தும், லோக்சபா தேர்தல் குறித்தும் ஆலோசனை செய்வதற்காக காங்கிரசின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மூத்த தலைவர்கள் அனைவரும் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ராகுலை புகழ்ந்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் யாருக்காவது ஏதேனும் பிரச்னை இருந்தால் அவர் தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம்;
தலைமுறை மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; ராகுலுடன் ஒத்துப்போக முடியாதவர்கள் கட்சியில் இருக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஆம் ஆத்மி டிரைவர் :


டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பற்றி கருத்து தெரிவித்த குர்ஷித், ஆம் ஆத்மி டிரைவர் போன்றது; அதற்கு எப்போது வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று தெரியவில்லை; போக்குவரத்து விதிகளும் தெரியவில்லை; அவர்களுக்கு எவ்வித திட்டமிடுதலும் கிடையாது என தெரிவித்துள்ளார்.


தலைவர்கள் கருத்து :

கூட்டத்தில் பேசிய ராஜீவ் சுக்லா, ராகுல் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், ராகுல் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை எனவும், அவர் எந்த பொறுப்கபையும் ஏற்பார் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக பேசிய சிந்தியா, நாட்டிற்கு இப்போது தேவை ராகுலைப் போன்ற இளமையும் உறுதி தன்மையும் நிறைந்த தலைமை தான் எனவும், கட்சி மட்டுமல்ல அவர் தலைமை பதவிக்கு வர வேண்டும் என நாடே விரும்புகிறது; பிரதமருக்கான அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் அமைச்சர் பதவியில் இருக்க விரும்பவில்லை எனவும், கட்சிக்காக பணியாற்றவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். சோனியா, ராகுல், பிரதமர் ஆகியோரின் விருப்பப்படியே அமைச்சராக இருப்பதாகவும், கட்சி என்ன கூறுகிறதோ அதன்படி நடக்க உள்ளதாகவும் சிந்தியா தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார் என்ற பேச்சும் கட்சிக்குள் நிலவுகிறது. இதுகுறித்து கட்சி தலைவர் சோனியாவுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இறுதி முடிவை சோனியாவே எடுக்க உள்ளார். ஆனால் பிரசாரத்திற்கு மட்டும் ராகுல் தலைமை ஏற்பார் என கூறப்படுகிறது.  தினமலர்.கம 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக