சனி, 25 ஜனவரி, 2014

சொட்டு நீரில் 3 ஆயிரம் ஹெக்டேரில் சாமந்தி அமோக விளைச்சல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஓமலூர்:காடையாம்பட்டி ஒன்றியத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில், சொட்டு நீர் பாசனம் மூலம் 3 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்ட பகுதி. இப்பகுதியில் சாமந்தி மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான நடவு பணிகள் நடைபெற்றன. டிசம்பர் மாதம் முதல் சாமந்தி பூ பூக்கத் தொடங்கி தற்போது சீசன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சாமந்தி, அதிக அளவில் மஞ்சள் நிறம் கொண்ட சாந்தினி, வெள்ளை நிறம் கொண்ட பூர்ணிமா, கோழிக் கொண்டை, மரிக்கொழுந்து என பல்வேறு வகை மலர்கள் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பூத்துள்ளன.


இதனால் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் 2 பக்கமும் மஞ்சள், சிவப்பு, வெள்ளை என வண்ணங்களால் நிரம்பிய மலர் வனம் விவசாயிகளின் கடும் உழைப்புக்கு சான்றாக காட்சி தருகிறது. காடையாம்பட்டி அருகேயுள்ள வேப்பிலை ஊராட்சி செக்காரப்பட்டி பகுதியில் போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தால் கிணறுகளில் போதிய நீர் இல்லை. இப்பகுதியை சேர்ந்த விவசாயி சித்தப்பன் தன்னுடைய சாமந்தி பூந்தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனத்தை பயன்படுத்தியுள்ளார்.

விவசாயி சித்தப்பன் கூறுகையில், வழக்கமான முறைப்படி விவசாயத்தில் ஈடுபட்டால் 2 சென்ட் பரப்பிலான நிலத்துக்கு மட்டும்தான் என் கிணற்று நீரை பயன்படுத்த முடியும். சொட்டு நீர்ப் பாசனத்தால் 10 சென்ட் பரப்பில் சாமந்தி சாகுபடி செய்ய முடிந்துள்ளது என்றார். காடையாம்பட்டியில் இருந்து கோவை, பெங்களூர், திருப்பூர், சேலம் பகுதிகளுக்கு தினமும் பூக்கள்  அனுப்பப்பட்டு வருகின்றன. நல்ல மணம் தரும் பூக்களை உற்பத்தி செய்த போதிலும், தங்களின் வாழ்க்கை முறை உதிர்ந்த பூக்களை போலவே உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். விளைச்சல் அதிகரித்துள்ளதால் சாமந்தி பூக்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. சென்ட் தொழிற்சாலை அமைத் தால் உரிய விலை கிடைப்பதுடன், எங்களது வாழ்வும் செழிக்கும் என்கின்றனர் சாமந்தி விவசாயிகள். - .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக