வியாழன், 2 ஜனவரி, 2014

வீடு இல்லாதவர்களுக்காக 2 நாட்களில் 45 தற்காலிக ஷெல்டர்களை அமைக்கும் ஆம் ஆத்மி

டெல்லி: டெல்லியில் வீடுகள் இல்லாமல், பாலங்கள், திறந்தவெளியிடங்களில் கடும் குளிர், பனி, மழை, வெயிலில் வாடி வசித்து வரும் மக்களின் நலனுக்காக இரண்டே நாட்களில் 45 தற்காலிக ஷெல்டர்களை கட்டவுள்ளது ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான திட்டங்களை அறிவித்து வரும் ஆம் ஆத்மி கட்சி தற்போது வீடு இல்லாதவர்களுக்காக புதிய தற்காலிக ஷெல்டர்களை அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இந்த குடியிருப்புகளை 48 மணி நேரத்தில் அதாவது இரண்டே நாட்களில் உருவாக்கித் தரத் திட்டமிட்டுள்ளது ஆம் ஆத்மி. பாலங்களுக்குக் கீழேயும், திறந்தவெளிப் பகுதிகளிலும் மழை, வெயில், பனியில் வாடி வசித்து வரும் மக்களுக்காக இந்த ஷெல்டர்கள் அமைக்கப்படும். டெல்லியில் வீடு இல்லாதவர்களுக்காக 2 நாட்களில் 45 தற்காலிக ஷெல்டர்களை அமைக்கும் ஆம் ஆத்மி
ஏற்கனவே டெல்லியில் இரவு நேர ஷெல்டர்கள் உள்ளன. ஆனால் அங்கு பெரும்பாலானோர் தங்குவதில்லை. காரணம், அவற்றில் குளிரைத் தாங்கக் கூடிய வசதி இல்லை. இந்த ஷெல்டர்களை அமைச்சர்கள் மனீஷ் சிசோடியா, ராக்கி பிர்லா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வைத் தொடர்ந்து மக்களின் விருப்பத்திற்கேற்ற வகையில், போர்டா கேபின் அடிப்படையிலான ஷெல்டர்களை அமைத்துத் தர ஆம் ஆத்மி தீர்மானித்துள்ளதாம். இதை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவி்த்துள்ளார். மேலும் இரவு நேர ஷெல்டர்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தாசில்தார்கள் இரவு நேரங்களில் ஆய்வு நடத்தவும், அவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து வருமாறும் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தற்போது அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர ஷெல்டர்கள், பிளாஸ்டிக்கால் ஆன குடில்கள் போன்றவை. இவை குளிர் தாங்க முடியாதவை. எனவேதான் இவற்றுக்குப் பதில் நவீன முறையிலான போர்ட்டா கேபின் ஷெல்டர்களை அமைக்க கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 4ம் தேதிக்குள் இந்த ஷெல்டர்கள் தயாராகி விடும் என்றும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக