வெள்ளி, 17 ஜனவரி, 2014

சோ: 1991-1996 அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது ! .

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி பதிலளித்த சோ, “ஏற்கனவே 11 வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். அதுபோல இந்த வழக்கிலும் அவர் விடுவிக்கப்படுவார்” என்று சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :- 14.1.2002 அன்று சென்னையில் ‘துக்ளக்’ ஆண்டு விழா நிகழ்ச்சியில், என் நண்பர் சோ ராமசாமி , ‘‘இப்போது டான்சி உட்பட ஐந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
 விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்கு என்றும் கூறமாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றம் சாட்டியதில் எந்த தவறும் இல்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவ்வளவு தான்’’ என்று நண்பர் சோ  பேசியதை, இப்போது அவருக்கும், அவரது வாசகர்களுக்கும் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ஜெயலலிதா ஊழல் குற்றம் புரிந்தவர் என்றும், அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி என்றும் சாடிய அதே நண்பர் சோ ராமசாமிதான், இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கி, அ.தி.மு.க. ஆட்சியைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ‘‘எண்ணங்கள் குதிரைகளானால், எண்ணிய நேரத்தில் காத தூரம் பறக்கலாம்’’ என்பது பழமொழியல்லவா?

கேள்வி :- சோ ராமசாமி பேசும்போது, “சொத்துக் குவிப்பு வழக்கில், யார் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும், யார் நீதிபதியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் தி.மு.க. கவலைப்படுகிறது” என்று அப்படியே மாற்றிச் சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :- சோ ராமசாமி ஒரு பத்திரிகை ஆசிரியர். நீண்ட பல நாட்களாக அந்தப் பத்திரிகையை நடத்தி வருகிறார். அவர் பேசியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை அங்கே வந்தவர்களும், அவர் பேச்சைப் படித்தவர் களும் நன்றாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினருக்கு எதிராக வாதாட வேண்டிய பொறுப்பில் இருந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங், ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாக இருந்தார்.
இந்த வழக்கறிஞர் தான் அரசு வழக்கறிஞராக, நீடிக்க வேண்டுமென்று உச்சநீதி மன்றம் வரை சென்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர்தான் வழக்காடினர். தனக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞராக பவானி சிங் அவர்களே இந்த வழக்கில் தொடர வேண்டுமென்று ஜெயலலிதா உச்சநீதி மன்றத்தில் வைத்த நீதிமன்றத் துறை இதுவரை கண்டும் கேட்டுமிராத விநோதமான கோரிக்கை யோடு மற்றொரு விசித்திரமான கோரிக்கையையும் வைத்திருந்தார்.
 அதுதான் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்ற பிறகும், தொடர்ந்து அவரே இந்த வழக்கினை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையாகும். ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா மீது ஒரு சந்தேகம் கலந்த சர்ச்சை ஏற்பட்டு, அதனால், அவரே தொடர்ந்து நீதிபதியாக நீடிக்க விரும்பாத காரணத் தால், தற்போது இந்த வழக்கினை நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா விசாரித்து வருகிறார்.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்தான் தங்களுக்கு எதிராக வாதாடும் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும்; ஒரு குறிப்பிட்ட நீதிபதிதான் ஓய்வு பெற்ற பிறகும் அந்த வழக்கினை விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததைப் பார்த்து வழக்கறிஞர்கள் எல்லாம் சிரித்தார்கள்.

நீதிபதியை மாற்ற வேண்டுமென்று ஜெயலலிதா கேட்டது இது முதல் முறை அல்ல. “கொடநாடு” எஸ்டேட் வழக்கு ஒன்று 2008ஆம் ஆண்டு நடைபெற்றபோதே, நீதிபதிகள் பற்றி இவர்கள் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிட்ட போது, “நீதிபதியை நிர்ணயம் செய்வது என்பது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட தாகும்” என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார்.
அத்துடன் விட்டார்களா என்ன? அந்த ஆணையை எதிர்த்து, உச்சநீதி மன்றத்திற்கு கொடநாடு எஸ்டேட் மேலாளர் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்குதான் 4-4-2008 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் முன்பு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கொடநாடு எஸ்டேட் மேலாள ருடைய கோரிக்கை நியாயம் அற்றது என்றும், இதுபோன்ற வழக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் கூறினார்.


மேலும், உச்சநீதிமன்ற நீதிபதி, கொடநாடு எஸ்டேட் வழக்கறிஞரைப் பார்த்து, “உங்க ளுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு எந்த நீதிபதி வேண்டுமென்று வேட்டை ஆடுகிறீர்களா? உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட நீதிபதிதான் உங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோருவதற்கு உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது” என்றும் சொல்லியிருக் கிறார்.

இதுதான் ஜெயலலிதாவின் இலட்சணம். இதைத்தான் சோ ராமசாமி பாராட்டி, இந்த வழக்கிலும் அவர் விடுவிக்கப்படுவார் என்று பேசியிருக்கிறார். மோடிதான் பிரதமர் ஆவார் என்று சோ ராமசாமி சொன்ன காரணத்தால்தான், திருமணப் பத்திரிகை கொடுக்கக்கூட இவருக்கு முதலமைச்சர் வீட்டிலே அனுமதி தரப்படாமல், தலைமைச் செயலகத்திற்கு வந்து அழைப்பிதழ் கொடுத்தார். அதுமாத்திரமல்ல; சென்னை யிலே இருந்தும்கூட, முதலமைச்சர் அந்தத் திருமணத்திற்குச் செல்லாமல் புறக்கணித்தார்.
இந்தக் காரணத்தால்தான், சோ ராமசாமி வேறு வழியின்றி அம்மையார் புராணத்தை மீண்டும் பாடத் தொடங்கி யிருக்கிறார். இவர் என்ன பாட்டு பாடினாலும், “அம்மா” வீட்டில் மூடிய கதவு மீண்டும் திறக்குமா என்பது சந்தேகமே! nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக