ஒருதலைராகத்தின் இசையில் ஒரே சமயம் ஒரு செவ்வியல்தன்மையும் ஜனரஞ்சகத்தன்மையும் இருந்தது. ராஜேந்தர் அந்த ஜனரஞ்சகத்தன்மையை மட்டும் அவருடையதாக அளித்திருக்கலாம். பின்னர் அவர் தனியே இசையமைத்தபோது அதை மட்டும்தான் அவரால் கொண்டுசெல்லமுடிந்தது. ஒருதலை ராகத்தின் இசையின் நுட்பமான அம்சங்களை எவ்வகையிலும் அவரால் கையாள முடியவில்லை
ஒருதலை ராகத்தின் இசையில் பெரும்பங்களிப்பாற்றிய ஏ.ஏ.ராஜ் அதன்பின் இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். ரஞ்சித் என்பவர் இயக்கத்தில் 1981ல் வெளிவந்த உதயமாகிறது என்ற படம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெளியாகவேயில்லை. ஆகவே இசை எவராலும் கவனிக்கப்படவில்லை. நாங்கள் அன்று அப்படத்தைக் கேள்விப்படவேயில்லை.
ஒருதலைராகம் படத்தை தயாரித்த மன்சூர் புரடக்ஷன்ஸின் இ.எம்.இப்ராகீம் தயாரித்து இயக்கிய தணியாத தாகம் என்றபடத்திற்கு ராஜ் அதன் பின் இசையமைத்தார். அந்த இரண்டு வருடங்களுக்குள் ராஜேந்தர் அவரது அதிரடிகள் வழியாக பெரும்புகழ் பெற்றுவிட்டிருந்தார். அவர் இசையமைத்து இயக்கி வெளிவந்த ரயில் பயணங்களில் ஒருதலைராகத்தையே கொச்சையான ஜனரஞ்சகத்தன்மையுடன் எடுத்தது போல இருந்தது. அது பெருவெற்றி பெற்றிருந்தது.
தணியாத தாகம் இரண்டுவருடம் தயாரிப்பில் கிடந்தது. பெரும் பொருளாதார நெருக்கடிகளுடன் கோர்வையில்லாமல் எடுக்கப்பட்டது. ஈ.எம்.இப்ராகீம் இதை இயக்கியதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் ஒளிப்பதிவாளரும் கதாசிரியரும் சேர்ந்துதான் இதை இயக்கியிருந்தனர். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=s0L6OK-MQy0
[பூவே நீ யார்சொல்லி]
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OvahUM0qTkQ
அன்று எவராலும் அறியப்படாத நடிகராக இருந்த டெல்லி கணேஷ் நாயகனாக நடித்திருந்தார். ஒரு நடுவயது மனிதருக்கு ஏற்படும் காதல்தான் கதை.
இந்தப்படத்தை நானும் கல்லூரி நண்பர்களும் திரையரங்குக்குச் சென்று பார்த்தோம். படம் ஆரம்பித்த பத்தாம்நிமிடம் முதல் கூச்சலிட ஆரம்பித்தோம். படத்தின் பாடல்களையெல்லாம் ஒலிக்கவே விடவில்லை. மூன்றே நாட்களில் படம் திரையரங்கைவிட்டு அகன்றது. ஒருதலைராகம் டி.ராஜேந்தரின் ஆக்கம் என்பது பொதுஜன புத்தியில் மட்டுமல்ல திரைப்படத்துறையிலும் நிலைபெற்றது.
பத்தாண்டுகளுக்குப்பின் நான் தற்செயலாக கொழும்பு வானொலியில் தணியாத தாகம் படத்தின் பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் என்ற பாட்டை கேட்டேன். ஓர் இரவு நேரம். அந்தப்பாடல் என்னை பித்துப்பிடிக்கச் செய்தது. ஒருதலைராகத்தில் இருந்து அதன் பின் காணாமல் போன அந்த செவ்வியல் நுட்பம் அந்தப்பாடலில் இருந்தது. கேட்கக்கேட்க நெஞ்சில் தித்திக்கும் இசையமைப்பு.துல்லியமான இசைக்கோர்ப்பு.
இத்தனை வருடங்களாகியும் பாடல் கொஞ்சம்கூட பழையதாகவில்லை. அந்தப்பாடலின் தொடக்கத்தின் மெல்லிய ஹம்மிங் தான் என்னுடைய அந்தரங்கமான இசைத்துளியாக நெடுங்காலம் இருந்தது. அதன்பின் ஆரம்பிக்கும் அந்த இசைக்கோலம் ஓர் அற்புதம்.
மேலும் பத்தாண்டுகளுக்குப்பின் இசைரசிகரான என் நண்பர் ஒருவர் உதயமாகிறது படத்தின் ‘அவளுக்கென்றே வந்தாள் அழகு ராதை’ என்ற பாடலை இசைத்தட்டில் ஓடவிட்டு கேட்கவைத்தார். நான் பேச்சிழந்து போனேன். அனைத்துவகையிலும் ஒரு மாஸ்டர்பீஸ் அந்தப்பாடல்.
ஏ.ஏ.ராஜ் அதன்பின் படங்களுக்கு இசையமைக்கமுடியவில்லை. அவர் திரையிலிருந்தே மறைந்துபோனார். தொடர்ந்து இசையமைத்திருந்தால், தமிழ்ச்சமூகம் ஊளையிட்டு வெளியேற்றாமல் கொஞ்சம் கவனித்திருந்தால் ஒருவேளை இன்றும் தமிழ் இசைரசிகர்கள் நெஞ்சில் வாழவைக்கும் அரியபாடல்களை அவர் உருவாக்கியிருக்கக்கூடும்.
ஏ.ஏ.ராஜ் பற்றி இன்றுவரை எவருக்கும் பெரிதாக ஏதும் தெரியாது. http://www.dhool.com ல் கிடைத்த தகவல்களையே நான் இங்கே பதிவுசெய்கிறேன்.
ஆகுல அப்பளராஜு 1930ல் விசாகப்பட்டினம் அருகே ஒரு சிற்றூரில் பிறந்தவர். புச்சி கோபாலராவிடம் ஆர்மோனியம் கற்றார். பொப்பிலியில் உணவு ஆய்வாளராக பணியாற்றினார். 1951 ல் இசையை வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து இசை வாய்ப்புகளுக்காக அலைந்தவர் இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர ராவின் உதவியாளராக ஆனார்.தன் பெயரை ஏ.ஏ.ராஜ் என்று சுருக்கிக்கொண்டார்
மாஸ்டர் வேணு ஏ.ஏ.ராஜை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். 1956ல் வெளிவந்த காலம் மாறிப்போச்சு, 1957ல்; வெளிவந்த எங்கவீட்டு மகாலட்சுமி 1959ல் வெளிவந்த மஞ்சள் மகிமை உள்ளிட்ட பலபடங்களில் இசையில் ஏ.ஏ.ராஜின் பங்களிப்பு இருந்தது.ஏ.ஏ.ராஜ் சலபதிராவ், வி.தட்சிணாமூர்த்தி, பாபுராஜ் ,சத்யம் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியிருக்கிறார்
ஏ.ஏ.ராஜ் மூன்று தெலுங்குப்படங்களுக்கு இசை அமைத்தார். தேவுடுசினா பார்த்தா[1967] பஞ்சகல்யாணி டொங்கலாரனி [1969] விக்ரமார்க்க விஜயம்[1971]. இவையெல்லாமே மிகச்சிறிய படங்கள். எவ்வகையிலும் கவனிக்கப்படவில்லை.
[தணியாத தாகம்]
1979இல் ஏ.ஏ.ராஜ் டி.ராஜேந்தருடன் இணைந்து ஒருதலைராகத்துக்கு
இசையமைத்தார். அந்தப்படம் 1980ல் வெளிவந்தது. அந்தப்புகழை அவரால் தக்கவைக்க
முடியவில்லை. அடுத்த வருடம் அவர் ரஞ்சித் என்பவர் இயக்கிய உதயமாகிறது
என்றபடத்துக்கு இசைமைத்தார். அந்தப்படம் தமிழகத்தில் பரவலாக திரைக்கு
வரவில்லை. இசையை எவரும் கவனிக்கவுமில்லை.அதன்பின் அவரது இசையில் வெளிவந்தது தணியாத தாகம்.அதன் வெளியீடு நீண்டு நீண்டு சென்று இரண்டு வருடங்கள் கழித்து மிக மோசமான முறையில் நிகழ்ந்து அவரது இசைவாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஏ.ஏ.ராஜ் இசையில் வந்தபாடல்களில் தணியாத தாகம் படத்தில் வாணி ஜெயராம் பாடிய மலராத மலரெல்லாம் மலரவைக்கும்’ ’உன்னை மறக்கவில்ல நானே’ ‘பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்’ ’அவளொரு மோகனராகம்’ ‘யாருகிட்ட சொல்லுறது’ ‘ஆகா மல்லிகைப்பூவே ஆகா மாதுளைப்பூவே’ போன்ற அனைத்துப்பாடல்களுமே அரிய முத்துக்கள்.
உதயமாகிறது படத்தில் ‘அவளுக்கென்றே வந்தால் அழகு ராதை’ ‘மஞ்சளும் மாலையும் வருமோ’ ’கண்ணா உன்னருளால்’ போன்ற பாடல்கள் என்றும் இனியவை. மிக அபூர்வமாக எப்போதாவது இவை இலங்கை வானொலியில் ஒலித்துவந்தன. இப்போது கேட்கமுடிவதேயில்லை
ஏ.ஏ.ராஜ் அதன்பின் சில பக்திப்பாடல் இசைத்தட்டுக்களை வெளியிட்டிருக்கிறார்.ஜெ.எச்.பி ஆச்சாரியா எழுதி பி.பி.ஸ்ரீனிவாசும் ஜானகியும் பாடிய ஸ்ரீ ராகவேந்திர சுப்ரபாதம் அவற்றில் முக்கியமானது. திருமணப்பாடல்கள் அடங்கிய ‘ஆனந்தம் ஆனந்தம்’ என்ற இசைத்தட்டும் அரியபாடல்கள் கொண்டது
ஏ.ஏ.ராஜ் திரையிசைக்கலைஞர்கள் சங்கத்தின் தீவிரச்செயல்பாட்டாளராகவும் 2001 வரை அதன் தலைவராகவும் இருந்தார். 2007ல் மறைந்தார். அவரது பிற்கால வாழ்க்கையில் ஊடகங்கள் அவரை எவ்வகையிலும் கவனிக்கவில்லை. அவரது அரிய பாடல்கள் மிகச்சில ரசிகர்களுக்கன்றி எவருக்கும் தெரியவில்லை. அவரது மரணம் செய்தியாகவில்லை. அஞ்சலி செலுத்தப்படாதவராக மறைந்துபோனார்.
திரையிசை என்பது விசித்திரமான ஒரு செயல்முறை கொண்டது. அது வெற்றிகரமான திரைப்படத்தில் ஏறி வந்தாகவேண்டும். திரைப்படம் வெற்றிபெற்றால் சுமாரான இசைகூட மக்களைச் சென்றடையும், அந்தப்படத்தின் காட்சிகளின் வலுவால் ரசிக்கப்படும். திரைப்படம் வெற்றிபெறவில்லை என்றால் மிகச்சிறந்த பாடல்கள்கூட எவ்வகையிலும் கவனிக்கப்படாமல் மறையும்
அதிலும் மெல்லுணர்ச்சிகளுடன் மட்டுமே உரையாடக்கூடிய செவ்வியல்தன்மை கொண்ட இசை மிகவலுவான திரைப்படங்களின் வாகனம் இல்லாவிட்டால் அனேகமாக எவராலும் கேட்கப்படாது. காரணம் திரையிசை என்பது திரைப்படத்தின் உணர்ச்சிகளின் ஒரு பகுதியாகவே வருகிறது. காலப்போக்கில்தான் அது திரைப்படத்தை உதறிவிட்டு தனியாக நிற்க ஆரம்பிக்கிறது.
தோல்வியடைந்த திரைப்படம் என்பது ஒரு வாரத்துக்குள் குப்பையாக ஆகிவிடக்கூடியது. அதிலும் இன்றைய மின்னணுத்துறை வளர்ச்சிகள் ஏதும் இல்லாத காலகட்டத்தில் தோல்வியடைந்த படங்கள் முழுமையாகவே மறைந்துபோய்விட்டன.அதன் இசையும் அதனுடன் மண்ணுக்குச் சென்றுவிட்டது. ஏ.ஏ.ராஜ் அந்த விதியை மீறி இன்றும் பிடிவாதமாக இருந்துகொண்டிருப்பது அவரது இசையின் தவிர்க்கவே முடியாத பேரழகால்தான்
ஏ.ஏ.ராஜுக்கு அஞ்சலி.jeyamohan.in
இந்த இசைமேதை எப்படி இருட்டடிக்கப்பட்டார் புரியாதபுதிராக இருக்கிறது
பதிலளிநீக்கு