திங்கள், 2 டிசம்பர், 2013

கொலை கற்பழிப்பு :சிறுவர்களை மேஜராக விசாரிக்க சட்ட திருத்தம் மத்திய அரசு முடிவு

புதுடெல்லி:கொடூர குற்றங்கள் புரியும் மைனர் குற்றவாளிகளை மேஜர்களாக கருதி இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பதினெட்டு வயதுக்கு குறைவான இளைஞர்களை சிறுவர்களாக கருத வேண்டும் என இந்திய சிறார் சட்டம் கூறுகிறது. இந்த வயதுக்குட்பட்டவர்கள் கொடூரமான குற்றங்களை புரிந்தாலும் அவர்களை இளம் சிறார் சட்டத்தின் கீழ் அதற்கான நீதிமன்றத்தில் தான் விசாரிக்க முடியும். அதிக பட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை வழங்க முடியும். டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைதான 6 பேர்களில் ஒருவன் சிறுவன். இவனுக்கு அதிக பட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. மற்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னரே சிறுவனையும் தூக்கில் போட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதற்கு ஏற்றாற்போல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. இளம்சிறார் சட்டத்தை தற்போது திருத்த வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துவிட்டது. இருப்பினும் டெல்லி பலாத்கார வழக்கில் சிக்கிய சிறுவனை மேஜராக கருதி இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் சுப்ரீம்  கோர்ட்டில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதற்கிடையில் கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களை புரியும் 16 வயதுக்கு மேற்பட்டோரை மேஜராக கருதி ஐபிசி சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


இது குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிப்பதற்காக குறிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த குறிப்பு குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசனை செய்து சட்ட அமைச்சகத்துக்கு உரிய பரிந்துரை செய்யும். கொடூர குற்றங்களில் சிக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோரை ஐபிசி சட்டத்தின் கீழ் விசாரிப்பது குறித்து இளம் சிறார் நீதிமன்றம் முடிவு செய்யும் வகையில் இளம் சிறார் சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்யப்படும் - tamilmurasu.orgpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக