ஞாயிறு, 15 டிசம்பர், 2013

இந்திய–அமெரிக்க உறவில் விரிசல்? இந்திய துணை தூதர் அமெரிக்க சட்டத்திற்கு உட்பட்டவரே

வாஷிங்டன் விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெண் துணைத்தூதர்
அமெரிக்காவில் நியூயார்க் இந்திய துணைத்தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவரும் மும்பையை சேர்ந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), வேலைக்காரப்பெண்ணுக்கு ஏ–3 விசா பெற்றதில் மோசடியில் ஈடுபட்டதாகவும், தவறான தகவல்கள் தந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இதன்பேரில் அவர் கடந்த 12–ந்தேதி கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் தனது பணிப்பெண் சங்கீதாவுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 79 ஆயிரம் சம்பளம் தருவதாக அழைத்துச்சென்று விட்டு, ரூ.30 ஆயிரம் மட்டுமே தந்து கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்தியா கண்டனம்
தேவயானி, மேன்ஹட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், 2லு லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதித்தந்து உடனடியாக ஜாமீன் பெற்றார்.2 குழந்தைகளின் தாயான துணைத்தூதரை அமெரிக்கா இப்படி அநாகரிகமாக நடத்தியவிதம், இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பவலை, வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் நேற்று  நேரில் அழைத்து கண்டித்தார். இப்படிப்பட்ட ஒரு தரம்கெட்ட செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதிபடத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் இந்திய–அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
வழக்கு விசாரணை உண்டு
நியூயார்க் அரசு வக்கீல்கள் அலுவலகம் சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், ‘தேவயானி சட்டத்தை மீறி உள்ளார். அவர் மீது வழக்கு விசாரணை நடத்தப்படும்’ என கூறப்பட்டுள்ளது.நியூயார்க் அரசு தலைமை வக்கீல் பிரித் பராரா, ‘‘அமெரிக்காவில் வீட்டு வேலைக்கு அழைத்துவரக்கூடிய வெளிநாட்டுப் பெண்களுக்கு, அமெரிக்க குடிமக்களின் வேலைக்காரர்களுக்கு வழங்கப்படுகிற அதே பாதுகாப்பு வழங்கப்படுகிறது’’ என கூறினார்.
விலக்கு உரிமை கிடையாது
இந்தப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘ தேவயானி கைதான சம்பவத்தை சட்ட அமலாக்க அமைப்புகள் மூலமாக கையாண்டு வருகிறோம். இந்தியாவுடன் நாங்கள் நெடுங்கால உறவு கொண்டுள்ளோம். அந்த உறவு தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என கூறினார்.அவர் மேலும் கூறுகையில், ‘‘தூதரக உறவுகள் தொடர்பான ‘வியன்னா உடன்படிக்கை’யின்படி, தூதரக அலுவல்களில்தான் இந்திய துணைத்தூதர் (சட்ட நடவடிக்கையிலிருந்து) விலக்கு உரிமையைப் பெற்றுள்ளார்’’ என்றார். எனவே சொந்த விவகாரங்களில் துணைத்தூதர் தேவயானி, விலக்கு உரிமையைப் பெறமுடியாது, அவர் நீதிமன்றத்தில் விசாரணை எதிர்கொண்டாக வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
15 ஆண்டு சிறை?
இதற்கிடையே இந்தப்பிரச்சினை தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி தரண்ஜித் சிங் சந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இருப்பினும் தேவயானி மீதான விசா குற்றச்சாட்டு, தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக