ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கெஜ்ரிவால் பதவியேற்ற 6 மணிநேரத்தில் 2 அமைச்சரவை கூட்டங்கள் 9 அதிகாரிகள் இடமாற்றம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி: டெல்லியில் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்ற 6 மணி நேரத்துக்குள், முதல்வன்Õ பட பாணியில் அதிரடியாக 2 அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டன. 9 அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் நேற்று லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த ராம்லீலா மைதானத்தில், பகல் 12 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார். பின்னர் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று அவரும், அவரது அமைச்சர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பேசிய கெஜ்ரிவால், ஊழல் இல்லாத ஆட்சி ஏற்பட ஆம் ஆத்மி பாடுபடும் என்று தெரிவித்தார். பின்னர் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய காரை தவிர்த்துவிட்டு, 1.30 மணிக்கு தனது காரில் டெல்லி தலைமை செயலகத்துக்கு வந்தார். இரவு 7.30 மணி வரை அலுவல்களை கவனித்து விட்டு அதன்பிறகு வீட்டுக்கு சென்றார்.


இந்த 6 மணி நேரத்துக்குள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரண்டு அமைச்சரவை கூட்டங்களை நடத்தினார். டெல்லியில் பொதுவாக சனிக்கிழமை விடுமுறை நாளாக இருக்கும். கெஜ்ரிவால் பதவியேற்றதை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் வாரத்துக்கு 6 நாட்கள் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நேற்று டெல்லி குடிநீர் வாரியம், இந்திரபிரஸ்த கேஸ் லிமிடெட், டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாசி ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் கல்வி இலாகா ஒதுக்கப்பட்ட மூத்த அமைச்சரான மணீஷ் சிசோடியா தலைமையில், கல்வி துறை உயர் அதிகாரிகளுடன் தனியாக கூட்டம் நடைபெற்றது.

அப்போது மணீஷ் சிசோடியா கூறுகையில், எல்கேஜி உள்ளிட்ட ஆரம்ப பள்ளி வகுப்புகளுக்காக நன்கொடை பெறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று தெரிவித்தார். இந்த 6 மணி நேரத்துக்குள் டெல்லி குடிநீர் வாரிய தலைவர் உள்பட 9 அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் வீட்டில் இருந்தபடியே கெஜ்ரிவால் பணிகளை கவனிப்பார். நாளை வழக்கம் போல் தலைமை செயலகத்தில் பணிகளை மேற்கொள்வார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக