ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பழமையான 4 வேதங்களும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை ! மறைமொழி அறிவியல் ஆய்வகம் ! பி.வி.என் மூர்த்தி

வேதங்கள் எழுதப்பட்ட மொழி "தமிழி' : ஆராய்ச்சியாளர் dnமூர்த்தி 
சென்னை பழமையான 4 வேதங்களும் "தமிழி' என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்ஸ்கிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதஸ்ரீ நிறுவனர் மற்றும் தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார்.
மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.27) நடத்தியது. இதில் வேதஸ்ரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி பேசியது:
பழமையான 4 வேதங்களும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை. அவை "தமிழி' என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சம்ஸ்கிருதம் தெரிந்த அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்க கூறிய போது அவர்கள், இதில் உள்ள பல சொற்கள் சம்ஸ்கிருத அகராதியிலேயே இல்லை என்றனர். இது குறித்து நான் மேலும் ஆராய்ந்த போது வேதங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழி மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.
வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தில் பல நூல்கள் தமிழி மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை கடல் பிரளயத்தின் காரணமாக அழிந்து விட்டதால் தமிழி மொழியைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

சங்கத் தமிழ், வேத இலக்கியங்களில் இலக்கியத்தைத் தவிர விஞ்ஞானம், கணிதம் என்ற இருமுகங்களும் உண்டு. என்னுடைய கண்டுபிடிப்பான மொழிக்கணிதம் என்ற நூல் இவ்விரு முகங்களையும் அம்பலப்படுத்துகிறது.
மேற்கத்திய அறிஞர்களான பித்தாகரஸ், டார்வின், ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின், பூலியன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நம் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன. மேலும், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களும் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தை விளக்கத்தான் இயற்றப்பட்டன.
இவற்றில் பலவற்றை மறைமொழி அறிவியல் ஆய்வகம் ஏற்கனவே விளக்கி விஞ்ஞானப் புத்தகங்களாக தயாரித்துள்ளது. இதனை கல்விக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக ஏற்றுக் கொண்டால் இன்றைய அறிவை விட மேலான அறிவைப் பெறலாம் என்றார்.
இந்தக் கருத்தரங்கினை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமை வகித்தார். இதில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் dinamani.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக