ஞாயிறு, 1 டிசம்பர், 2013

டான்ஸ் மாஸ்டர் ரகுராம் 1,000 படங்களுக்கு நடனம் அமைத்தவர்

1,000 படங்களுக்கு மேல் நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் ரகுராம்,
சென்னையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. எம்.ஜி.ஆர்–சிவாஜிகணேசன் காலத்தில் தொடங்கி, ரஜினிகாந்த்–கமல்ஹாசன் படங்கள் வரை, 1,000 படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர், ரகுராம். இவர், பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் உறவினர். டான்ஸ் மாஸ்டர் கலாவின் அக்காள் கிரிஜாவின் கணவர். ரகுராம், சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் அவர் குணம் அடைந்தார். நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான இவர், ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமா நடன இயக்குனர்கள் சங்க பணிகளில் ஈடுபட்டார்.

மரணம்
இன்று காலை ரகுராம் வழக்கம் போல் எழுந்து காலை 10 மணிக்கு சிற்றுண்டி சாப்பிட்டார். 11–30 மணி அளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். ரகுராமின் திடீர் மரணம் அவருடைய குடும்பத்தினர் மத்தியிலும், திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய உடலைப் பார்த்து மனைவி கிரிஜா, மூத்த மகள் சுஜாதா, மைத்துனிகள் கலா, பிருந்தா மற்றும் உறவினர்கள் கதறி அழுதார்கள்.
ரகுராமின் உடல் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை காம்தர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. திரையுலக பிரமுகர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
உடல் தகனம்
அவருடைய இளைய மகள் காயத்ரி ரகுராம், ‘வை ராஜா வை’ என்ற படத்துக்கு நடனம் அமைப்பதற்காக ஜப்பான் சென்று இருக்கிறார். அவருக்கு ரகுராம் மரணம் அடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
காயத்ரி ரகுராம் சென்னை வந்து சேருவதற்கு தாமதமாகும் என்பதால், ரகுராமின் உடல் தகனம் நாளை மறுநாள்  (திங்கட்கிழமை) நடக்கிறது.
1,000 படங்கள்
மரணம் அடைந்த ரகுராமுக்கு வயது 64. அவருடைய சொந்த ஊர், கும்பகோணம். மனைவி பெயர் கிரிஜா. இவரும் டான்ஸ் மாஸ்டர்தான். ரகுராம்–கிரிஜா தம்பதிக்கு சுஜாதா, காயத்ரி என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சுஜாதா, பரதநாட்டிய கலைஞர். காயத்ரி ‘விசில்’, ‘சார்லி சாப்ளின்’ உள்பட பல படங்களில் நடித்தவர். இப்போது, டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பணிபுரிகிறார்.
ரகுராம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானார். ‘படிக்காத மேதை,’ ‘அருணகிரிநாதர்’ உள்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 1,000 படங்களுக்கு மேல் நடனம் அமைத்து இருக்கிறார். ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ என்ற தமிழ் படத்தையும், ‘பாக்யதேசா’ என்ற வங்காள படத்தையும் டைரக்டு செய்து இருக்கிறார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக