செவ்வாய், 5 நவம்பர், 2013

தமிழை ஆங்கில எழுத்தில் எழுதவேண்டுமாம் ! சொல்பவர் ஜெயமோகன் ! Why this kolaiveri jemo?

ஜெயமோகனின் தங்கிலீஷ் தமாக்கா
தி இந்துவில் வெளிவந்த ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தீர்களா? இல்லையென்றால் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி அதை வாசித்துவிடுங்கள். நேரமில்லையென்றால் விட்டுவிடுங்கள். கட்டுரையின் அடிப்படையான சாராம்சத்தைச் சொல்லிவிடுகிறேன். இனிமேல் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்கிறார் ஜெமோ. அதாவது ‘Vanakkam, Nalla irukeengala?’ என்று எழுத வேண்டுமாம்.
தலைப்பை பார்த்தவுடன் காமெடிக் கட்டுரை போலிருக்கிறது எனத் தோன்றியது. ஆனால் ஜெமோ சீரியஸாகவேதான் எழுதியிருக்கிறார். அடுத்தவர்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் ‘அசடு, அசடு’ என்று விளித்துக் கொண்டே இப்படியான கட்டுரைகளை எழுதுவதற்கு அசட்டுத் தைரியம் வேண்டும். இப்படியெல்லாம் கட்டுரை எழுதுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் தனது வலைத்தளத்தில் இதை பரிசோதித்து பார்த்திருக்கலாம். நிறைய வேண்டாம்- இரண்டு கட்டுரைகள் போதும். பெரும்பாலானவர்களின் ரியாக்‌ஷனைத் தெரிந்திருக்க முடியும். ஆனால் அவர் செய்ய மாட்டார். இந்த கான்செப்ட் எந்தக் காலத்திலும் வேலைக்கு ஆகாது என்பதை ஜெயமோகனுக்கும் தெரியும். ஆனால் அவருக்கு அவ்வப்போது இப்படியான அதிரடி ஆக்‌ஷன் தேவைப்படுகிறது. தம்மை நோக்கித் திரும்ப வைக்கும் வித்தை. இந்த வித்தைக்கு இப்பொழுது அவரிடம் தமிழ் சிக்கிக் கொண்டது, பாவம்.
தமிழில் மாறுதல்களைக் கொண்டு வருவதாக இருந்தால் உருப்படியாக நிறையச் செய்ய இயலும். உதாரணமாக ‘கோபி’ என்று தமிழில் எழுதினால் ஒரே உச்சரிப்புதான். ஆனால் ஆங்கிலத்தில் Go என்றும் வாசிக்கலாம் Ko என்றும் வாசிக்கலாம். இரண்டாவது எழுத்தை Bi என்றும் வாசிகக்லாம், Pi என்றும் வாசிக்கலாம். (Gobi, Kobi,Gopi, Kopi). இந்த உச்சரிப்புகள் ஏற்கனவே வழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால் இந்த உச்சரிப்புகளை வேறுபடுத்துவதற்கான வழிமுறைகள் தமிழில் இல்லை. வேறுபடுத்த இயலுமா என்பதை யோசிக்கலாம்.
அதேபோல தமிழின் இருநூற்று நாற்பத்தியேழு எழுத்துக்களும் நமக்குத் தேவைப்படுகின்றனவா என்றும் அந்த எண்ணிக்கையை குறைக்க முடியுமா என்பது பற்றிய ஆராய்ச்சிகளையும்  ஆரம்பிக்கலாம். மிகச் சிக்கலான சில வரி வடிவங்களை எளிமைப்படுத்துவதற்கான அவசியங்களைப் பற்றி பேசலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ் எழுத்துருவையே தீயில் இட்டுக் கொளுத்தலாம் என்பது என்னைப் பொறுத்தவரையிலும் மொழியையே புதைக்கலாம் என்பது மாதிரிதான்.
தமிழ் புத்தகங்கள் ஐந்நூறு பிரதிகள்தான் விற்கின்றன என்கிறர். அனைத்து புத்தககங்களுமா வெறும் ஐந்நூறு பிரதிகள் விற்கின்றன? வெறும் ஐநூறு பிரதிகள்தான் விற்கின்றன என்பது ஜெயமோகனுக்கும், சாருநிவேதிதாவுக்குமான பிரச்சினைகளே தவிர தமிழுக்கும், தமிழ் எழுத்துருவுக்குமான பிரச்சினைகள் இல்லை. 
இதே தமிழ் மொழியில், இதே தமிழ் எழுத்துருவில் எழுதப்பட்ட நீயா நானா கோபிநாத்தின் ‘ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க’ இலட்சக்கணக்கான பிரதிகள் விற்ற புத்தகம்தானே? சோம.வள்ளியப்பனின் ‘அள்ள அள்ளப் பணம்’ அநேகமாக லட்சக்கணக்கான பிரதிகள் விற்ற புத்தகம். இவையெல்லாம் மட்டும் ஏன் விற்கின்றன? இன்னமும் சுஜாதாவின் புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில்தானே விற்கின்றன. புத்தகக்கண்காட்சிகளில் சுய முன்னேற்ற நூல்களை அள்ளியெடுத்துச் செல்கிறார்கள்தானே? எதை வைத்து தமிழ் புத்தகங்கள் ஐந்நூறு பிரதிகள்தான் விற்கின்றன என்று சொல்கிறார் என்று தெரியவில்லை.
தமிழில் எழுதுவதை யாருமே வாசிப்பதில்லை என்பது உண்மையாக இருந்தால் தினமலர்.காம் தளத்திற்கு மட்டும் எப்படி லட்சக்கணக்கான ஹிட்கள் வருகின்றன? தமிழ் ஒன்.இந்தியா இணையத்தளத்தை ஏன் கோடிக்கணக்கான பேர் வாசிக்கிறார்கள்? தமிழ்செக்ஸ் ஸ்டோரிஸ் என்ற இணையதளம் தமிழின் மிக அதிக பார்வையாளர்களைக் கொண்ட தளமாக இருக்கிறது. இவையெல்லாம் எந்தவிதத்திலும் சமஸ்கிருதம், ஃப்ரெஞ்ச் மொழிகளைப் படிக்கும் குழந்தைகளினால் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.
ஜெயமோகனின் இணையதளத்தை ஒரு நாளைக்கு மூன்றாயிரம் பேர்கள்தான் வாசிக்கிறார்கள் என்பதால் தமிழை வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற பொருள் இல்லை; நமது புத்தகத்தை ஐந்நூறு பேர்கள்தான் வாங்குகிறார்கள் என்பதால் தமிழ் எழுத்துருவினால்தான் இந்த எண்ணிக்கை குறைகிறது என்ற அர்த்தம் இல்லை. 
உண்மையில் சில வகையான புத்தகங்கள் குறைவாக விற்பதற்கு நிறைய அடிப்படைச் சிக்கல்கள் இருக்கின்றன. தமிழில் வாசிப்பவர்களில் பெரும்பாலானோரின் வாசிப்புத்தளம் என்பது சுயமுன்னேற்ற நூல்கள், பல்ப் நாவல்கள் என்று நின்றுவிடுகின்றன. அதைத் தாண்டி அவர்கள் வருவதில்லை. ஜெயமோகன் போன்றவர்கள் இந்தத் தளத்தில் இருக்கும் வாசகர்களை அடுத்த நிலைக்கு நகர்த்துவதைச் செய்ய வேண்டுமே தவிர, தங்கிலீஷில் எழுதினால் வாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதெல்லாம் வெறும் காமெடி.
இப்பொழுதெல்லாம் நமது கல்விக் கூடங்களிலும் சரி வீடுகளிலும் சரி, வாசிக்கும் பழக்கம் என்பதையே முழுமையாக தவிர்க்கச் செய்கிறார்கள். அதுதான் இங்கு பிரச்சினை. மதிப்பெண்கள் மட்டுமே அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. பையனின் கவனம் சிதறிவிடும் என்பதற்காக ‘ஆனந்தவிகடன், குமுதம் கூட வாங்குவதில்லை’ என்று பெருமையாக பேசுவதன் சிக்கல்கள் இவை. இவற்றையெல்லாம் மீறி வாசிக்கும் பழக்கத்தை தமிழில் உருவாக்கிக் கொள்ளும் மிகக் குறைந்த சதவீதத்தினரால் மட்டும்தான் ‘இந்த அளவிலான’ வாசிப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இரண்டு மொழியின் வெவ்வேறு வரிவடிவங்களை நினைவில் நிறுத்திக் கொள்வது என்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. உங்களுக்கும் எனக்கும் ஆங்கிலமும் தெரியும், தமிழும் தெரியும். என்ன பிரச்சினையை சந்திக்கிறோம்? மனோவியல் நிபுணர்களின் கூற்றுப்படி ஒவ்வொரு மனிதனும் நான்கைந்து வரிவடிவங்களை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நினைவில் நிறுத்திக் கொள்ள முடியும். ஒரு மொழிக்கான தனித்துவம் என்பது அதன் வரிவடிவத்திலும் இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
உண்மையில், நமது கல்வி முறையில் உருவாக்க வேண்டிய மாறுதல்கள், அடுத்த தலைமுறையின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல்கள், ஏற்கனவே இருக்கும் வாசகர்களின் புரிதல்களை, வாசிப்பு முறையை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் போன்றவற்றைத்தான் ஜெயமோகன் போன்ற சிந்தனையாளர்கள் சிந்திக்க வேண்டுமே தவிர இப்படியெல்லாம் அபத்தமாக யோசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
தமிழின் வாசகர்கள், அவர்களின் ரசனை, புரிதல்கள் போன்றவற்றை ஜெயமோகன் அளவிற்கு அறிந்து வைத்திருப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என நம்பியிருந்தேன். ஆனால் அவர் இப்படியொரு கட்டுரையை எழுதுவதற்கான விதி எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஜெயமோகனை நான் விமர்சிப்பது டூ மச். அவருக்கும் எனக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ஆனால் இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் இதை எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. 
ஃபேஸ்புக், ட்விட்டரில் தங்கிலீஷில்தான் நிறையப் பேர் எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். உண்மையில், இப்படி எழுதுவதை வாசிப்பது போல வேறொரு கொடுமை இருக்கவே முடியாது. அதன் பெயர் தங்கிலீஷ் இல்லை ‘மனுஷனை தாளிக்கும் இங்கிலீஷ்’. நம்பிக்கை இல்லையென்றால் பொறுத்து இருங்கள். உங்களின் இந்தக் கட்டுரைக்கு குறைந்தபட்சம் நாற்பது அல்லது ஐம்பது கடிதங்களாவது வரும். அத்தனையும் தங்கிலிஷீல் வர வேண்டும் என மலையாள பகவதியை வேண்டிக் கொள்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக