சனி, 30 நவம்பர், 2013

இந்திய பத்திரிக்கை உலகை புரட்டி போட்ட Tehelka ! தருண் தேஜ்பால் விவகாரத்தினால் BJP தப்பி விடமுடியாது !




இந்திய பத்திரிக்கை உலகையே இந்தப் பெயர் மாற்றிப் போட்டது என்றால் அது மிகையல்ல. 1999ம் ஆண்டு ஒரு சாதாரண வலைத்தளமாக உருவான டெஹல்கா,  பிஜேபியின் அரசாங்கத்தையே ஆட்டிப்படைத்தது.
Tejpal-1நாங்கள் வித்தியாசமானவர்கள் என்ற முழக்கத்தோடு ஆட்சியைப் பிடித்த பிஜேபி கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும் குறையாத மோசடிப் பேர்விழிகளைக் கொண்டது என்பதை தோலுரித்துக் காட்டியது டெஹல்கா. டெஹல்கா நடத்திய "ஆபரேஷன் வெஸ்ட் என்ட்” என்ற பெயர் கொண்ட அந்த ஸ்டிங் ஆபரேஷன், பத்திரிக்கை உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி ஸ்டிங் ஆபரேஷன்களின் தந்தை என்று பெயரெடுத்தது. அரசு நிர்வாகத்தில், குறிப்பாக ராணுவத் துறையில் எவ்வளவு சாதாரணமாக ஊழல் புரையோடிப்போயிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது டெஹல்கா.
ராணுவ உயர் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகளும், பெண்ணாசை மற்றும் பொன்னாசைக்காக இல்லாத ஒரு ராணுவ தளவாடத்தை வாங்க பேரம் நடத்தும் அளவுக்கு சோரம் போயிருந்தார்கள் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, வீக், போன்ற எந்த ஊடகமும் செய்ய இயலாததை மிகச் சாதாரணமாக செய்து காட்டியது டெஹல்கா. மாறுபட்ட கட்சி என்ற முழக்கத்தோடு ஆட்சியைப் பிடித்த பிஜேபிக்கு இது மரண அடியாக விழுந்தது.

அப்போது பிஜேபியோடு கூட்டணியில் இருந்த சமதா கட்சியின் தலைவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். அவரது கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்த ஜெயா ஜெய்ட்லி மற்றும் பிஜேபியின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமண் ஆகியோர் ராணுவ தளவாட பேரத்துக்காக லஞ்சம் வாங்கியது கையும் களவுமாக கேமராவில் பதிவாகியது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், இது இந்தியாவுக்கே ஒரு எச்சரிக்கை மணி என்றார்.  பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இது ஐஎஸ்ஐ சதி என்றார். டெஹல்கா பத்திரிக்கைய வெளியிட்ட ஊழலை மூடி மறைப்பதற்கென்றே, பிஜேபி அரசு, வெங்கடசாமி கமிஷன் என்று ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது.

  1. பங்காரு லட்சுமண்

ஜார்ஜ் பெர்ணான்டஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிறார். ஜெயா ஜெய்ட்லி, சமதா கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார்.      டெஹல்காவின் டேப்புகள் அத்தனையும் போலியானவை, திருத்தப்பட்டவை என்கிறது பிஜேபி.   நீதிபதி வெங்கடசாமி, இரண்டு முறை டெஹல்கா டேப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி, அவை திருத்தப்படாதவை என்று தீர்ப்பளிக்கிறார்.
டெஹல்கா இணையதளத்துக்காக முதலீடு செய்திருந்த ஃபர்ஸ்ட் க்ளோபல் நிறுவனம் மீது வருமான வரித்துறையை ஏவியது பிஜேபி அரசு.  ஃபர்ஸ்ட் க்ளோபல் நிறுவனத்தின் உரிமையளார் சங்கர் சர்மா மற்றும் அவரது மனைவி தேவினா மெஹ்ரா ஆகியோரை மீண்டும் மீண்டும் விசாரணை செய்தன வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு.  டெஹல்கா மற்றும் ஃபர்ஸ்ட் க்ளோபல் அலுவலகங்களை 23 முறை சோதனை செய்தன, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு.
ஃபர்ஸ்ட் க்ளோபல் உரிமையாளர் சங்கர் சர்மா அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார்.  டெஹல்கா டேப்புகள் உண்மையானவையா என்பதிலேயே விசாரணை தொடர்ந்து தேங்கி நிற்குமாறு பிஜேபி அரசு கடும் முயற்சிகள் செய்கிறது.
இந்த ஸ்டிங் ஆபரேஷனை செய்தவரும், தற்போது கோப்ரா போஸ்ட் இணையதளத்தை நடத்தி வருபவருமான அநிருத்த பெஹல், ஒரு சிபிஐ அதிகாரியை மிரட்டினார் என்ற புகாரில் கைது செய்யப்படுகிறார். மற்றொரு பத்திரிக்கையாளர் குமார் பாதல் என்பவர் மான் தோல் வைத்திருந்ததாக வன விலங்குச் சட்டத்தின் கீழ் சிபிஐயால் கைது செய்யப்படுகிறார்.
தொடர்ந்த நெருக்கடிகளால் 140 பணியாளர்களோடு செயல்பட்டுக் கொண்டிருந்த டெஹல்கா இணையதளம், வெறும் 5 பணியாளர்களாக சுருங்கியது.  நிதி இல்லாத காரணத்தால் எந்த ஊழியருக்கும் ஊதியம் வழங்கக் கூட முடியாத அளவுக்கு டெஹல்கா தளத்தை நெருக்கியது பிஜேபி அரசு.  ஒரு கட்டத்தில் பிஜேபியே அமைத்த விசாரணை ஆணையம், அறிக்கை அளிக்கத் தயாரான நேரத்தில் அந்த அறிக்கை டெஹல்கா இணையதளத்தின் ஸ்டிங் ஆபரேஷன் நேர்மையான ஒன்று என்றும், அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்க உள்ளது என்பதை அறிந்த பிஜேபி அரசு, அந்த விசாரணை ஆணையத்தின் நீதிபதி வெங்கடசாமிக்கு நெருக்கடியளித்து ராஜினாமா செய்ய வைத்தது. அறிக்கை தயாராக இருக்கிறது என்ற நிலையில் நீதிபதி ராஜினாமா செய்தார்.   பிஜேபி அரசாங்கத்துக்கு ஏற்ற ஒரு சொம்பு நீதிபதி யாரென்று தேர்வு செய்து, நீதிபதி பூக்கானை அந்த ஆணையத்துக்கு தலைவராக நியமித்து, இறுதி வரை விசாரணை முடிவு பெறாமலேயே பார்த்துக்  கொண்டது.
காங்கிரஸ் அரசு 2004ம் ஆண்டில் பதவியேற்ற பிறகுதான், விசாரணை ஆணையம் கைவிடப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.   அதன் பிறகு, அந்த வழக்கில், பிஜேபியின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமண், கைது செய்யப்பட்டு சமீபத்தில் சிறைத்தண்டனை பெற்றார்.
ஒரு ஊழலை வெளிக்கொணர்ந்து, பத்திரிக்கையாக ஜனநாயகத்தில் தனது கடமையை ஆற்றிய டெஹல்கா இணையதளம், கடமையை ஆற்றிய காரணத்துக்காகவே முடக்கப்பட்டது.  அந்த நேரத்தில் இந்த வேடிக்கைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜனநாயக சக்திகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், டெஹல்கா எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினார்கள்.  அதற்காக வாசகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், சந்தாவாக ஒரு லட்ச ரூபாயை வழங்கினார்கள்.   அப்படி சமூக ஆர்வம் உடைய முக்கிய நபர்கள் மற்றும் வாசகர்களின் நன்கொடையால் டெஹல்கா, டேப்ளாய்ட் வடிவில் வார இதழாக உருவானது. அச்சில் டெஹல்கா வந்த பின்னாலும் கூட, மற்ற இதழ்களைப் போன்ற முதலீடோ, விளம்பரங்களோ வரவில்லை. பின்னாளில், டெஹல்காவின் வடிவம் மாற்றப்பட்டு, ஓரளவுக்கு விளம்பரங்கள் வரத் தொடங்கின
டெஹல்கா அச்சில் வந்த பின்னாலும் கூட, அந்த இதழின் பத்திரிக்கையாளர்கள் எழுதிய பல செய்திக் கட்டுரைகள், புலனாய்வுக் கட்டுரைகளை வேறு இதழ்கள் வெளியிட்டிருக்குமா என்பது சந்தேகமே.  இந்திய ஜனநாகயத்துக்கு டெஹல்கா இதழ் ஆற்றிய பணி அரும்பெரியது.
large_tehelka_aug20Cover

டெஹல்கா என்ற பத்திரிக்கையை உருவாக்கி, இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக்கியவர் தருண் தேஜ்பால்.   டெஹல்காவின் வெற்றிக்கான பிரதான காரணம் அவர் மட்டுமே.  அப்படிப்பட்டவர் மீது பாலியல் புகாரா ?  இது டெஹல்கா பத்திரிக்கையால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிஜேபியின் சதியாக இருக்குமா ?  பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பிஜேபியின் கைக்கூலியாக  இருப்பாரா.... ?  இப்படியெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
எந்த நோக்கத்துக்காக, எப்படிப்பட்ட சூழலில் டெஹல்கா தொடங்கப்பட்டதோ, வணிக காரணங்களுக்காக, அந்த விழுமியங்களை விட்டு டெஹல்கா விலகி வெகு நாட்களாகிறது.   "திங்க்" என்ற டெஹல்கா இதழின் சர்வதேச கருத்தரங்கங்களை டெஹல்கா நடத்தத் தொடங்கியதிலிருந்து அது ஊடக நெறிகளுக்கு மதிப்பளிப்பதை நிறுத்திவிட்டிருந்தது. திங்க் என்ற அந்த கருத்தரங்கம், இந்தியா டுடே மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் நெடுநாளாக நடத்தி வந்த கருத்தரங்கத்துக்கு இணையாக நடத்த வேண்டும் என்ற விருப்பத்திலும், முதலீடு இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்த டெஹல்கா இதழுக்கு முதலீட்டை வரவழைப்பதற்காகவும் நடத்தப்பட்டது.
think
IMG_4919-980x450
அந்த மாநாட்டை நடத்துவதற்காக டெஹல்கா தேர்ந்தெடுத்த இடம் கோவாவில் உள்ள க்ரான்ட் ஹயாட் ஹோட்டல்.  அந்த க்ராண்ட் ஹயாட் ஹோட்டலின் உரிமையாளர்கள் வினோத் கோயங்கா மற்றும் ஷாஹீத் பல்வா.  இவர்கள் இருவருமே 2ஜி வழக்கின் குற்றவாளிகள்.   இவர்கள் குற்றவாளிகள் என்பது மட்டுமல்ல, அந்த ஹோட்டலே முறையான அனுமதியில்லாமல், சுற்றுச் சூழல் விதிகளுக்கு எதிராக கட்டப்பட்டது.   அந்த திங்க் கருத்தரங்கம் கோவாவில் நடப்பதற்கு சற்று முன்னதாக, கோவாவில் அரசு உதவியோடு நடைபெற்று வரும் இரும்புத் தாது சுரங்க ஊழல் குறித்து, டெஹல்காவில் பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதிய ரமன் கிர்பால் என்பவர் ஒரு செய்திக் கட்டுரை வெளியிடுகிறார்.  அந்த செய்திக் கட்டுரையை தருண் வெளியிட மறுத்ததோடு, ரமன் கிர்பாலையும் சரியாக பணியாற்றவில்லை என்று பணி நீக்கம் செய்கிறார்.  அந்த கட்டுரை இறுதி வரை டெஹல்காவில் வெளிவரவேயில்லை.  டெஹல்காவில் பணியாற்றுவது பெருமை, டெஹல்காவில் சுதந்திரம் உண்டு என்று எதற்காக செய்தியாளர்கள் அங்கே பணியாற்ற விரும்பினார்களோ, அந்த அடிப்படை நம்பிக்கையையே தருண் தேஜ்பால் தகர்த்தெறிந்தார்.  பின்னாளில் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி ஆடிட் அறிக்கையில் ரமன் கிர்பாலின் கட்டுரையில் வெளியாகியிருந்த தரவுகளை உறுதி செய்யும் வகையில், 3000 கோடிக்கும் மேல் சுரங்க ஊழல் நடைபெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது அந்த கட்டுரையை தேஜ்பால் வெளியிட மறுத்து, அந்த செய்தியாளரை பணி நீக்கம் செய்ததன் பின்னணியில் இருந்தது திங்க் கருத்தரங்கம்தான்.  எந்த ஹோட்டல் சுற்றுச் சூழல் விதிகளை மீறி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது என்று கோவா அரசாங்கம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததோ, அதே அரசு, க்ராண்ட் ஹயாட்டில் நடந்த அந்த கருத்தரங்கில் அலுவல் ரீதியாக பங்கேற்றது.  கோவா அரசு சார்பில், அந்த மாநாட்டுக்கு 30 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அந்த கருத்தரங்குக்கு வந்திருந்த 600 விருந்தினர்களுக்கு கோவா அரசு சார்பில் இரண்டு நாட்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரவு உணவு வழங்கப்பட்டது.   கோவா முதலமைச்சராக இருந்த திகம்பர் காமத், அந்த கருத்தரங்கில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.  தருண் தேஜ்பால், வணிக காரணங்களுக்காக வெளியிட மறுத்த அந்த கட்டுரை பின்னாளில் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.  இணைப்பு.
சமீபத்தில் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் வெளியிட்ட மற்றொரு செய்திக் கட்டுரையில், இணைப்பு.  2006ம் ஆண்டில், டெஹல்கா இதழின் மேனேஜிங் எடிட்டர் ஷோமா சவுத்ரி மற்றும் தருண் தேஜ்பாலின் தாயார், மனைவி, சகோதரர் ஆகியோர் மர்மமான முறையில் நடந்த சில பணப்பரிவர்த்தனைகள் மூலம், டெஹல்கா பத்திரிக்கையின் பங்குகளை விற்றதன் மூலம், பல கோடி ரூபாய் லாபமடைந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.  ஒரே நாளில் ஒரு பங்கின் விலை ரூபாய் 10 என்ற விலையில் தருண் தேஜ்பால் மற்றொரு நபரிடமிருந்து வாங்கியுள்ளார்.  அதே நாளில், தேஜ்பாலின் உறவினர்கள் மற்றும் ஷோமா,   அந்த பங்கை 13,189 ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.   இதைத்தானே ஆ.ராசாவும், ஷாஹீத் பல்வாவும், செய்தார்கள் ?  இதைத்தானே கலைஞர் டிவியில் தயாளு அம்மாள் செய்தார் ? இந்தப் பணப் பரிவர்த்தனைகள் மூலம் 2006ம் ஆண்டிலேயே டெஹல்கா தன் விழுமியங்களை சமரசம் செய்து கொள்ளத் தொடங்கி விட்டது என்பதைக் காட்டுகிறது.
2013ம் ஆண்டின் திங்க் கருத்தரங்கில்  லிப்டில் நடந்த அந்த சம்பவமே இன்று டெஹல்கா பத்திரிக்கையே இல்லாமல் போகும் நிலையை உருவாக்கியிருக்கிறது.   பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட அந்தப் பெண், தேஜ்பாலின் மகள் வயதுடையவர்.
தேஜ்பால் பலாத்காரம் செய்து கொண்டிருந்தபோது அந்தப் பெண், நான் உங்கள் மகளின் தோழி என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், தேஜ்பால், எதையும் காதில் வாங்காமல், மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணை வன்முறைக் குள்ளாக்குவதிலேயே கவனமாக இருந்தார்.  இது ஒரு நாளோடு நிற்கவில்லை, மறுநாள் மீண்டும் நடந்துள்ளது.
மனம் வெறுத்த அந்தப் பெண், தேஜ்பாலின் மகளிடம் நடந்த விஷயங்களைச் சொல்கிறார். அதற்குப் பிறகு, தேஜ்பால் தன் மகளுக்கு விஷயம் தெரிந்ததற்காக கடும் கோபம் கொள்கிறார்.   தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புகிறார். இறுதியாக இனி எனக்கு எஸ்எம்எஸ் அனுப்பாதீர்கள் என்று சொல்லி விடுகிறார்.
திங்க் கருத்தரங்கம் முடிவடைந்த பிறகு, அந்தப் பெண், ஷோமா சவுத்ரிக்கு நடந்த சம்பவங்களை விவரித்து, ஒரு நீண்ட மின்னஞ்சலை அனுப்புகிறார்.   அந்த மின்னஞ்சலில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இது வரை டெஹல்காவில் விசாகா கமிட்டி அமைக்கப்படவில்லை. உடனடியாக விசாகா கமிட்டி அமைத்து இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று கோருகிறார்.  எனது மின்னஞ்சல், டெஹல்கா ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட வேண்டும் என்றும், தேஜ்பால் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறுகிறார்.
விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டியது அந்தப் பெண் கோரிய கோரிக்கைக்கு கொடுக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச மரியாதை.  ஆனால், விசாரணை நடத்துவதற்கு பதிலாக, "சூழலை தவறாக புரிந்து கொண்டு நடந்து கொண்டதாகவும்" "துரதிருஷ்டவசமான சம்பவம்" என்றும், நடந்த தவறுக்காக, ஆறு மாதங்கள் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் மட்டும் மற்ற ஊழியர்களுக்கு அனுப்பப் படுகிறது.   பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதிய ஊடகம் டெஹல்கா.  குறைந்தபட்சம் பல்வேறு பெண்கள் பணியாற்றும் அதன் அலுவலகத்தில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டியது அதன் கடமை என்பதைக் கூட உணரவில்லை, டெஹல்கா நிர்வாகத்தினர்.  குறிப்பாக ஷோமா சவுத்ரி, தருண் தேஜ்பால் மன்னிப்புக்கும் அதிகமாகவே அந்தப் பெண்ணுக்கு செய்து விட்டார்... அவராகவே முன் வந்து ஆறு மாதங்கள் ஆசிரியர் பணியிலிருந்து விலகியிருப்பதை விட வேறு என்ன செய்ய முடியும் என்று இறுமாப்பாக பேசினார்.
இதற்குள், தருண் தேஜ்பாலின் மின்னஞ்சல் சமூக வலைத்தளங்களில் பரவத்தொடங்குகிறது.  அந்தப் பெண் அனுப்பிய புகாரும் பரவத் தொடங்குகிறது.  தேசிய மகளிர் ஆணையம், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகிறது.  இதற்குள் கோவா போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் போவதாகச் சொல்கிறார்கள்.  சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லையென்றாலும் நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள்
இதன் பிறகு பெரும்பாலான ஊடகங்களில் தகவல் பதிவு செய்யப்படுகிறது. தேசிய ஊடகங்களும் இது குறித்து விரிவாக செய்தி வெளியிடுகின்றன.
கோவா போலீசார் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்த பிறகு, தேஜ்பால் பேச்சை மாற்றுகிறார்.  அந்தப் பெண் விருப்பத்தோடுதான் இது நடந்ததாகக் கூறுகிறார்.
கோவா போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு தேஜ்பால், கோவாவில் பிஜேபி அரசாங்கம் இருப்பதால், இது டெஹல்காவுக்கு எதிரான சதி என்று கூறுகிறார். இன்றோ அல்லது நாளையோ தேஜ்பால் கைது செய்யப்படலாம்.
டெஹல்கா பத்திரிக்கை இந்திய பத்திரிக்கை வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதையும், அது இந்திய ஜனநாயகத்துக்கு ஆற்றிய அரும்பணியை புறந்தள்ள முடியாது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.  ஆனால், அதே நேரத்தில், தருண் தேஜ்பால் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.  தன் மகள் வயதில் உள்ள ஒரு பெண்ணை வன்முறைக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், அந்தக் குற்றத்தை மறைக்கவும், மழுப்பவும், அந்தப் பெண் மீதே குற்றம் சாட்டவும் அத்தனை வேலைகளையும் செய்துள்ளார் தேஜ்பால்.  தேஜ்பால் மீதான ஊடகங்களின் தாக்குதல், மதவாத சக்திகளின் சதி என்பது அயோக்கியத்தனமான வாதம்.  இது போன்ற விஷயங்களையெல்லாம் பெண்கள் பெரிது படுத்தக் கூடாது என்ற தொனியில் ஒலிக்கும் வாதம். பாதிக்கப்பட்ட பெண் ஏன் உடனடியாக புகார் கொடுக்கவில்லை... அவள் எதற்காக தனியாக லிப்டில் நுழைந்தார்.... ?  கோவா போலீசார் பாரபட்சமாக செயல்படுகிறார்கள் என்பதெல்லாம், "வகுப்புவாத சக்திகளின் சதி" என்ற அடைப்புக்குள் தேஜ்பாலின் செயலை நியாயப்படுத்தும் வேலையே...
232
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை அதிகாரிகளும், அரசுகளும் மதிப்பதில்லை என்று பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ள டெஹல்கா பத்திரிக்கையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து விசாகா கமிட்டியை அமைக்கவில்லை என்பதும், இது குறித்து பிரச்சினை எழுந்தபிறகும் அப்படி ஒரு கமிட்டியை அமைக்காமல் விஷயத்தை மூடி மறைக்கப்பார்த்தது என்பதும், தேஜ்பால் மீது துளியும் அனுதாபம் தோன்றச் செய்யவில்லை.
டெஹல்கா மட்டுமல்லாமல், பெரும்பாலான ஊடகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் இன்று வரை விசாகா கமிட்டி அமைக்கப்படாதது மட்டுமல்ல, புகார் கொடுத்த பெண்ணை கொச்சைப்படுத்துவது, அவரை பழி வாங்குவது என்று அத்தனை அநியாயங்களையும் அரங்கேற்றி வருகின்றன.   இப்படி ஒரு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றமே, அதன் தீர்ப்பை பின்பற்றாமல், பாதிக்கப்பட்ட ஒரு பெண் புகார் கொடுத்த பிறகே இப்படி ஒரு கமிட்டியை அமைத்துள்ளது என்பதுதான் வேதனையான வேடிக்கை.
சன் டிவியில் பணியாற்றிய அகிலா என்ற செய்தி வாசிப்பாளர், சன் செய்திகளின் ஆசிரியர் ராஜா மீது புகார் கொடுத்த பிறகுதான் விசாகா கமிட்டியையே அமைத்தது.  டெஹல்கா நிர்வாகத்தை விட சன் நிர்வாகம் ஒரு படி மேலே சென்றது.  சன் டிவி ராஜாவை பணி இடைநீக்கம் செய்ததோடு, புகார் கொடுத்த அகிலாவையும் பணி நீக்கம் செய்தது.  சன் டிவி ராஜா மீது, விசாகா கமிட்டியின் படி ஒரு விசாரணை நடைபெற்ற அதே நேரத்திலேயே, புகாரளித்த அகிலா மீது தனியாக ஒரு விசாரணையை நடத்தியது சன் டிவி நிர்வாகம்.  சன் டிவியில் ராஜாவுக்கு யார் யாரெல்லாம் ஜால்ராவாக, விசுவாசிகளாக இருந்தார்களோ, அவர்களையெல்லாம் புகாரளித்த அகிலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை நிலைகுலைந்து போகச் செய்யும் வேலையை சன் நிர்வாகம் செய்தது. புகாரளித்த அகிலா நடத்தை சரியில்லாதவர் என்று சன் ஊழியர்கள் மூலமாக செய்திகள் பரப்பப் பட்டன.  சன் டிவி அகிலா மீது நடத்திய விசாரணையே அப்படிப்பட்ட செய்திகள் பரப்பப்பட காரணமாக அமைந்தது.   இறுதியாக புகாரளித்த அகிலா, பதவியை ராஜினாமா செய்யும் வரை சன் நிர்வாகம் ஒயவில்லை.
59922_103295999847890_560997797_n
டெஹல்கா விவகாரம் தொடர்பாக ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரும் மார்க்சிஸ்ட் கட்சி, இணைப்பு சன் நிர்வாகத்துக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட அகிலாவை நிராதரவாக கைவிடும் வகையிலும், சன் டிவி நிர்வாகத்துக்கு எதிராக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்தது.
டெஹல்கா மற்றும் சன் டிவி விவகாரங்கள் வெளி உலகத்துக்கு தெரிந்தவை. ஆனால் வெளியுலகத்துக்கு தெரியாமல் இது போல பல்வேறு பாலியல் வன்முறைகள், மிரட்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.   ஒரு பிரபலமான சம்பவம் நடந்து முடிந்ததும், இதை எப்படித் தடுப்பது என்று பரபரப்பாக நடக்கும் விவாதங்கள் அதன் குறுகிய வாழ்நாளுக்குப் பிறகு காலாவதியாகின்றன. இது போன்ற பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.  டெல்லி மாணவியின் பாலியல் கொலைக்குப் பின் ஏற்பட்ட பரபரப்பான போராட்டங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்ற நீதிபதி, பிரபல பத்திரிக்கையின் ஆசிரியர் போன்றோரே தவறிழைக்கையில், சாதாரண மனிதர்கள் திருந்தி விடுவார்கள் என்று எதிர்ப்பார்ப்பது அறிவீனம்.
டெஹல்கா விவகாரத்தைப் பொறுத்தவரை இது பாரதீய ஜனதா கட்சியின் சதியோ, பெருமுதலாளிகளின் மோசடியோ அல்ல.  ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி, பிரபல தொழில் அதிபர்கள், தலைச்சிறந்த கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், ராபர்ட் டெ நீ ரோ போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களோடு அளவளாவி, தனது திங்க் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதால் தேஜ்பாலுக்கு ஏற்பட்ட ஆணவமே இது.  பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கோரியிருந்தபடி, தேஜ்பால் அந்தப் பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, விசாகா கமிட்டி அமைத்திருந்தால், இந்த விவகாரம் இந்த அளவுக்கு பற்றி எரிந்திருக்குமா என்பது தெரியவில்லை.  ஆனால், தான் செய்தது தவறு என்றே உறைக்காத அளவுக்கு தலைக்கனத்தில் இருந்திருக்கிறார் தேஜ்பால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக