வெள்ளி, 29 நவம்பர், 2013

இடிந்தகரையில் வெடிகுண்டு ! கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு கேள்விக்குறி

நெல்லை: நெல்லை மாவட்டம் இடிந்தகரை சுனாமி காலனியில் கடந்த 26ம் தேதி இரவு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் இடத்தில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் வியாகப்பன், வளன், மகிமைராஜ், சுனாமி காலனியை சேர்ந்த சகாயம் மகள்கள் சுபிக்ஷா (10), சுபிஸ்டன் (2) மற்றும் தொம்மை மனைவி பிரமிளா ஆகியோர் உடல் சிதறி இறந்தனர். இதற்கிடையில் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய அணு உலைக்கு 2 கிலோமீட்டர் அருகிலேயே வெடிகுண்டுகள் தயாரித்தது உயர் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்து தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக டிஜிபி ராமானுஜம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் எஸ்.பி. விஜயேந்திர பிதரியும் சென்னைக்கு அவசரமாக அழைக்கப்பட்டார். தூத்துக்குடி எஸ்பி துரைக்கு நெல்லை மாவட்ட எஸ்பி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை எஸ்பி விஜயேந்திரபிதரி மாற்றப்படக்கூடும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.பி. (பொறுப்பு) துரை தலைமையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்திய உளவுத்துறை போலீசார் கூடங்குளம் வந்துள்ளனர். அணு உலை பாதுகாப்பு குறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளை முழுமையாக அழிக்க அதிரடிப்படையினர் விரைவில் இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இடிந்தகரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை அங்குள்ளவர் கள் எடுத்துச் சென்று கடலில் வீசினர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கடலில் வீசப்பட் டது போலீஸ் விசாரணை யில் தெரிய வந்துள்ளது. மேலும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க வெடிமருந்துகள் அனைத்தும் சிவகாசியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் சிவகாசிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

மணப்பாட்டில் சோதனை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப் பாட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். கடற்கரை மற்றும் அங்குள்ள இரு தரப்பினரின் கல்லறைத்தோட்டம், முக்கியமான கட்டிடங்களில் நடந்த சோதனையில், பெட்ரோல் குண்டுகள், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக