திங்கள், 4 நவம்பர், 2013

சீமாந்த்ரா அரசு ஊழியர்கள் தெலுங்கானாவை விட்டு வெளியேற வேண்டுமாம் ! மீண்டும் சந்திரசேகர ராவ் அடாவடி

ஐதராபாத்: தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட பின்பு, சீமாந்திரா பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் தெலங்கானாவை விட்டு வெளியேற உத்தரவிட வேண்டும் என டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தெலங்கானா தனி மாநிலம் பிரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு இரண்டு முறை கூடி விவாதித்துள்ளது. வரும் 7ம் தேதி மீண்டும் கூடி விவாதிக்க உள்ளது. இதற்கிடையில் தெலங்கானா பிரிப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு ஆந்திராவை சேர்ந்த 8 கட்சிகளுக்கு மத்திய அமைச்சர்கள் குழு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு சில கட்சிகள் பதில் கடிதம் எழுதியுள்ளன.   


இந்நிலையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர், சீமாந்திரா பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் தெலங்கானாவை விட்டு வெளியேற உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். தெலங்கானா மற்றும் சீமாந்திரா மாநிலங்களுக்கு பொது தலைநகராக ஐதராபாத்தை 10 ஆண்டுகள் வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டுமே ஐதராபாத்தை பொது தலைநகராக விட்டுக் கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா உருவாக்க சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் சந்திரசேகர ராவின் கடிதம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2014 மக்களவை தேர்தல் வரை தெலங்கானா பிரச்னையை கிடப்பில் போட வேண்டும் என தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக