திங்கள், 4 நவம்பர், 2013

தீபாவளி மதுவிற்பனையில் தமிழகம் சாதனை ! குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதிலும் தமிழகம் சாதனை ! மக்களே பெருமை,,படுங்கள்

தீபாவளியை மக்கள் உற்சாகமாக கொண்டாடி முடித்துள்ளனர். இதைத்
தொடர்ந்து, இன்று வெளியான நாளிதழ்களில் சிந்திக்க தூண்டும் வகையில் மூன்று செய்திகள். ஒன்று, தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் மட்டும் இது வரை இல்லாத அளவுக்கு ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை மது விற்பனையாகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதன் விற்பனை சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.90 கோடி வரை உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ரூ.90 கோடியும், சனிக்கிழமை ரூ.160 கோடியும், நேற்று ரூ.120 கோடியுமாக கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் ரூ.370 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
இரண்டாவது செய்தி, சென்னையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக ஒரு மாதத்தில் 486 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தகவல். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, போதையில் வாகனம் ஓட்டுபவர்களில் 10ல் ஒருவர் அல்லது 20ல் ஒருவர் மீதுதான் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பலர் போலீசாரிடம் சிக்குவதில்லை என்பதுதான்.


மூன்றாவது செய்தி, தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி. சென்னை துரைப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா ஒருவர் வெட்டி படுகொலை. திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 12 பேர் படுகொலை. மதுரை மாவட்டத்தில் 3 பேர், நெல்லை, வேலூரில் தலா 2 பேர், தூத்துக்குடி, கோவை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் தலா ஒருவர் படுகொலை. இப்படி பட்டியல் போகிறது.

இந்த செய்திகளை படிப்பவர்கள் அனைவருக்கும், ‘போதையில் தமிழகம் தள்ளாடுகிறதோ’ என்று கவலை ஏற்படுவது இயற்கை. போதையால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் பெருகுகின்றன. சட்டம்&ஒழுங்கு சீர்குலைகிறது, வாகன விபத்துகள் அதிகரிக்கின்றன என்பதை எல்லாம் யாரும் மறுக்கவும் முடியாது. இந்த நிலைமை எப்போது மாறும், யாரால் மாற்றப்படும், எப்படி மாற்றப்பட வேண்டும் என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, டாஸ்மாக் வருமானத்தை தமிழக அரசு எதிர்பார்க்காத நிலைமை முதலில் வர வேண்டும். அதுவே ‘போதைக்கு’ முற்றுப்புள்ளி வைக்கும் முதல் அடியாக இருக்கும். - .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக