வியாழன், 28 நவம்பர், 2013

சிதம்பரம் கோயிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் முயற்சி !

ஜெயா - தீட்சிதர்கள்
சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு எதிராக, தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து பிப்ரவரி 2009-ல் உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து உண்டியலே இல்லாத அந்தக் கோயிலில் முதன் முறையாக இந்து அறநிலையத்துறை உண்டியலை வைத்தது. கோயிலை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சிதம்பரம் நடராசர் கோயில்
இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்திலேயே தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டில் தீட்சிதர்களுடன் சுப்பிரமணிய சாமியும் ஒரு மனுதாரராக இணைந்து கொண்டார். இவர்களது மேல்முறையீட்டையும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்து தீர்ப்பளித்தது.  அதன் பின்னர் தீட்சிதர்களும் சுப்பிரமணிய சாமியும் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு 25.11.2013 அன்று விசாரணை தொடங்கியது. இன்றும் வாதம் தொடர இருக்கிறது.

தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடுவதற்கான போராட்டத்தை முன்நின்று நடத்திய நாங்கள், சிவனடியார் ஆறுமுகசாமியை மனுதாரராக கொண்டு 2008 இலேயே இந்த வழக்கில் உயர்நீதி மன்றத்தில் இணைந்து கொண்டோம். பல ஆண்டுகளாக மீளா உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த இந்த வழக்கைத் தட்டியெழுப்பி விசாரணைக்கு கொண்டு வந்து, வெற்றியும் ஈட்டினோம். இதன் தொடர்ச்சியாக தீட்சிதர்களின் மேல் முறையீட்டுக்கு எதிராகத் தற்போது உச்ச நீதிமன்றத்திலும் நாங்கள் தலையிட்டிருக்கிறோம்.
சிதம்பரம் கோயில்கோயிலை இந்து அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி மீண்டும் தங்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்பது தீட்சிதர்களின் கோரிக்கை. கோயில் தங்கள் வகையறாவின் தனிச்சொத்து என்பது அவர்களது வாதம். ஆனால் கோயிலின் மீது அவர்களுடைய உரிமையை நிருபிப்பதற்கான ஒரு சிறிய சான்று கூட அவர்களிடம் கிடையாது என்ற வரலாற்று உண்மையை 1890-ல் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் முத்துசாமி அய்யர்,செப்பேர்டு ஆகியோர் தீர்ப்பாக கூறியுள்ளனர்.
தில்லைக்கோயில் மக்களுடைய பணத்தில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. எனவே கோயிலும் அதன் நகைகள் மற்றும் நிலங்களும் பொதுச்சொத்துகள். தீட்சிதர்கள் எனப்படுபவர்கள் அக்கோயிலின் அர்ச்சகர்கள் மட்டுமே என்பது எங்களது வாதம். இந்து அறநிலையத்துறையின் வாதமும் அதுதான்.
இந்த வழக்கில் தலையிட்டுள்ள சுப்பிரமணிய சாமி மூன்று வாதங்களை முன்வைத்திருக்கிறார்.
கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.
சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடுவது, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாகும் என்பதால், தமிழ் பாடுவதை தடை செய்யவேண்டும்.
தமிழ்நாடு அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு எண் 45 இன் படி இந்துக் கோயில்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகளை நியமிப்பது, இந்துக்களின் மத உரிமையில் தலையிடுவதாகும் என்பதால் அந்தப் பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும்
சுப்பிரமணிய சாமி, தீட்சிதர்களுடன் இணைந்து முன்வைக்கும் இந்தக் கோரிக்கைகள் சங்க பரிவாரத்தின் கோரிக்கைகள் ஆகும். இந்து அறநிலையத் துறையைக் கலைத்து விட்டு எல்லாக் கோயில்களையும் பரம்பரை அறங்காவலர்களின் தனிச் சொத்தாக்க வேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கைதான் இவ்வழக்கில் எழுப்பப் படுகிறது.
2009-ம் ஆண்டு ஜெயலலிதாவைச் சந்தித்த சிதம்பரம் தீட்சிதர்கள்.
தமிழ்நாடு அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு எண் 45 அகற்றப்படுமானால், சிதம்பரம் கோயில் மட்டுமின்றி, எல்லாக் கோயில்களிலும் நிர்வாக அதிகாரிகள் அகற்றப்பட்டு கோயில்கள் அனைத்தும் மீண்டும் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றப்பட்டு விடும்.
ஏற்கெனவே தமிழக அரசு இந்த திசையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் நாத்திகர்களின் உரிமையை ரத்து செய்வது, அறநிலையத்துறையின் பணி நியமனத்தில் நாத்திகர்களை அகற்றுவது, கோயில் பிரசாதங்கள் தயாரிக்கும் பணிகளுக்கு “பார்ப்பனர் மட்டும்” என்று விளம்பரம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப் படுகின்றன.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு திமுக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு மதுரை கோயில் சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான பார்ப்பனரல்லாத அர்ச்சக மாணவர்கள் ஆலயத் தீண்டாமையின் காரணமாக வெளியில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 2006-ம் ஆண்டு முதல் அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உறங்குகிறது. தமிழக அரசு அந்த வழக்கை முடித்து அர்ச்சக மாணவர்களை நியமிக்க வழி காணாமல், வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் 2009-ல் போடப்பட்ட தீட்சிதர்களின் மேல் முறையீடு உடனே விசாரணைக்கு வந்திருக்கிறது.
தமிழ்நாடு என்பது திராவிடர்களும் நாத்திகர்களும் ஆளும் காடு என்பதைப் போலவும், இங்க பக்தர்களும் பார்ப்பன சமூகத்தினரும் சொல்லொணாக் கொடுங்கோன்மைக்கு ஆளாக்கப்பட்டு வருவதைப் போலவும் ஒரு சித்திரத்தை தனது வாதங்களின் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணிய சாமி. தீட்சிதர்களின் தரப்பில் பல மூத்த வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
நாங்கள் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக இணைந்து கொண்டிருப்பதால், மூத்த வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தியிருப்பதுடன், எமது வழக்குரைஞர்களை டெல்லிக்கு அனுப்பி வழக்கு தொடர்பான பணிகளை கவனித்து வருகிறோம்.
இந்த வழக்கின் முதல் எதிர் மனுதாரரான தமிழக அரசோ வழக்கை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது. 2009-ல் திமுக ஆட்சியில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி  சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டபோது, போயஸ் தோட்டத்துக்கே சென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் தீட்சிதர்கள். தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு காட்டி வரும் அலட்சியம் உள்நோக்கம் கொண்டது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
திராவிட இயக்க கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாகக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களும், ஆலயத்தீண்டாமையை எதிர்ப்பவர்களும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களும் தமிழக அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதைப் பாரம்பரியத்தையும், தமிழ் உணர்வையும் எதிர்த்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகனும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்களும் வெற்றி பெறுவதை நாம் அனுமதிக்க கூடாது.
இப்படிக்கு
உண்மையுடன்
(சி.ராஜு)மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு,விருத்தாசலம்,கடலூர் மாவட்டம்.
94432 60164, hrpctn@gmail.com103,ஆர்மேனியன் தெரு,பாரிமுனை,சென்னை. 9489235314.
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக