புதன், 27 நவம்பர், 2013

அனைவருக்கும் சம்பளம் : சுவிஸ் மக்களின் சோஷலிசப் புரட்சி

 Switzerland will hold a vote on whether to introduce a basic income for all adults, in a further sign of growing public activism over pay inequality since the financial crisis.
A grassroots committee is calling for all adults in Switzerland to receive an unconditional income of 2,500 Swiss francs ($2,800) per month from the state, with the aim of providing a financial safety net for the population.
சுவிட்சர்லாந்து  நாட்டில், ஒரு  அமைதியான  சோஷலிசப்  புரட்சி   நடந்து கொண்டிருக்கிறதா? சுவிட்சர்லாந்தை  ‘முதலாளிகளின் சொர்க்கபுரி என்று அழைக்கலாம். அங்கு அகதியாக சென்று, கொஞ்சம் பணத்தை சேர்த்து, வசதியாக வாழும்  தமிழர்கள் கூட,  முதலாளித்துவத்திற்கு   ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர். பூர்வீக சுவிஸ் மக்களை விட, குறைவாக சம்பாதிக்கும் தமிழ் தொழிலாளர் வர்க்கம், தங்களை விட இருநூறு மடங்கு அதிகமாக சம்பாதிக்கும், முதலாளிகளுக்கு ஆதரவாகப் பேசுவது வெட்கக் கேடு. உலகில் இதைவிட மோசமான பாமரத்தனம் இருக்க முடியாது.
‘கம்யூனிச நாடு’ என்றால்,  ‘கிறிஸ்தவ நாடு, முஸ்லிம் நாடு என்பது போல’ ‘ஒரு மதம் சம்பந்தப் பட்ட விடயம் ’  என்று, சிலர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்பட்ட முன்னாள் சோஷலிச நாடுகளில் மட்டும் தான், சோஷலிச பொருளாதாரம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டுமென்பதில்லை.
அது ஒரு மேற்கத்திய முதலாளித்துவ நாட்டிலும் நடக்கலாம். அதை அவர்கள் வேறு பெயர்களில் அழைக்கலாம். விஷயம் ஒன்று தான். ஆனால், ஒரு முதலாளித்துவ நாட்டில் வாழும் மக்கள் கூட, சோஷலிச பொருளாதாரத்தை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

கடந்த நூறு வருடங்களாகவே, சுவிட்சர்லாந்து மக்களில் ஒரு பிரிவினர் தீவிர இடதுசாரிகள் ஆக இருந்து வந்துள்ளனர். சுவிஸ் ஜனநாயக அமைப்பினுள், அவர்களின் பங்களிப்பையும் நிராகரிக்க முடியாது. சுவிஸ் அரசும் தனது ஜனநாயகத்  தன்மையை  பேணுவதற்காக அவர்களை அங்கீகரித்து வருகின்றது. இல்லாவிட்டால், லெனின் போன்ற ரஷ்ய கம்யூனிஸ்டு அகதிகளுக்கு சுவிட்சர்லாந்து அடைக்கலம் கொடுத்திருக்குமா?
2008 ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியினால், UBS என்ற மிகப்பெரிய சுவிஸ் வங்கி திவாலானது. அதனை மீட்பதற்கு சுவிஸ் அரசு, பெருமளவு நிதி வழங்கியது. அதே நேரம், திவாலான வங்கியின் நிர்வாகிகள் பெருந்தொகை பணத்தை போனசாக எடுத்துக் கொள்ளத் தயங்கவில்லை. அந்த சம்பவங்கள், சுவிஸ் மக்கள் மத்தியில் வங்கி முதலாளிகளுக்கு எதிரான வெறுப்புணர்வை உண்டாக்கின.
சுவிஸ் மக்களை, பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக, வலதுசாரிக் கட்சிகள் « இஸ்லாமிய எதிர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு, மசூதிப் பிரச்சினை, கிரிமினல் வெளிநாட்டவர்கள்… » என்பன போன்ற பிரச்சனைகளை பற்றி பேசி வந்துள்ளன. அந்தக் கட்சிகளுக்கு பின்னால் பெரும் முதலாளிகளின் கரம் இருப்பது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால், அண்மைக் காலமாக, வலதுசாரிகளின் விஷமத்தனமான பிரச்சாரங்களையும் மீறி, இடதுசாரிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகின்றது.
சுவிட்சர்லாந்தில் வேலை செய்வோர், வேலையில்லாதவர் அனைவருக்கும், ஒரு குறிப்பிட்ட அடிப்படை சம்பளம் கிடைக்க வேண்டும் என்று, இடதுசாரிகள் வைத்த கோரிக்கை, அரசினால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அடுத்த வருடம் அதற்கான தேர்தல் நடைபெறும். பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நடைமுறைக்கு வரும். இந்த வருடம் வேறு இரண்டு முக்கியமான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கும் நிர்வாகிகளின் போனஸ், மற்றும் சம்பளங்களை குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை. அதற்கும் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
24.11.2013 அன்று, அதற்காக சுவிட்சர்லாந்து முழுவதும் வாக்கெடுப்பு நடந்தது. நிறுவனங்களின், உயர் அதிகாரிகள், நிர்வாகிகளின் சம்பளங்களை குறைப்பது தொடர்பான தேர்தல் அது. கடந்த முப்பதாண்டு காலமாக, ஒரு நிறுவனத்தில் பணியாற்றும், சாதாரண சுவிஸ் உழைப்பாளிக்கும், தலைமை நிர்வாகிக்கும் இடையிலான சம்பள விகிதம் அதிகரித்து வந்துள்ளது. சில நிறுவனங்களில், இருநூறு மடங்கு அதிகமாக சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.
பொதுவான கணிப்பின் படி, தொழிலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையிலான சம்பள வேறுபாடு 1:12 என்ற விகிதாசாரத்தில் உள்ளது. அந்த வேறுபாட்டை குறைப்பதற்கான தேர்தல் தான், 24.11.2013 அன்று நடைபெற்றது. தேர்தலில் போதுமான அளவு மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. ஆனாலும், சுவிஸ் அரசுக்கும், சுவிஸ் முதலாளிகளுக்கும் ஒரு செய்தியைக கடுமையான தொனியில் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒரு அமைதியான புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. சுவிஸ் மக்கள் சோஷலிசத்தை விரும்புகின்றனர்.
***************
தனியொரு மனிதனுக்கு பணமில்லையெனில் சட்டத்தை மாற்றிடுவோம்!
வாக்கெடுப்புக்கு தயாராகும் சுவிஸ் மக்கள்
சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வதற்கு அவசியமான அடிப்படை வருமானத்தைக் கோரும் வாக்கெடுப்பில், சுவிஸ் மக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த நாட்டில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை ஈடுகட்டி, ஒரு தனிநபர் வளமாக வாழ்வதற்கு   மாதாந்தம் 2.500 சுவிஸ் பிராங்குகள் ($2,800, 2.030 euro) தேவைப் படுகின்றது.

தொழில் செய்பவர்கள் மட்டுமல்லாது, வேலை வாய்ப்பற்றவர்களும் அந்தத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு உரிமை உடையவர்கள். இந்தக் கோரிக்கையை முன்வைத்து, தன்னார்வ நிறுவனம் ஒன்று பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தியது. சுவிஸ் சட்டப் படி, ஒரு இலட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கினால், அதற்கான வாக்கெடுப்பை கோர முடியும்.
‘சுவிட்சர்லாந்து ஒரு பணக்கார நாடென்பதால், மக்கள் சொகுசாக வாழ நினைக்கிறார்கள்’ என்று யாரும் தவறாக எண்ணி விடக் கூடாது. உலக நாடுகளை பாதித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு சுவிட்சர்லாந்தும் தப்பவில்லை. அந்த நாட்டிலும், ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது.
பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்க மக்கள் தான், அடிப்படை வருமானக் கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளனர். சுவிஸ் சமூகத்தில் ஒரு தனி நபரின் உழைப்பிற்கு கிடைக்கும் விலை, அதற்கு ஈடான வாழ்க்கைச் செலவினம், இவற்றை சீர்தூக்கிப் பார்த்து விட்டே, அடிப்படை வருமானம் குறித்த தொகையை தீர்மானித்ததாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜையும், வேலை செய்கிறாரோ இல்லையோ, 2.500 சுவிஸ் பிராங்குகள் மாத வருமானமாக பெறுவதற்கு தகுதியுடையவர் என்று சட்டம் இயற்றப்படும். இதனால் மக்களிடையே சோம்பேறித்தனம் அதிகரிக்கும், வேலை தேட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படாது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் எதிர்த்து வருகின்றனர். அது உண்மையா? மேற்குலகில் வேறெங்காவது இது போன்ற சட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளதா?
1974 ம் ஆண்டு, கனடாவில், Dauphin என்ற நகரத்தில், இது போன்ற பரிசோதனை முயற்சி ஒன்று நடந்துள்ளது. அந்த நகரத்தில் வாழும் ஒவ்வொருவரும், வறுமைக் கோட்டுக்கு மேலே வருமானம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். « Mincome » என்ற பெயரிலான அந்தத் திட்டம், நான்கு வருடங்கள் நீடித்தது. அதன் மொத்த செலவு 17 மில்லியன் டாலர்கள். பல வருடங்களுக்குப் பின்னர், Manitoba பல்கலைக்கழக பேராசிரியர் Evelyn Forget அது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையின் முடிவுகளைக் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள். « Mincome » திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்ட காலத்தில், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தது. எல்லோரும் ஒழுங்காக வேலைக்குப் போய் வந்தார்கள். மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருந்தது. எல்லா மாணவர்களும் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகமளித்தார்கள். யாருமே படிப்பை இடைநடுவில் நிறுத்தி விட்டு விலகவில்லை. இது எல்லாவற்றையும் விட, அந்த நகரத்தில் மிக மிகக் குறைந்தளவு குற்றச் செயல்களே பதிவு செய்யப் பட்டன.
இதனை நம்பாதவர்கள், அறிக்கையை படித்து தெரிந்து கொள்ளவும். (THE TOWN WITH NO POVERTY; http://www.livableincome.org/rMM-EForget08.pdf) எதற்காக, உலகம் முழுவதும் வாழும் மக்கள், சோஷலிசப் பொருளாதார கொள்கையை சிறந்ததாக எண்ணுகின்றனர் என்பது, இப்போது ஓரளவு புரிந்திருக்கும்.
-கலையரசன்- ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக