வெள்ளி, 15 நவம்பர், 2013

திமுக மைனரிடியாக இருந்து செய்த சாதனைகளை அதிமுக மெஜாரிட்டி யாக இருந்து குட்டிசுவராக்குகிறது

துக்கையாண்டிக்குத் தொல்லை தொடருமா? :
கலைஞர் கேள்வி - பதில்
கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் இந்த ஆட்சியினருக்கு நீதிமன்றக் கண்டனங்கள்,அவமதிப்பு வழக்குகள் என்பது தொடர் கதையாக இருந்து கொண்டிருக்கிறதே?
கலைஞர் :- ஆமாம், இரண்டு நாட்களில் வந்த செய்திகளை மட்டும் பார்த்தால், மக்கள் நலப்பணியாளர்கள் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அணில்தவே, தீபக்மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு; கூடுதல் டி.ஜி.பி., துக்கையாண்டி ஐ.பி.எஸ். அவர்களுக்கு மத்திய தீர்ப்பாயத்தின் நீதிபதி வெங்கட்ராவ் மற்றும் உறுப்பினர் பிரபாகர் ஆகியோர் அளித்த ஆணை; “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகை மீது போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கின்மீது, நீதிபதி கே.கே. சசிதரன் அளித்த தீர்ப்பில், “அரசுப் பதவிகளில் இருப்ப வர்கள், தங்களைப் பற்றிய குறைகள் கூறப்படு வதற்கு இடம் கொடுக்க வேண்டும்.

அரசு நடவடிக்கையில் ஒரு அடிப்படைத் தவறை பத்திரிகை சுட்டிக் காட்டினால், அதை அவதூறாகக் கருத முடியாது” என்று தெரிவித்துள்ள உத்தரவு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல், சவுடு மண் சுரங்கத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்த கண்டனம்; “குரூப் - 1 பணி நியமனம் பற்றி அரசினர் தரப்பு விளக்கம் திருப்தியாக இல்லை, இட ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலைப் பின்பற்றவில்லை, அரசின் நிலை பற்றி தெளிவாகத் தெரிவிக்கவில்லை” என்றெல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.நாக முத்து அளித்த உத்தரவு போன்றவை, அ.தி.மு.க. வினரின் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட புகழாரங்கள் என்று கருதலாம்!
கேள்வி:- தி.மு.கழக ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட “செம்மொழிப் பூங்கா”, “தொல் காப்பியப்பூங்கா”, கோவையில் “செம்மொழிப் பூங்கா”, சென்னையில் “மூலிகைப் பூங்கா” , “வள்ளுவர்கோட்டம்”, “பேரறிஞர் அண்ணா நினைவு நூலகம்”, போன்றவைகளைப் பராமரிக்காமல் விட்டிருப்பதைப் போலவே, அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில், கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட “அண்ணா நூற்றாண்டுப் பூங்கா”வையும் பராமரிக்காமல் விட்டிருக்கிறார்களாமே?
கலைஞர் :- ஆமாம்; “அம்மா”விற்கு “செம்மொழி”யான தமிழ் எவ்வாறு பிடிப்பது இல்லை யோ,அதைப்போலவே தமிழ் பெயர்களால் அமைந்தவைகளும் பிடிப்பதில்லை. தி.மு. கழக ஆட்சியின்போது, 26-9-2009 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது அறிவிக்கப்பட்டு, இரண்டரை கோடி ரூபாய்ச் செலவில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டதுதான் “அறிஞர் அண்ணா நூற்றாண்டுப் பூங்கா”.

2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் பூங்கா அந்த மாவட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசனால் திறந்து வைக்கப்பட்டு, அந்தப் பகுதி மக்கள் எல்லாம் அந்தப் பூங்காவினைச் சிறப்பாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்தப் பூங்கா கவனிக்கப்படாமல், பராமரிக்கப் படாமல் விடப்பட்டது.

தற்போது இந்தப் பூங்காவில் இருந்த “அண்ணாசிலை”யே மாயமாகி விட்டதாம். அந்த சிலை இருந்த பீடம் மட்டும் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற
அண்ணாவின் பொன் மொழிகளைத் தாங்கி நிற்கிறதாம். இந்தச் செய்தி முரசொலியில் வெளிவந்த இரண்டு நாட்களுக்குள், காஞ்சிபுரம் நகராட்சி அந்தப் பூங்காவின் பராமரிப்புப் பணிகளை மேற் கொண்டிருப்பதோடு, மாயமான வெண்கலச் சிலைக்குப் பதிலாக காகித அட்டையிலான அண்ணா சிலையை அந்த
இடத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்களாம்.
அந்தப் புகைப்படங் களையும் அப்படியே “முரசொலி”யில் தனியாக வெளியிட்டிருக்கிறார்கள். அண்ணா அவர்களைக் கொடியிலே மட்டும்
வைத்திருப்பவர்கள் ஆட்சியில் இப்படித்தான் நிகடிநச்சிகள் நடைபெறும்!

கேள்வி :- சில நாட்களுக்கு முன்பு தமிழகச் சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா மின்சாரம் பற்றிப் பேசியதற்கும், தற்போது உள்ள நிலைமைக்கும் ஏராளமான வேறுபாடு உள்ளதே?
கலைஞர் :- முதலமைச்சர் மின் தட்டுப்பாடு குறித்து 21-10-2013 அன்று நீண்ட விளக்கம்
அளித்ததோடு, தேவையில்லாமல் நம்மையும் வம்புக்கு இழுத்து, “முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலை நோக்கற்ற பார்வை, நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூடிநகியது” என்று நம்மைக் குற்றம் சாட்டிவிட்டு, “இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும்” என்றும் தெரிவித்து, அதையே கொட்டை எழுத்துக் களில் ஒருசில தமிழ்நாட்டு நாளேடுகள் வெளியிட்டு முதலமைச்சரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின.
 முதலமைச்சரின்  குற்றச்சாட்டுகளுக்கு மறுநாளே நான் ஒன்றரைப் பக்கத்திற்கு விளக்கம் அளித் திருந்தேன். தமிழ்நாட்டு மின் நிலை குறித்து இதோ; 13-11-2013 தேதிய “தி இந்து” (தமிழ்) நாளிழ், “காற்றாலை, மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி சரிவு - தமிழகத்தில் மின்வெட்டு 6 மணி நேரமாக அதிகரிப்பு” என்ற தலைப்பில்
வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த அக்டோபருடன் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் முடிந்ததால் மீண்டும் மின் தட்டுப்பாடு தலை தூக்கியுள்ளது. தமிழக மின் நிலையங்களிலும், மத்திய பொதுத் துறை மின் நிலையங்களிலும், அடிக்கடி தொழில் நுட்ப மற்றும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியாமல் மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மணிக்கணக்கில் மின் விநியோகம் நிறுத்தப்படு கிறது. முதலில் தினமும் 2 மணி நேரமாக இருந்த மின் வெட்டு நேரம், படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த இரு தினங்களாக 6 மணி நேரம் வரை அமல்படுத்தப்படுவதாக பொதுமக்கள்
குற்றம் சாட்டுகின்றனர்.
மின் வெட்டு இனி இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மொத்தம் 11 அலகுகளில் 2,740 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப் பட்டது. மேலும், காற்றாலைகளில் 50 முதல் 100 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது” என்று குறிப்பிட்டுள்ளது.
இன்றைய (14-11-2013) “இந்து” ஆங்கில நாளிதழிலே கூட,  மின்வெட்டு நேரம் இடத்திற்கு ஏற்றவாறு உள்ளது என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த நிலை நீடிக்கலாம் என்றும் பெரிதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறும் என்று கூறியபோது அதைக் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்ட ஒரு சில நாளேடுகளில், மாவட்டங்களில் மணிக் கணக்கில் மின்  விநியோகம் நிறுத்தப்படுகிறது என்ற இந்தச் செய்தி மட்டும் வெளியிடாத காரணம் என்னவோ?

கேள்வி:- போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்திட தமிழக அரசு தாமதிக்கின்ற காரணத்தால், வேலை நிறுத்தம் செய்வதா  இல்லையா என்பதைப் பற்றி முடிவெடுக்க போக்குவரத்துக் கழகத் தோழர்களிடையே தொ.மு.ச.  சார்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப் பின் முடிவென்ன?
கலைஞர் :- அந்த விவரம் ஏடுகளிலேயே வெளி வந்திருக்கிறதே! தமிழகம் முழுவதுமுள்ள 288 அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை களிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப் புக்கு ஆதரவாக தொ.மு.ச.வினரும், எதிராக ஆளுங்கட்சியினரும் பிரச்சாரம் செய்தார்கள்.  போக்குவரத்துக்கழக மொத்த ஊழியர்கள் 1,27,716 பேர். வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் 96,546  பேர். அதாவது 76 சதவிகிதம் பேர்.
வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று வாக்களித் தவர்கள்  மட்டும் 83,211 பேர். வேண்டாம் என்று வாக்களித்தவர்கள் 8,427 பேர். மொத்த ஊழியர் களில் வேலை  நிறுத்தம் செய்யவேண்டுமென்று வாக்களித்தவர்கள் 65 சதவிகிதம் பேர்களாகும். வேண்டாமென்று வாக்களித்தவர்கள் 6.59 சதவிகி தம் மட்டுமே! வாக்களித்தவர்களில், வேலை நிறுத்தம் செய்ய  வேண்டுமென்று வாக்களித்த வர்கள் 86.19 சதவிகிதம் பேர். வேலை நிறுத்தம் செய்ய வேண்டாமென்று வாக்களித்தவர்கள் 8.79 சதவிகிதம் பேர்.
இதைப்பற்றி தொ.மு.ச. பேரவையின் மாநிலப் பொதுச்  செயலாளர் சண்முகம்
விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

கேள்வி:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 189 கோடியே 54 லட்சம் செலவில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 13 மேம்பாலங் களையும், பாலங்களையும் காணொலிக்  காட்சி மூலமாகத் திறந்து வைத்தார் என்ற செய்தியைப் பார்த்தீர்களா?

கலைஞர்:- ஏடுகளில் வெளிவந்த அதுபற்றிய செய்தியைப் படித்தேன். ஆனால் அந்த மேம்பாலங்களும், பாலங்களும் கட்டத் திட்டமிடப்பட்டது, கட்டப்பட்டது என்ற செய்தியை மட்டும், தெரிவிக் காமல் விட்டு விட்டார்கள். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அல்லது ஆளுநர்  உரையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களா அல்லது முதலமைச் சர் அன்றாடம் 110வது விதியின் கீழ் படித்த  அறிக்கைகளிலே
அறிவிக்கப்பட்ட திட்டங்களா என்பதை ஏன் வெளியிடவில்லை? அந்த மேம்பாலங் களும், பாலங்களும் தி.மு.கழக ஆட்சியிலே அறிவிக்கப்பட்ட திட்டங்களா? இன்னும் ஒரு வேடிக்கை!

தென்காசியில் ஒரு மேம்பாலம். தி.மு. கழக ஆட்சியிலே கட்டப்பட்டு, நீண்ட நாட்களாகியும் அதனைத்திறந்து வைக்காமல் வைத்திருந்தார் கள். தென்காசி மக்களின் 50 ஆண்டுக் காலக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் சார்பில் 16 கோடி ரூபாயையும், மத்திய அரசிடம் கேட்டுப் பெற்ற 16  கோடி ரூபாயையும் கொண்டு 32 கோடி ரூபாயில் அந்த ரெயில்வே மேம்பாலம் அமைக்க முடிவெடுத்து, 14-10-2009 அன்று
துணை முதல்வராக இருந்த தம்பி ஸ்டாலின் தென்காசி சென்று, அந்தப் பணிகளைத் துவக்கி வைத்தார்.

தென்காசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வீ.கருப்பசாமி பாண்டியன் முயற்சியினால் அங்கே மேம்பாலம் விரைவாக முடிக்கப்பட்டது. அவ்வாறு விரைவாக மேம்பாலப் பணிகள்  கட்டி முடிந்த போதிலும், அதனைத் திறக்காமல் பல மாதங்களாக விட்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப்  பார்த்த பொதுமக்கள்
கடந்த 8ஆம் தேதி தாங்களாகவே திறந்து வைத்துக்கொண்டு, அதனைப் பயன் படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இவ்வாறு பொதுமக்கள் தாங்களாகத் திறந்து வைத்துக் கொண்ட தென்காசி மேம்பாலத்தையும் சேர்த்துத் தான் முதல் அமைச்சர் 11-11-2013 அன்று திறந்து  வைத்ததாக, அரசு செய்தி வெளியீட்டில் தெரி வித்திருக்கிறார்கள்.

கேள்வி:- தமிழக அமைச்சரவையில் திடீரென்று செய்யப்பட்ட மாற்றம் குறித்தும்,
பதவியிலிருந்து அனுப்பப்படுவார் என்று கூறப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு மேலும் ஒருமுக்கியமான துறை வழங்கப் பட்டது குறித்தும் உங்கள் கருத்து என்ன?
கலைஞர் :- கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அமைச்சரவையில் மாற்றம் செய்தார்கள். தற்போது பொதுப்பணித் துறையை எடுத்து, நிதித் துறை அமைச்சரிடம் வழங்கியிருக்கிறார்கள். அக்டோபர் இறுதியில் நடைபெற்ற துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த  நிதியமைச்சர் பன்னீர்செல்வம்
தேவையில்லாமல் என்னைப் பற்றி, “எனக்குத் திரும்பிய பக்கம் எல்லாம் குழி தோண்டப் படுகிறது” என்றும், “பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு” என்றும் பேரவையில் விமர்சித்தார். அப்போதே  நான், “அவர் அவ்வாறு பேசியது, ‘அமைச்சரவையிலிருந்து அவர் நீக்கப்படலாம்’ என்று பேசப்படுகிறது, அதிலேயிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் இப்படியெல்லாம் என்னை வசை பாடுகிறார்” என்று கூறியிருந்தேன்.  அவர் அவ்வாறு பேசியதற்குப் பலன்தான் தற்போது மேலும் ஒரு துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது  என்று நினைக்கிறேன்.


இந்த ஆட்சியில் என்னை ஏசுபவர்களுக்குத்தானே பவிசு? அனுபவித்து விட்டுப் போகட்டும்!
கேள்வி :- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, கூடுதல் டி.ஜி.பி.யாக முன்னேறிய துக்கையாண்டி ஐ.பி.எஸ்., அவர்களை அ.தி.மு.க. ஆட்சியினர் பணி ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு “சஸ்பெண்ட்” செய்ததை, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட் டிருக்கிறதே?
கலைஞர் :- மகிழ்ச்சி தருகின்ற ஒரு செய்தி. அந்த நேர்மையான அதிகாரி, தி.மு.கழக ஆட்சிக் காலத்தில், பெங்களூரில் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கினைப் பொறுப்பேற்று நடத்திய ஒரே காரணத்திற்காக அவர் பழி வாங்கப்பட்டார் என்பதுதான் உண்மை. அவர் அந்த வழக்கினை நடத்திய காரணத்தால், ஒரு வேளை அந்த அதிகாரி எனக்கு வேண்டியவர் என்று எண்ணிக் கொண்டார்களோ என்னவோ? அவரை “சஸ்பெண்ட்” செய்தது மாத்திரமல்ல; அவருடைய  குடும்பத்தினரும் வேட்டையாடப் பட்டார்கள். தன்னை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்யக்கோரி, துக்கையாண்டி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் தான், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், “மனுதாரர் துக்கையாண்டி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. குற்றச்  சாட்டுகள் மீது ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்படாத நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து  உத்தரவிட்டது விதிமுறைகளுக்கு முரணானது.

அவரைச் சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் மீதான  குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை அரசு  மேற்கொள்ளலாம்”
என்று உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பினை அவர் பெற்ற காரணத்தினால், அவர் மீதான விசாரணையை இந்த அரசினர்  தீவிரப்படுத்தி என்னென்ன செய்வார்களோ? துக்கையாண்டிக்குத் தொல்லை தொடருமா nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக