வெள்ளி, 15 நவம்பர், 2013

450 குடும்பங்களிடம் 13 ஆயிரம் பவுன் நகைகளை அபேஸ் செய்த பாத்திமா கும்பல் சரண்

ரூ.30 கோடி நகை மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்ட கும்பகோணம் பெண் டி.ஜி.பி. அலுவலகத்தில் சரணடைந்தார். தன் கணவரை கடத்தி விட்டதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
நகைக் கடன்
கும்பகோணம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாத்திமா நாச்சியா. இவருடைய கணவர் தமிமுன் அன்சாரி. இவர்கள் இருவரும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு வட்டி இல்லாமல் கடன் கொடுப்பதாக கூறினர்.
இதைத்தொடர்ந்து பலர் இவர்களிடம் நகைகளை கொடுத்து பணம் வாங்கினர். இந்தநிலையில், ‘எங்கள் தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் லாபத்தில் பங்கு கொடுக்கப்படும் என்றும், நீங்கள் கொடுக்கும் தங்க நகைகளின் அளவுக்கு ஏற்ப பணம் வழங்கப்படும்’ என்ற புதிய திட்டத்தையும் பாத்திமா அறிமுகம் செய்தார்.

நகை மோசடி புகார்
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அவரிடம் கொடுத்தனர். பாத்திமாவும் முதல் 5 மாதங்களுக்கு நகை கொடுத்த அனைவருக்கும் பணத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் அதன்பிறகு யாருக்கும் பாத்திமா சரியாக பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் நகைகளை கொடுத்தவர்கள் தங்களுடைய நகைகளை திருப்பித் தரும்படி பாத்திமாவிடம் கேட்டனர்.
ஆனால் நகைகளை கொடுக்காமல் பாத்திமா மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் நாகப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
ரூ.30 கோடி மோசடி
இதைத்தொடர்ந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த 10 பெண்கள் உள்பட 25 பேர் நேற்றுமுன்தினம் சென்னை வந்து டி.ஜி.பி. அலுவலகத்தில் பாத்திமா மீதும், அவருடைய கணவர் தமிமுன் அன்சாரி மீதும் புகார் கொடுத்தனர்.
அந்த மனுவில், பாத்திமாவும், அவரது கணவரும் சேர்ந்து 450 குடும்பங்களிடம் 13 ஆயிரம் பவுன் நகைகளை (மதிப்பு சுமார் ரூ.30 கோடி) மோசடி செய்துவிட்டதாக கூறி இருந்தனர்.
டி.ஜி.பி. அலுவலகத்தில் சரண்
இந்தநிலையில் மோசடி புகார் கூறப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த பாத்திமா சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சரணடைய வருவதாக மதியம் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து டி.ஜி.பி. அலுவலகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
மதியம் 1 மணியளவில் பாத்திமா தனது வழக்கறிஞர்களுடன் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘எனது கணவர் தமிமுன் அன்சாரியை கடத்தி விட்டனர். என்னை கடத்த முடியாததால் என் கணவரை கடத்தி விட்டனர். இதுதொடர்பாக டி.ஜி.பி. ராமானுஜத்திடம் புகார் கொடுக்க வந்துள்ளேன்’ என்றார்.
23 ஏஜெண்டுகள் தொடர்பு
அதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், உங்கள் மீது 13 ஆயிரம் பவுன் நகை மோசடி புகார் கூறப்பட்டிருக்கிறதே என்று கேட்டனர்.
அதற்கு அவர், ‘அது முற்றிலும் அவதூறான புகார். நான் நகைகளை வாங்கியது உண்மை தான். இந்த தொழிலில் நான் மட்டும் இல்லை, 23 ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து விசாரணை நடத்தும்போது உண்மை தெரியவரும். நான் தலைமறைவாகவில்லை’ என்றபடி டி.ஜி.பி. அலுவலகத்துக்கு உள்ளே வேகமாக சென்றார்.
விசாரணைக்கு வர வேண்டும்
டி.ஜி.பி. ராமானுஜம் அலுவலகத்தில் இல்லாததால், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்தார்.
அப்போது கூடுதல் டி.ஜி.பி.ராஜேந்திரன், ‘பாத்திமாவிடம் உங்கள் கணவர் கடத்தப்பட்ட புகார் தொடர்பாக கும்பகோணம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், உங்கள் மீதான நகை மோசடி புகார் மீது விசாரணைக்கு அழைத்தால் உடனே வர வேண்டும்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக