புதன், 27 நவம்பர், 2013

காஞ்சிபுரம் சங்கர்ராமன் படுகொலை ! 81 பேர் பிறழ் சாட்சியானது எப்படி? காவல்துறை என்ன செய்தது?


பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா? காஞ்சிபுரம் சங்கர்ராமன் படுகொலை வழக்கு:
சங்கராச்சாரியார்கள் உட்பட 25 பேரும் விடுதலையா?
81 பேர் பிறழ் சாட்சியானது எப்படி? காவல்துறை என்ன செய்தது?
தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்!
தமிழ்நாடு அரசின் முடிவைப் பொறுத்து நமது அடுத்த கட்ட நடவடிக்கை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கர்ராமன் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (3.9.2004).
சங்கராச்சாரியார்கள் கைது

இது தொடர்பாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டார் (11.11.2004) ஜெயேந்திரர் 61 நாட்களும், விஜயேந்திரர் 31 நாட்களும் சிறையில் இருந்தனர். மொத்தத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரால் விண்ணப்பிக்கப் பட்டு, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி புதுச்சேரி மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.
பொது மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு -பக்தர்கள் மத்தியிலும் பதற்றம் நிலவியதுண்டு. தொடக்கத்தில் குற்றத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு, அதன்பின் உண்மைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
81 பேர்கள் பிறழ்சாட்சியாம்!
இந்த வழக்கில் அதிர்ச்சிக்குரியது என்னவென்றால் 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான் -ஆக்கப்பட்டதுதான்.
இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சி (Hostile) யானது கிடையாது.
குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் (Prosecution) எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது. புலனாய்வுக்கென்றே காவல்துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர் என்பது அதைவிட முக்கியமானது.
இப்படி பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதும் கூட வழக்குப்பதிவு செய்ய, தண்டிக்க, சட்டத்தில் இடம் உண்டு - இந்த வகையில் காவல்துறை ஏன்செயல்படவில்லை?
25 பேர்களும் விடுதலையாம்!
ஒரு கோயிலில் பட்டப் பகலில் பகிரங்கமாக நடைபெற்ற படுகொலை இது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டத்திலும், நியாயத்திலும் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாக புதுவை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் பெரிய பெரிய சக்திகள் எல்லாம் தலையிடும் என்று எதிர்பார்த்ததுதான்; நீதிபதியிடமே குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் தொலைப்பேசியில் பேசினார் என்பதெல்லாம் என்னாயிற்று என்று தெரியவில்லை.
அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்
இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து அரசு தனது நடவடிக்கையைக் கைவிட்டு விடக் கூடாது, மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்.
இல்லையென்றால் யாரும் எந்தக் குற்றத்தையும் செய்யலாம் - எளிதில் தப்பிவிடலாம் என்ற எண்ணத்தைப் பொது மக்கள் மத்தியில் எளிதில் ஏற்படுத்தி விடும்.
மற்ற மற்ற வழக்குகளில் மிகவும் ஆர்வம் காட்டும் அரசு இந்த மிக முக்கியமான பரவலாகப் பொது மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் மேற்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.
அடுத்து நமது நடவடிக்கை
ஏதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இதனை நாங்கள் கூறவில்லை. நியாயமும், நீதியும், உண்மையும் தோற்றுவிடக் கூடாது என்ற பொது நோக்கோடு இதனை அணுகுகிறோம்.
அடுத்து தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து, மனித உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உரியது செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக