புதன், 27 நவம்பர், 2013

ஏற்காட்டில் அ.தி.மு.க.,வினரின் 2,500 சேலை பறிமுதல் ! ஏவல் துறையாகிவிட்ட காவல் துறை

சேலம் : ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட, மின்னாம்பள்ளி அருகே, அ.தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, மினிடோர் ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட, 2,500 பூனம் சேலைகளை, பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், அவை ஒப்படைக்கப்பட்டன.ஏற்காடு இடைத்தேர்தலுக்கு, இன்னும் ஒரு வாரமே உள்ளதால், தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை, அ.தி.மு.க. - தி.மு.க.,வினர் நேரில் சந்தித்து, பணம், பரிசுப் பொருட்களை வழங்கி, ஓட்டு கேட்டு வருகின்றனர்.அதிகாலையில், வீட்டு கதவை தட்டி, அவற்றை கொடுத்துவிட்டு ஓட்டம் எடுக்கின்றனர். சில நாட்களாக, வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, பணம் வழங்குவது தொகுதியில் சாதாரணமாக நடந்து வருகிறது.பறக்கும் படை குழுவைச் சேர்ந்த அதிகாரிகள், வாகனங்களில் சுற்றிவந்த நிலையிலும், அவர்களுக்கு தெரியாமல் வாக்காளர்களை, "கவனிப்பதை' தைரியமாக செய்து வருகின்றனர். கருமந்துறையில், முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியன் உறவினர் வீட்டில் இருந்து, வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மாசிநாயக்கன்பட்டியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து, வேட்டி, சேலை பறிக்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று காலை, 6:30 மணியளவில், மின்னாம்பள்ளியில் இருந்து செல்லியம்பாளையம் நோக்கி, மினிடோர் ஆட்டோ ஒன்று, அவ்வழியாக வந்த பறக்கும் படை தாசில்தார் வீரப்பனின், வாகனத்துக்கு வழி விடாமல் சென்று கொண்டிருந்தது. அதையடுத்து, அந்த வாகனத்தை நிறுத்தி, அதிகாரிகள் விசாரித்தனர். தார்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் இருந்ததை கண்டறிந்து, அவற்றை பிரித்து பார்த்தபோது, 17 பண்டல் கொண்ட, 2,500க்கும் மேற்பட்ட பூனம் சேலைகள் இருந்தன.தகவல் அறிந்ததும், தி.மு.க.,வினர் அங்கு திரண்டனர். அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவுப் படி, அங்கு சேலை வினியோகிக்க, அ.தி.மு.க.,வினர் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்த வாகனத்துடன், காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு, சேலை இருந்த பண்டல்கள் கொண்டு வரப்பட்டன.அந்த பண்டல்களில், " விநாயகா டெக்ஸ்', ஈரோடு என எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக, ஈரோடு வெங்கடாசலம் தெருவைச் சேர்ந்த ராம்குமார், 35, சக்திவேல், 39, ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர்களிடம் இருந்த பில்லில், தர்மபுரிக்கு ஜவுளி எடுத்து செல்வதாக இருந்தது. தர்மபுரி செல்லும் சேலைகள், தொகுதிக்குள் எப்படி வந்தது, யார் அனுப்பியது என்பது குறித்து, வாழப்பாடி டி.எஸ்.பி., மாதவன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் விசாரிக்கின்றனர். dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக