திங்கள், 28 அக்டோபர், 2013

பிள்ளை, செட்டி, செங்குந்த முதலி, வன்னியர், கள்ளர் என்று ஆளுக்கு ஆள் ஜாதி சங்க வெறியோடு ?Time to delink caste politics in Tamil Nadu

மராட்டிய பால்தாக்ரே வைப் போல், தமிழ்நாட்டு தாக்ரே ஆவதற்கு பலபேர் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். தாக்ரே-மோடி இவர்களின் களம் தலித்-இஸ்லாமிய எதிர்ப்பு. பார்ப்பன மற்றும் இடைநிலை ஜாதிகளிடம் செல்வாக்கு. (தலித் அல்லாத கிறித்துவர்கள் உட்பட)
இது போன்ற முறை தான், தமிழ்நாட்டிலும் இனி வருகிற தேர்தல்களில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தக் கூட்டணியில் ஜாதிக் கட்சிகளோடு தமிழ்த்தேசியக் கட்சிகளும் அணிவகுக்கும்.
ஜாதி இந்துக்கள் செல்வாக்கு பெற்ற மற்ற கட்சிகளும் இந்த முறையையே ஆதரிக்கும். தனக்கு எந்தக் கட்சி அதிக  இடங்கள் தருகிறதோ அந்தக் கட்சியின் கூட்டணிக்குள் தலித் கட்சிகளும் இடம்பெறும்.
ஒவ்வொரு ஜாதி இந்துவும் கோடிக்கணக்காண தாழ்த்தப்பட்ட மக்களைவிட தன்னை உயர்வானவனாக கருதுகிறான் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் கொண்டிருக்கிறான். கூடுதலாக தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னைவிட பொருளாதார ரீதியாக உயர்ந்தால் அவனுடைய காழ்ப்புணர்ச்சி அதிக வேகம் பெற்று வன்முறையாக வடிவம் பெறுகிறது.
ஆனால், தன்னிச்சையாக தலித் மக்கள் மீது வன்முறையை நிகழ்த்துவதற்கு அவன் தயார் இல்லை. அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறான்.
இந்த மனோபாவம் கொண்ட ஜாதி இந்துவின் மனதில், உட்ஜாதி பிரிவுகளாக தனித் தனியாக இருக்கிற தலித் கட்சிகள், ஜாதிக் கட்சிகளாகத்தான் அடையாளமாகிறது. அந்தக் கட்சிகளின் வளர்ச்சி ஜாதி இந்துவின் மனதில் இன்னும் கூடுதல் காழ்ப்புணர்ச்சியாக தலித் விரோத மனோபாவத்தையே ஏற்படுத்துகிறது.
‘தன் ஜாதி’ என்கிற நிலையையும் தாண்டி, ‘தலித் அல்லாதவன்’ என்கிற நிலையாக வடிவம் பெறுகிறான்.
பொதுவாக ஜாதி இந்துக்கள், திருமணம் உட்பட தங்களுக்குள் எந்த வகையான கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடாமல் ஒவ்வொரு ஜாதியும் தனித் தனியாகத்தான் இயங்குகிறது. பார்ப்பனரிலிருந்து பிள்ளை, செட்டி, முதலி, வன்னியர், கள்ளர்  வரை இப்படித்தான்.
இப்படி தனித்தனியாக இயங்குகிற ஜாதிகள், ஒரே ஒரு விசயத்தில் மட்டும் எல்லோரும் ஒரே ஜாதிக்கார்ர்கள் போல்  உணர்ந்து செயல்படுவது, தலித் மக்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி வன்முறைகளின்போதுதான்.
இஸ்லாமியக் கட்சிகளை சுட்டிக் காட்டி, ‘பாத்தியா துளுக்கன் எல்லாம் எவ்வளவு ஒத்துமையா இருக்கான். நம்மகிட்ட அந்த ஒத்துமை கிடையாது’ என்று தன் கட்சிக்கு ஆள் சேர்க்கிற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போல்,
ஜாதி இந்துவிடம், தலித் விரோதமே அவனின் ஜாதி உணர்வாகவும், தன் ஜாதிக்கான அங்கிகாரமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. அந்தத் ‘திருப்பணியை’ சிறப்பாக செய்து முடிக்கின்றன ஜாதிக் கட்சிகளும் மற்றக் கட்சிகளில் இருக்கிற ஜாதி இந்து தலைமையும்.
மிகப் பெரும்பாலும், தலித் மக்கள் மீதான வன்முறைகள் வட்டச் செயலாளர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், கவன்சிலர்கள், முன்னாள் எம்.எல்.ஏ க்கள் இவர்களின் தூண்டுதலின் பெயரில்தான் நடந்திருக்கிறது. நடக்கிறது.
தன் ஜாதி உட்பட, எல்லா ஜாதிகளிலும் எல்லா கட்சிகளிலும் இருக்கிற சமூக விரோதிகளைப் போலவே தலித் ஜாதிகளிலும் தலித் கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் தலித் ஜாதிக்குள் இருக்கிற ஒரு சில ரவுடிகளை ஒட்டுமொத்த தலித் மக்களின் அடையாளமாக மாற்றுவதில்தான் ஜாதி கட்சிகள் தங்களின் அரசியல் செயல்படாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.
ஒரு ரவுடியாக இருக்கிற தலித்தின் செயலும் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் வன்முறை நடத்துகிற ஜாதி இந்துக்களின் ஜாதி வெறியையும் ஒன்றாக அடையாளப்படுத்துகிற மோசடி இன்று தீவிரமான அரசியலாக வடிவம் பெறுகிறது.
‘ஏன்டா எங்க சமூகத்தில இருக்கிற மக்களை எல்லாம் தீண்டாமை செய்து அவமானப்படுத்துகிறீர்கள்?’ என்று தலித் சமூகத்தில் இருக்கிற ஒரு ரவுடி கேட்பதில்லை. மாறாக மத்த ஜாதி ரவுடிகள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் அவரும் செய்கிறார்.
ஆனால், நடைமுறையில், இவர்கள் அந்த சம்பந்தபட்ட ரவுடிகளிடம் எந்த பிரச்சினையும் செய்து கொள்ளாமல் அவர்களுடன் இணைந்து, இவர்களின் சொந்த லாபங்களுக்காக ‘தலித் – தலித் அல்லாத’ கூட்டிணியாக கட்டப் பஞ்சாயத்து அரசியல் செய்கிறார்கள். இந்த இரண்டு ஜாதி ரவுடிகளிடமும் தலித் மக்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தலித் ஜாதியை சேர்ந்த தன்னுடைய ‘பாட்னரோடு’ தொழில் தகராறுகள் முற்றி விட்டால். அவர்களுக்குள் அடித்துக்  கொள்ளாமல், அந்தப் பிரச்சினையை அப்பாவியான எளிய தலித் மக்கள் மீதான தாக்குதலாக மாற்றி விடுகிறார்கள் தலித்தல்லாத ரவுடிகள். இதுதான் தர்மபுரி உட்பட அதற்கு முன்னும் பின்னும் பல ஊர்களில் நடந்தது.
திருட்டு வழக்கில் எல்லா ஜாதிக்காரர்களுமே கைதாகிறார்கள். ஆனால் அதில் ஒருவர் தலித்தாக இருந்தால் அவருக்கு மட்டும் கூடுதலாக நாலு அடி விழும். காவல் துறையினரின் இந்த தாராள மனதுக்குக் காரணம், மற்றவர்களை அடிக்கும்போது அவர்கள் போலிஸ்காரர்களாக மட்டும் இருந்து அடிக்கிறார்கள். அதுவே தலித் இளைஞனாக இருந்தால், அவர்கள் ஜாதி இந்துவாகவும் ‘டபுள் ஆக்சைனில்’ அடிக்கிறார்கள். அது போலத்தான் இந்த ஊடகங்களும் நடந்து கொள்கிறது.
கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரர்களாக இருந்தால், அவர்கள் என்ன ஜாதி என்ற யோசனைக்கே பத்திரிகைகள் செல்வதில்லை. மாறாக அவர் தலித்தாக இருந்தால் ஏதோ ஒரு வகையில் அவரின் ஜாதியை அடையாளப்படுத்தி விடுகிறார்கள் பத்தரிகைகளில் இருக்கிற ஜாதி இந்துக்கள்.
இதுபோலவே, தன் ஜாதிக்காரர்களிடம் செல்வாக்கு பெறுவதற்கும் இழந்துபோன செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கும் தலித் விரோதமே தன் ஜாதியின் வீரமாக சித்திரிக்கறார்கள் ஜாதிக் கட்சிகள். அதனால்தான் தன்னை இழிவாக நடத்துகிற கருதுகிற பார்ப்பன பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்களிடம் அடக்கி வாசிக்கிறார்கள், இடை நிலை ஜாதிப் படியில் கடைசி நிலையில் இருக்கிற ஜாதிகள்.
இதுபோன்ற தலித் விரோத போக்கைத் தடுக்க, குறைக்க ஜாதிக் கட்சிகளின் அரசியல் ரீதியான செல்வாக்கை குறைப்பது தான்  முதல் கட்ட வழி.
இவர்களின் இலக்கு தன் ஜாதி ஓட்டை அப்படியே தனக்கு பெறுவது. அதற்காக எதையும் செய்வார்கள். தன் ஜாதிக்காரர்களிடம் செல்வாக்கு அடைந்துவிட்டால் நம்மை திமுகவோ, அதிமுகவோ அங்கீகரித்து அதிக இடங்கள் தருவார்கள் என்பதே திட்டம்.
தேர்தலில் இவர்களோடு மற்றக் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்வதே இவர்களுக்கான அங்கீகாரம்.
மதசார்பற்ற, ஜாதி சார்ப்பற்ற கட்சிகளாக தங்களை அறிவித்துக் கொள்பவர்கள், தேர்தலில் பா.ஜ.க. வோடு கூட்டணியில்லை என்று பகிரங்கமாக அறிவிப்பதைப்போல்,
ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. அந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கிற கட்சிகளுடனும் ஒருபோதும் கூட்டணி என்ற பேச்சுகே இடமில்லை என்று அறிவிக்க வேண்டும்
இல்லையேல் தமிழ்நாட்டில் தலித் விரோதமும் இஸ்லாமியர் எதிர்ப்பும் சாதரணமான நிகழ்ச்சியாகிவிடும்.
தர்மபுரியில் தலித் மக்கள் வீடுகள் இடிக்கப்பட்டபோது, கேப்டன் நியுஸ் டீவியில், 12.11.2012 அன்று தம்பி வேந்தன் நடத்திய நிகழ்ச்சியில்; நான், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத்திடம்,
“பா.ஜ.க. போன்ற மதவாதக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை அவைகளோடு கூட்டணி வைத்திருக்கிற கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று முடிவு செய்திருப்பதுபோல்-பா.ம.க போன்ற ஜாதிக் கட்சியுடனும் ஜாதிக் கட்சிகளுடன் சேர்ந்திருக்கிற அணியிலும் கூட்டணி இல்லை என்று உங்கள் கட்சி (சி.பி.எம்.) அறிவிக்க வேண்டும். அதுதான் நீங்கள் தர்மபுரி விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. எரியறத புடுங்குனாதான் கொதிக்கிறதை அடக்க முடியும்” என்றேன்.
அதற்கு  தோழர் சம்பத், ‘பா.ம.க வை அப்படி முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது.’ என்று ஒரே போடாய் போட்டு விட்டார். mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக