திங்கள், 28 அக்டோபர், 2013

எனக்கு 2ஜி என்னன்னு தெரியாது. எனக்கு எதுவுமே ஞாபகத்திலும் இல்லை ! தயாளு அம்மையார்

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன் இன்று விசாரணை நடத்தியபோது, 2ஜி என்றால் என்ன என்று தயாளு அம்மாள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கொடுக்கப்பட்டது என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரரான தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. ஆனால் தயாளு அம்மாள் உடல் நிலை சரியில்லை என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தயாளு அம்மாளின் உடல் நிலையை பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவை நியமித்து அனுப்பியது. அவர்கள் தயாளு அம்மாளை பரிசோதித்து டெல்லிக்கு பயணம் செய்யும் நிலையில் அவரது உடல் நிலை தகுதியாக இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து தயாளு அம்மாளின் சாட்சியத்தை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று பதிவு செய்யும்படி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலனிடம் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார். அதன்படி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்த கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்கு நீதிபதி கோபாலன் இன்று காலை 9.50 மணிக்கு சென்றார். அங்கு தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தினார். அவர் கூறிய தகவல்களை சாட்சியமாக பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவுபடி இன்றைய விசாரணையின் போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா சார்பில் அவரது வழக்கறிஞர், கலைஞர் டி.வி. முன்னாள் இயக்குனர் சரத் ரெட்டி ஆகியோரும் ஆஜராகினர். வாக்குமூலம் பதிவு செய்யும்போது 2ஜி என்றால் என்ன என்று தயாளு அம்மாள் கேட்டதோடு, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார். வாக்குமூலம் பதிவின்போது தமிழிலேயே பேசினாராம் தயாளு அம்மாள். இதுகுறித்து விசாரணையின்போது உடன் இருந்த ஒரு தரப்பிலிருந்து கூறுகையில், எனக்கு 2ஜி என்னன்னு தெரியாது. எனக்கு எதுவுமே ஞாபகத்திலும் இல்லை. கலைஞர் டிவி நிர்வாகம் பத்தியும் தெரியாது என்று கூறினாராம் தயாளு அம்மாள். பின்னர் தயாளு அம்மாள் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. எனது குடும்பத்தினர் யாரும் சட்டவிரோதமாக எதிலும் ஈடுபடவில்லை. நான் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக