செவ்வாய், 8 அக்டோபர், 2013

புதுவித சுரண்டல் ! மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது NGO ஆரம்பித்து .......

மகளிர் சுய உதவிக்குழுவேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மாலை 4 மணிக்குள் சோப்புகள் தயாராகி விட்டால் குட்டி யானையில் ஏற்றி நகரத்துக்கு அனுப்பி விடலாம். காலையில் 4 மணிக்கே எழுந்து எல்லோரும் வந்து விட்டார்கள். வீட்டில் சமையல் செய்து வைத்து, தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி புறப்பட வைத்து, சாப்பாடு போட்டு, பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பை கணவன்மார்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து சேர்ந்து விட்ட மூலப் பொருட்களை கூடிய சீக்கிரம் சோப்பாக்கி அனுப்ப வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் வந்திருந்தார்கள். வீட்டில் மாட்டுத் தொழுவம் சுத்தம் செய்வது, சாணி அள்ளுவது, பால் கறப்பது போன்ற வேலைகளையும் வீட்டு ஆண்கள் பொறுப்பில் விட்டு விட்டிருந்தார்கள்.
காலையில் ஆரம்பித்த வேலை, கரண்ட் கட் ஆவது வரை ஓடியது. கரண்ட் இல்லாத 3 மணி நேரம் வீடுகளுக்குத் திரும்பிப் போய் வேலைகளை முடித்து விட்டு அடுத்த அமர்வுக்கு வந்து விட்டார்கள். காலை கரண்ட், மாலை கரண்ட், இரவு கரண்ட் என்று கரண்ட் வரும் நேரத்தை கணக்கிட்டு வேலை செய்கிறார்கள்.

நேற்று மதியம் சோப்பு கம்பெனி முகவர் தொலைபேசியில் அழைத்து மூலப் பொருள் அனுப்பி விட்டதாக சொல்லியிருந்தார். உடனேயே குட்டியானை டிரைவருடன் குழுவின் இரண்டு பேர் நகரத்துக்குப் போய் கம்பெனியின் குடவுனிலிருந்து மூலப் பொருளை  இரவோடு இரவாக கொண்டு வந்து விட்டிருந்தார்கள்.
இன்றைக்கு சோப்பை நகரத்தில் ஒப்படைத்து விட்டால் 30 நாட்களில் இந்த சோப்புகளுக்கான பணம் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்து விடும். அந்த பட்டறைக்குள் சோப்பு கரைசலை கலக்கும் மெசின், நீள உருளையாக கெட்டிக்கும் மெசின், கெட்டித்த உருளையை துண்டுகளாக வெட்டும் மெசின், வெட்டிய துண்டுகளுக்கு வடிவம் கொடுக்கும் மெசின், சோப்பின் பெயரை பொறிக்கும் மெசின் என்று ஒவ்வொன்றையும் அது அதற்கு தேவையான உடல் பலமும் அந்தந்த மெசினை இயக்கும் திறமையும் கொண்டவர்கள் இயக்கினார்கள். கொஞ்சம் வயதானவர்களும், பலவீனமானவர்களும் சோப்புகளை உறையில் போட்டு வைக்கும் வேலையில் உட்கார்ந்திருந்தார்கள். அந்த 1500 சதுர அடி பட்டறைக்குள் 23 பேர் மும்முரமாக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
8 வருடங்களுக்கு முன்பு மாதர் விகாஷ் என்ற தொண்டு நிறுவனத்திலிருந்து வந்த சமூக சேவகியின் தூண்டுதலில் 12 பேரும் மகளிர் சுய உதவிக் குழுவாக சேர்ந்து கொண்டார்கள். ஆரம்பத்தில் பல இழுபறிகள், வாக்குவாதங்கள், சச்சரவுகள் என்று நடந்து சில மாதங்களில் யார் என்ன செய்ய வேண்டும், பணம் கொடுக்கல் வாங்கலுக்கான நடைமுறைகள் எல்லாம் தெளிவாகின. சில பேர் விட்டு விட்டுப் போனார்கள், சில பேர் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
குழுவுக்காக வங்கியில் கணக்கு ஆரம்பித்தது, கணக்கை இயக்குவதற்கு 3 பேர் நியமித்தது, மாதா மாதம் தலைக்கு ரூ 100 வீதம் வசூலித்த சேமிப்புத் தொகையை வங்கிக்கு கொண்டு போட்டு விட்டு வருவது, ஓரிரு நாட்களுக்குப் பிறகு வங்கிக்கு போய் பணத்தை எடுத்து வந்து தேவைப்பட்டவர்களுக்கு கடனாக கொடுப்பது, கடன் வசூலித்து மீண்டும் வங்கியில் போடுவது, குழு உறுப்பினர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் விவாதிப்பது என்று சுறுசுறுப்பாக போய்க் கொண்டிருந்தது. தொண்டு நிறுவன சமூக சேவகி மாதம் தோறும் வந்து குழு கூட்டங்களில் கலந்து கொண்டார். எப்படி விதி முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும், என்னென்ன நடவடிக்கைகளுக்கு கடன் கொடுக்கலாம், கடன் எப்படி வசூலிக்க வேண்டும் என்றெல்லாம் வழி காட்டினார்.
குழுவில் சேர்ந்தவர்கள் எல்லாம் விவசாயக் கூலி வேலை செய்து வந்தவர்கள். சில குடும்பங்களுக்கு கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் உண்டு. குடும்பத்தோடு நிலத்தில் வேலை செய்வார்கள், மற்றவர்கள் நிலத்துக்கு வேலை செய்யப் போவார்கள், வீட்டில் சமையல் வேலை, பசுக்களை பராமரிப்பது, கோழி வளர்ப்பது, நெல் அவிப்பது என்று காலையில் எழுந்ததிலிருந்து தூங்கப் போவது வரை முதுகை உடைக்கும் வேலையில் மூழ்கியிருப்பார்கள்.
அவர்களது நுகத்தடி வாழ்க்கையை புரட்டிப் போட்டு புதிய சுதந்திரத்தை வழங்கியது அந்த சுய உதவிக் குழு. இந்தக் குழு ஆரம்பித்ததிலிருந்து எல்லோருக்குமே புது உற்சாகம் வந்து விட்டது. குழு கூட்டம் அல்லது குழு தொடர்பான வேலை இருந்தால் வீட்டு வேலைகளை முடிந்த அளவு காலையிலேயே முடித்து விட்டு மீதியை அப்படியே போட்டு விட்டு வந்து விடுவார்கள். தன் வீடு, தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று வீட்டுக்கு வெளியில் ஒரு துரும்பைக் கூட நகர்த்திப் போடாத பெண்கள் நல்ல குழு உறுப்பினராக செயல்பட ஆரம்பித்தார்கள்.
இப்படியே 3 ஆண்டுகள் போன பிறகு, ‘எவர்பீம் என்ற  சோப்பு நிறுவனம் சோப்பு தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் வாங்க உதவி செய்து, சோப்பு செய்யும் முறையையும் சொல்லித் தந்து, செய்யும் சோப்புகளை தானே வாங்கிக் கொள்வதாக கூறுகிறது’ என்று தகவல் கொண்டு வந்தார் சமூக சேவகி.
இரண்டு குழுக்களாக சேர்ந்து தொழிற்சாலை ஆரம்பித்தால் வங்கியில் லோன் தருவார்கள் என்றும் தெரிய வந்தது. ஊரிலேயே இயங்கி வந்த பிற குழுக்களை ஆராய்ந்து ஒத்து வரக் கூடியதாக ஒரு குழுவை தேர்ந்தெடுத்து சேர்த்துக் கொண்டார்கள். இவர்கள் குழுவில் 12 பேர், அவர்கள் குழுவில் 15 பேர் என்று 27 பேர் கொண்ட உறுதியான அணி உருவாகி விட்டது.
கஷ்டப்பட்டு உழைத்தால் போதும், சோப்பு கம்பெனி பொருள் கொடுத்து சோப்பு செய்து வாங்கி பணத்தையும் கொடுத்து விடும். வங்கிக் கடனை அடைத்து விட்டால் சில வருடங்களில் தொழிற்சாலை அவர்களுக்கு சொந்தமாகி விடும்.
வங்கியில் ரூ 7.5 லட்சம் கடன் ஒப்புதல் கிடைத்தது. கடனை வட்டியுடன் முழுவதுமாக கட்டி முடித்தால் ரூ 2.5 லட்சம் மானியமாக கொடுத்து விடுவார்கள்.
மகளிர் சுய உதவிக் குழு
மகளிர் சுய உதவிக் குழு (கோப்புப் படம்)
எந்திரங்களின் விலை ரூ 4.5 லட்சம். குஜராத்திலிருந்து இங்கு கொண்டு வருவதற்கான போக்கு வரத்துச் செலவு தனி. எந்திரங்களை நிறுவி இயக்குவதற்கான இடத்தை இவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிற்சாலைக்கான உரிமங்கள், ஒப்புதல்களை வாங்க வேண்டும். மின் இணைப்பு பெற வேண்டும்.
அடுத்த 3 மாதங்களுக்கு நிற்க நேரமில்லாத வேலை. வேலைகளை பிரித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். ரைஸ் மில் வைத்து நொடித்துப் போன ஒரு குடும்பத்திடம் பயன்படாமல் கிடந்த ஷெட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். அதில் தேவையான சுவர் கட்டுவது, தளம் போடுவது, தடுப்பு ஏற்படுத்துவது என்று கடினமான வேலைகளை இரவும் பகலுமாக குழு பெண்களாகவே செய்து முடித்தார்கள். பணம் வேகமாக கரைந்து கொண்டிருந்தது. நம்ம கம்பெனிக்கு வேலை செய்கிறோம் என்று உடலுழைப்பை சலிக்காமல் தந்து கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் கணக்கும் வைத்துக் கொள்ளவில்லை, பணமும் எடுத்துக் கொள்ளவில்லை.
பக்கத்து பேரூராட்சிக்குப் போய் தொழிற்சாலை ஒப்புதல் வாங்க அலைவது, மின்சார வாரியத்துக்குப் போய் உயர் அழுத்த இணைப்பு வாங்கப் போவது, அதற்கான செலவுகள் என்று செலவுகள் இழுத்துக் கொண்டே போயின. வங்கிக் கடன் முழுவதும் செலவாகி விட்டது. குழுவின் சேமிப்பில் இருந்த, கடனுக்கு கொடுத்திருந்த தொகையையும் செலவழித்தார்கள். கணக்கு வழக்குகளை எழுதும் பொறுப்பை 10-ம் வகுப்பு வரை படித்திருந்த குழு உறுப்பினர் ஏற்றுக் கொண்டார்.
நகரத்துக்கு வந்து சேர்ந்த எந்திரங்களை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்து இங்கு நிறுவினார்கள். மூன்று மாத அசுர உழைப்புக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர், ஊர் பஞ்சாயத்து தலைவர் என்று அழைத்து தொழிற்சாலையின் திறப்பு விழாவை நடத்தினார்கள். இந்த பெண்களுக்குள் இப்படி ஒரு திறமை இருந்திருக்கிறதே என்று எல்லோரும் புகழ்ந்தார்கள்.
வாழ்வதற்கே ஒரு புதிய அர்த்தம் வந்து விட்டது போலிருந்தது. இனிமேல் அடுத்த இலக்கு, வங்கிக் கடனை கட்டி முடித்து தொழிற்சாலையை சொந்தமாக்கிக் கொள்வது.
மாதா மாதம் வாடகை கட்ட வேண்டும், மின் கட்டணத்துக்கு செலவழிக்க வேண்டும், பொருட்களை கொண்டு வந்து போகும் வண்டிக்கு காசு கொடுக்க வேண்டும். இவற்றைத் தவிர உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். எவர்பீம் கம்பெனியிலிருந்து மூலப் பொருள் அனுப்ப ஆரம்பித்தார்கள். செய்கூலியாக ஒரு சோப்புக்கு 75 காசு கொடுத்தார்கள். ஆரம்பத்தில் மாதத்துக்கு 10,000 சோப்புக்குத்தான் மூலப்பொருள் அனுப்பினார்கள். அதை செய்து அனுப்பி ரூ 10,000 வந்தாலே பெரிய விஷயமாக இருந்தது. மற்ற செலவுகள் போக வங்கிக் கடன் தவணையான ரூ 40,000 கட்டுவது சாத்தியமே இல்லாமல் இருந்தது.
நபார்டு
நபார்டு வங்கி
அவர்கள் வேலை செய்வதற்கு கூலி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். யாருக்கு உழைக்கிறோம்? நம்ம கம்பெனி, நம்ம குழு முதலில் கடனை அடைத்து விட்டு அப்புறம் நமக்கு பணம் எடுத்துக் கொள்ளலாம். வந்த பணம் அனைத்தையும் செலவுகள் போக வங்கியில் கட்டி விடுவார்கள்.
ரூ 15, ரூ 25, ரூ 30 என்று வித விதமான விலைகள் அச்சிட்ட உறைகளில் பொதிந்து சோப்புகள் செய்து அனுப்பினார்கள். ஆனால் இவர்களைப் பொறுத்த வரை எந்த வகையாக இருந்தாலும் ஒரு சோப்புக்கு செய் கூலி ஒரே அளவுதான் கிடைத்தது.
முதல் 2 ஆண்டுகள் வரை உற்பத்தி மாதம் 25,000 சோப்புகளைக் கூட எட்டவில்லை. வங்கியில் கடன் கட்ட முடியாமல் நெருக்கடி. சமூக சேவகி கடும் அழுத்தம் கொடுத்து வந்தார். அவரது பரிந்துரையில் வங்கி கடன் கொடுத்தது, கட்டாவிட்டால் அவரைத்தானே கேட்பார்கள். யாரிடமாவது கந்து வட்டிக்கு வாங்கியாவது வங்கிக் கடனை அடைத்து விடலாம், கந்து வட்டியை படிப்படியாக அடைத்து விடலாம் என்று கூட யோசித்தார்கள்.
உழைப்பும், உற்பத்தியும் தொடர்ந்தன. இவர்கள் செய்து அனுப்பும் சோப்புக்கு சந்தையும் சூடு பிடிக்க ஆரம்பித்தது போலிருக்கிறது. இப்போதெல்லாம் மாதத்துக்கு 30,000 முதல் 35,000 சோப்புகள் வரை செய்து அனுப்புகிறார்கள். சோப்பு கம்பெனியும் ஒரு சோப்புக்கு கட்டணத்தை படிப்படியாக உயர்த்தி ரூ 1.40 ஆக்கியிருக்கிறார்கள்.
இந்த 5 ஆண்டுகள் செயல்பாட்டில் வங்கிக் கடனை கட்டி முடித்து விட்டார்கள். வட்டியோடு சேர்த்து ரூ 10 லட்சம் கட்டிய பிறகு மானியம் என்று மீதியிருந்த தொகையை தள்ளுபடி செய்து விட்டார்கள்.
இடையில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் தொழிற்சாலைக்கு சொந்தமாக கட்டிடம் கட்டித்தரச் சொல்லிக் கேட்கும்படி ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் சொல்லிக் கொடுத்தார். கேள்வியைக் கேட்டதும், கட்டிடம் கட்ட பொது இடம் எதுவும் இல்லை என்றும் தனது இடத்தையே தருவதாகவும் பிரசிடெண்ட் சொல்லி விட்டார். அதற்காக ஏதோ ஒரு அரசாங்க திட்டத்திலிருந்து ரூ 5 லட்சம் நிதி பெற்று தானே கான்டிராக்ட் எடுத்து ஷெட் போட்டுக் கொடுத்து விட்டார்.
இப்போதெல்லாம் செய்கிற வேலையைப் பொறுத்து மாதத்துக்கு ஒருவருக்கு ரூ 1,500 இன்னொருவருக்கு ரூ 2,200 அதிக பட்சமாக ரூ 2,500 வரை கிடைக்கிறது. மூலப் பொருட்கள் வந்து சேர்ந்து 5 மணி நேரம் வேலை செய்தால் 1,500 சோப்புகள் செய்து விடலாம்.
சோப்புக்கான செய் கட்டணத்தை கூட்டிக் கேட்டால், ‘எண்ணிக்கையை அதிகரித்து உங்களுக்கு கூடுதல் வருமானம் வர திட்டமிட்டிருக்கிறோம். கட்டணத்தை அதிகரித்தால் அது சாத்தியமாகாது’ என்கிறது சோப்பு கம்பெனி.
மாதத்துக்கு 60,000 சோப்பு வரை செய்ய முடிந்து விட்டால் எல்லோருக்கும் மாதம் முழுவதும் வேலை கிடைக்கும். சராசரியாக தலைக்கு ரூ 3,000 வரை வருமானமும் வரும். என்ன, கரெண்ட் கட் இருப்பதால், விட்டு விட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.
21ம் நூற்றாண்டின் குட்டி முதலாளிகள் இவர்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 8 லட்சம் முதலீடு செய்து தொழிற்சாலை ஏற்படுத்தி, கூடுதலாக 2 ஆண்டுகள் 25 பேரின் சம்பளமில்லாத உழைப்பை மூலதனமாக போட்டு தொழிலை வளர்த்திருக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் பிறகு 25 பேர் 5 மணி நேரம் உழைத்தால் 1,500 சோப்புகள் தயாரிக்கிறார்கள். அதன் மூலம் ரூ 2,100 வருமானம் கிடைக்கிறது. மின் கட்டணம், போக்குவரத்து செலவுகள், டீச்செலவு இவற்றை கழிக்காமல் பார்த்தால் சராசரியாக ஒருவருக்கு 5 மணி நேர வேலைக்கு சுமார் ரூ 80 வருமானம். 8 மணி நேர உழைப்புக்கு ரூ 120 சம்பாதிக்கிறார்கள்.
இந்த வருமானம் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச கூலியை விடக் குறைவு, தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்தில் கொடுக்கப்படும் கூலியை விடக் குறைவு என்று தோன்றலாம். இந்தப் பணத்தைக் கொண்டு அவர்களது குடும்பச் செலவுகளுக்கு இல்லை, சொந்தச் சாப்பாட்டு தேவையைக் கூட பார்த்துக் கொள்ள முடியாதே என்று சிலர் கேட்கலாம்.
நாட்டில் ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. இவர்களைப் போல ஒரு தொழிற்சாலையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்திக் காட்டும் குழுக்கள் அதிகமில்லை. இந்த மாவட்டத்திலேயே இவர்கள் மட்டும்தான் அத்தகைய வெற்றிக் கதையை எழுதியவர்கள். மாதா மாதம் பிற பகுதிகளிலிருந்து குழுக்கள் வந்து தொழிற்சாலையை பார்த்து விட்டு போகிறார்கள்.
சிறப்பாக செயல்படும் குழு என்பதற்கான விருதும் ரூ 15,000 ரொக்கமும் இவர்களுக்குக் கிடைத்தது. இவர்கள் செய்யும் சோப்புகளை காட்சிக்கு வைக்க மாநிலத் தலைநகருக்குப் போய் 10 நாட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு 1,000 சோப்பு வரை விற்பனையாகின.
இதெல்லாம் சாதனை இல்லையா?
முகமது யூனுஸ்
முகமது யூனுஸ்
ங்காள தேசத்தில் முகமது யூனுஸ் என்ற பேராசிரியர் ஆரம்பித்து வைத்த நுண்கடன் நடைமுறையை தெற்கு ஆசியாவிலும் உலகின் மற்ற ஏழை நாடுகளிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி கிராமப் புற ஏழை மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அரசுகள் திட்டமிட்டன. 2006-ம் ஆண்டு யூனுசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. என்ன அமைதியை அவர் ஏற்படுத்தினார்? வங்காள தேசத்தின் ஏழை மக்கள் தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்து கொதித்து எழுந்து விடாமல் ஏகாதிபத்தியங்களுக்காக அமைதியை உறுதி செய்திருந்தார்.
இந்தியாவில் விவசாயத்துக்கு மானியம் கொடுக்க பணமில்லை, நீர்ப்பாசன வசதி செய்து தர திட்டமில்லை என்று அரசை குறுக்கிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கி நபார்ட் வங்கி மூலம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. சுய உதவிக் குழுக்கள் உருவாக்குதற்கான வழிகாட்டல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பெண்களாக இருந்தால் நல்லது; ஏழைகளாக இருந்தால் நல்லது; நிலமற்றவர்களாக இருந்தால் நல்லது; தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தால் நல்லது; உழைப்பவர்களாக இருந்தால் நல்லது; என்று கவனமாக விதிகளை வகுத்திருக்கிறார்கள்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு லோன் மானியம் கொடுப்பதற்கு மத்திய அரசு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குகிறது. நபார்ட் வங்கி மூலம் அவை வினியோகிக்கப்படுகின்றன. வணிக வங்கிகள் லோன் கொடுக்குமாறு பணிக்கப்படுகிறன, கடன் கொடுப்பதையும் திரும்ப அடைப்பதையும் ஒருங்கிணைக்க தொண்டு நிறுவனங்களின் சமூக சேவகர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சுய உதவிக் குழுக்கள் உருவாகின.
ஆனால், நடைமுறையில் கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசத்திலும் சரி, இந்தியாவிலும் சரி கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடி பெயர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விடவில்லை. மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரம் நாட்டை முன்னேற்றி விடவில்லை.
என்னதான் நடக்கிறது?
மேலே சொன்ன சோப்பு தயாரிக்கும் குழுவை எடுத்துக் கொள்வோம். ரூ 5 லட்சம் லோன் கொடுத்த வங்கிக்கு கடன் தொகை 5 ஆண்டுகளில் வட்டியோடு திரும்பக் கிடைத்து விட்டது; மத்திய அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து மானியத் தொகையும் வந்து விட்டது.
5 ஆண்டுகளுக்கு முன்பு ஒண்டுக் குடித்தனத்தில் ஒற்றை அறையில் குடியிருந்த தொண்டு நிறுவனத்தின் சமூக சேவகி (என்ஜிஓ) இன்று நகரத்தில் 3 படுக்கை அறைகள் கொண்ட நவீன வீடு வாங்கி விட்டார், கார் வாங்கி விட்டார். பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியிருக்கிறார். அவரது வாழ்க்கை வளம் பெற்று விட்டது.
ஊர் பஞ்சாயத்து தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மகளிர் சுய உதவிக் குழுவுக்கு தொழிற்சாலை கட்டிடம் கட்டுவதற்காக என்று ரூ 5 லட்சம் நிதி பெற்று, தனது சொந்த நிலத்தில் தானே கான்டிராக்ட் எடுத்து ஷெட் போட்டுக் கொடுத்து விட்டார். ‘குழுவின் தொழிற்சாலை செயல்படும் காலம் வரை தலையிடுவதில்லை’ என்று பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார். அவருக்கு அந்த கான்டிராக்டில் லாபம், தொழிற்சாலையின் காலத்துக்குப் பிறகு ஒரு ஷெட்டுடன் நிலமும் காத்திருக்கிறது.
குஜராத்தில் எந்திரங்கள் செய்து அனுப்பிய நிறுவனத்துக்கும் அதை ஒருங்கிணைத்த எவர்பீம் சோப்பு கம்பெனிக்கும் வங்கியிலிருந்து காசோலை நேரடியாக போய் விட்டது. திருப்பூரிலோ, ராணிப்பேட்டையிலோ செயல்படும் ஒரு தொழில் முனைவர் அதே எந்திரங்களை ரூ 1.5 லட்சம் செலவில் உள்ளூரில் செய்து வாங்கியிருப்பார். எந்திரம் செய்து அனுப்பிய நிறுவனம் பொருளுக்கு உரிய லாபத்தை விட பல மடங்கு சம்பாதித்துக் கொண்டது.
எவர்பீம் சோப்பு கம்பெனிக்கு சோப்பு செய்து தரும் ஒரு தொழிற்சாலை கிடைத்து விட்டது. அதற்கான முதலீடு செய்யவில்லை. அதை நிர்வகிக்கத் தேவையில்லை; வேலை செய்பவர்களுக்கு சம்பளம், சேம நல நிதி, தொழிலாளர் காப்பீட்டு நிதி என்று செலவழிக்கத் தேவையில்லை. மாதம் பிறந்தால் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கவலைப் படத் தேவையில்லை; பொருள் அனுப்பினால் சோப்பு செய்து வந்து விடும் என்ற ஏற்பாடு கிடைத்து விட்டது. வேலைக்கு ஏற்ற கூலி கூட கொடுக்காமல் சோப்பை செய்து விற்று லாபம் சம்பாதிக்க முடிகிறது.
இந்திய அரசுக்கு என்ன லாபம்? காவிரியில் தண்ணீர் விடவில்லை, விவசாய இடுபொருட்கள் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கவில்லை, விளைபொருட்களுக்கு போதிய விலை இல்லை, விவசாயம் நடக்கவில்லை, விவசாயக் கூலிகளுக்கு வேலை இல்லை. என்னதான் எதிர்காலம்?
‘இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்’ என்று காட்ட முடிகிறது. ‘நீங்கள் எல்லாம் சரியாக உழைக்காததால்தான் கஷ்டம், இவர்களைப் போல உழைத்து ஒரு தொழிற்சாலை உருவாக்கி பிழைத்துக் கொள்ளுங்கள்’ என்று காட்டலாம். காட்டுகிறார்கள்.
இந்த பெண்களுக்கு என்ன கிடைத்தது? தொழிற்சாலை இருக்கும் நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை. கட்டிடம் அவர்களுக்கு சொந்தமில்லை. அவர்கள் உழைப்பில் வாங்கப்பட்ட எந்திரத்தின் மதிப்பு தேய்ந்து கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அதன் மதிப்பு 0 ஆகி விடும். அதை மறுபடியும் வாங்குவதற்கான மூலதனத்தைக் கூட அவர்கள் தொழிற்சாலை வருமானத்திலிருந்து பெற்றிருக்கவில்லை, தமது உழைப்புக்கான நியாயமான கூலி பெறவில்லை, தாம் முதலீடு செய்த மூலதனத்துக்கான லாபத்தைப் பெறவில்லை.
இவர்கள் உழைப்பில் சோப்பு கம்பெனியும், குஜராத் மெஷின் கம்பெனியும், கடன் கொடுத்த வங்கியும், கான்டிராக்ட் எடுத்த பஞ்சாயத்து தலைவரும் லாபம் ஈட்டியிருக்கிறார்கள்.
பெண்ணடிமைத்தனத்தையும் உழைப்புச் சுரண்டலையும் உடைத்து முன்னேற்றுவதாக வரும் சுதந்திரம் உழைக்கும் மக்களை முன்னிலும் கடுமையான சுரண்டலுக்குள் தள்ளி விடுகின்றது.
சாப்பிடுவதா, சாப்பிடாமல் இருப்பதா என்பதற்கு சுதந்திரம், குழந்தைகளை படிக்க வைப்பதா, படிக்க வைக்காமல் இருப்பதா என்பதற்கு சுதந்திரம்; இந்த சுதந்திரங்களை எல்லாம் சாத்தியமாக்குவதற்கு பணம் ஈட்ட வேண்டுமா வேண்டாமா என்பதற்கு சுதந்திரம்; அப்படி பணம் ஈட்டுவதற்கு வாலண்டியராக போய் உழைப்பைக் கொட்ட வைப்பதுதான் முதலாளித்துவ சுதந்திரத்தின் நரித் தந்திரம். கால்களிலும் கைகளிலும் சங்கிலி கட்டி அடிமைப்படுத்தாமல், உளவியல் ரீதியாக, மன அளவில் சங்கிலி மாட்டி நுகத்தடியில் தினம் தினம் மாட்டி விடுகிறது.
அந்த உழைப்பில் விளையும் பலன்களை பெரு முதலாளிகளும், நிதி மூலதனச் சூதாடிகளும், பங்குச் சந்தை சூதாடிகளும் சுகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமது மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு சோப்பு போதும். பல்வேறு அடிமைத்தனங்கள் கோலேச்சும் கிராமப்புறங்களில் இத்தகைய மகளிர் சுய உதவிக் குழுக்குள் மக்களை சுய விருப்பத்தின் ஊடாகவே அடிமைகளாக்குகின்றன. ஓட்டுக் கட்சிகள், அதிகார வர்க்கம், அரசின் கடை மட்ட கிளைகளாகவும் இந்த சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. சமூக மாற்றம், புரட்சிக்கு அணிதிரள வேண்டிய பெண்களை இப்படி ஆசை காட்டி கொஞ்சம் ஊழல் சிந்தனைக்கு மாற்றி சீரழிக்கிறார்கள்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமப்புறங்கள் மாறிவிடும் என்பது மாயை. அந்த மாயையை உடைக்காமல் நாட்டுப்புற மக்களுக்கு விடுதலை இல்லை.
- பண்பரசு. vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக