ஞாயிறு, 6 அக்டோபர், 2013

சேலத்தில் அதிமுகவின் ரவுடி ராஜ்ஜியம் சீட்டு மோசடி! வன்முறை !

சேலம்:சேலம் மாவட்டத்தில் நிலம், சீட்டு மோசடி, ரவுடியிசம், மக்களுக்கு இடையூறு உள்ளிட்ட செயல்களில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் கொதிப்படைந்திருப்பதால், வரும் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அக்கட்சியினர் புலம்புகின்றனர்.கடந்த, தி.மு.க., ஆட்சியில், மந்திரி முதல் மாநகராட்சி கவுன்சிலர் வரை, பணம், நிலம், வீடு என கிடைத்ததையெல்லாம் சுருட்டி போட்டு, பொதுமக்களை அந்த கட்சியினர் கடும் சிரமத்துக்குள்ளாக்கினர்.தேர்தல் எப்போது வரும், பிரச்னையெல்லாம் எப்போது தீரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்தனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த, அ.தி.மு.க.,வினர், தற்போது, தி.மு.க.,வினரைப் போன்று, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.புகாருக்கு ஆளாகும் நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியபோதும், பல நிர்வாகிகள், மந்திரி, எம்.எல்.ஏ.,க்களை கைக்குள் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


சேலம் மாநகரில், சாதாரண நிலையில் இருந்த, ஏ.பி.மணிகண்டன் என்ற, அ.தி.மு.க., பிரமுகர், ஆட்சிக்கு வந்ததும், மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு, அவ்வப்போது கவனிப்பை கொடுத்து, ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி, பொதுமக்களிடம், பல லட்சம் ரூபாயை சுருட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார்.இரண்டு லட்சம், ஐந்து லட்சம் ரூபாய் என சீட்டு போட்டவர்கள் பணத்தை கொடுத்து பரிதவித்து நிற்கின்றனர். கட்சி தலைமைக்கு இது குறித்த புகார் சென்றதன் அடிப்படையில், மணிகண்டனை, கட்சியில் இருந்து நீக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், மாநகராட்சி, 9வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஸ்விட்ச்பாக்ஸ் ஜெயகுமார், ஒரே நிலத்தை நான்கு பேருக்கு கிரயம் செய்து, ஒவ்வொருவரிடமும் பல லட்சம் ரூபாயை வாங்கி ஏப்பம் விட்டுள்ளதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல், சேலம் மாநகர் மாவட்ட ஜெ.,பேரவை துணைசெயலாளர் செங்கோட்டுவேலன், ஒகேனக்கல்லுக்கு நண்பர்கள் சிலருடன் சென்றார். தமிழ்நாடு ஹோட்டல் ஊழியரை அவர் தாக்கியதாக புகார் எழுந்ததன் அடிப்படையில், போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒகேனக்கல் சம்பவத்தின் போது, கொலை வழக்கில் போலீஸாரால் குற்றம்சாட்டப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வக்கீல் சம்பத், மேலும் சிலரும் அவருடன் இருந்துள்ளனர்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, மோசடி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, அ.தி.மு.க.,வினர் குறித்து, மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கு புகார் தெரிவிப்பதில்லை. இதனால், தி.மு.க.,வை மிஞ்சும் விதத்தில், அ.தி.மு.க.,வினரின் செயல்பாடு உள்ளது. ஏற்கனவே, தமிழக அரசு மீது, மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ள நிலையில், கட்சியினரின் நடவடிக்கை, பொதுமக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், ஏற்காடு இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலில், சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க., தோல்வியை தழுவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என, கட்சி நிர்வாகிகள் பலர் குமுறலுடன் கூறுகின்றனர்.முதல்வர் ஜெயலலிதா, சேலம் மாவட்ட நிர்வாகிகளை களையெடுக்காவிட்டால், அ.தி.மு.க.,வின் நிலை அதளபாதாளத்துக்கு சென்று விடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக