செவ்வாய், 22 அக்டோபர், 2013

நான் மலாலா! தாலிபன் பயங்கரவாதிகளுக்கு வீரம் என்றால் என்னவென்று கற்று கொடுத்து கொண்டிருக்கும் சிறுமி

உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது... தலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி, உயிர் பிழைத்திருக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதி வெளியிட்டிருக்கும் 'ஐ ஆம் மலாலா’ (I AM MALALA) எனும் சுயசரிதை. அதன் விறுவிறுப்பான சில பக்கங்களை புரட்டுவோமா>நள்ளிரவில்
உருவாக்கப்பட்ட ஒரு தேசத்தில் இருந்து வந்தவள் நான். ஒரு நண்பகலுக்குப் பின், ஏறத்தாழ மரணம் அடைந்தேன். எல்லாவற்றையும் புரட்டிப் போட்ட அந்த நாள், செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2012.
எங்கள் பள்ளிக்கூட பேருந்து, அந்த ராணுவச் சாவடியை கடந்து, வெறிச்சோடிக் கிடந்த கிரிக்கெட் மைதானத்தை வட்டமடித்துத் திரும்பியபோது... திடீரென்று நிறுத்தப்பட்டது. இடதுபுறம், எங்கள் ஸ்வாட் மாகாணத்தின் முதல் நிதி அமைச்சர் ஷெர் முகமது கான் சமாதி. வலதுபுறம், தின்பண்ட தொழிற்சாலை ஒன்று.

வெளிறிய சட்டையும் இளம்தாடியுமாக ஓர் இளைஞன், பேருந்தை நெருங்கி...

''சில குழந்தைகளைப் பற்றி தகவல் வேண்டும்’' என்றான்.

''பள்ளி அலுவலகத்தில் போய்க் கேளுங்கள்’' என்று பதில் தந்தார் டிரைவர் உஸ்மான் பாய்.

அதேநேரம்... இன்னொரு இளைஞனும் பேருந்தை நெருங்கிவர... ''உன்னைத்தான் பேட்டி எடுக்க வருகிறார்கள்'' என்றாள் தோழி மோனிபா.

தலிபான்கள், பெண் கல்விக்கு எதிராக செயல்பட்டபோது, என் தந்தையோடு சேர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறேன். அதனால் அடிக்கடி சில பத்திரிகையாளர்கள் வீட்டுக்கு வருவதுண்டு. ஆனால், இப்படி நடுரோட்டில்..?

ஃப்ளூ ஜுரம் வந்தவன் போல முகத்தில் கர்ச்சீஃப் கட்டியிருந்தவன், ''யார் மலாலா?’' என்றபடியே பஸ் படிக்கட்டுகளில் ஏறி வந்தான். கையில் கறுப்பு நிற துப்பாக்கி (அதன் பெயர் 'கோல்ட் 45' என்று பிறகு தெரிந்து கொண்டேன்).
அந்த பஸ்ஸிலேயே முகத்தை மூடாமல் இருந்தவள்... நான் மட்டுமே. யாரும் எதுவும் பேசவில்லை. என்றாலும், பதற்றத்தோடு அனைவரும் என்னைத் திரும்பிப் பார்த்தனர்.

முதல் குண்டு... இடது காது மடலைக் கிழித்துக் கொண்டு பறந்தது. மற்ற இரண்டு குண்டுகள், சக மாணவியின் கை, தோள்பட்டையைப் பதம் பார்த்தன.

அவன் கேட்டது... 'யார் மலாலா?’

நான்தான் மலாலா... இது என் கதை.
பிக்னிக் கொண்டு வந்த வம்பு!

1880-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்த 'மலாலாய்' என்கிற போராளியின் பெயரைத்தான் எனக்கு வைத்தார், பள்ளிக்கூட ஆசிரியரான என் தந்தை ஜியாதீன். தெற்கு ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த அந்தப் பெண்கவியின் அதே தைரியத்தை என்னிடமும் ஊட்டி வளர்த்தார்.

பள்ளிச் சுற்றுலாவுக்காக மார்காஜார் எனும் பசுமைப் பள்ளத்தாக்கில், வொய்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கினோம். 70 மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். நாங்கள் காடுகளில் ஓடி விளையாடினோம். ஆறுகளில் நீரை வாரியடித்து உற்சாகத்தில் மிதந்தோம்.

பிக்னிக் முடிந்து வீடு வந்து சேர்ந்த மறுநாள் காலை, கடையில் வாங்கிய பொருளுடன் துண்டு அறிக்கை ஒன்றும் வீட்டுக்கு வந்தது. அதைப் படித்ததும் தந்தையின் முகம் வெளிறியது. 'கடவுளே! நம் பள்ளிக்கூடத்தைப் பற்றி அபாண்டமாக எழுதியிருக்கிறார்கள்என்றார் அம்மாவை நோக்கி.

'என்.ஜி.ஓ-க்களால் நடத்தப்படும் குஷால் பள்ளி (எங்கள் நாட்டில் என்.ஜி.ஓ. பற்றி மதவாதிகள் மத்தியில் தவறான கண்ணோட்டம் உண்டு) ஆபாசத்துக்கும் அருவருப்புக்கும் மைய களமாகிவிட்டது. தீமைகளையும் தவறுகளையும் பார்த்தால் அதைத் தடுக்க வேண்டியது நம் இறை தூதரின் பொன்மொழியாகும். அப்பள்ளி மாணவிகள், சுற்றுலா என்ற பெயரில் கண்ட கண்ட ஓட்டல்களில் தங்கியுள்ளனர். இந்த அக்கிரமங்களை நீங்கள் தடுத்து நிறுத்தவில்லை என்றால்... இறுதித் தீர்ப்பு நாளில் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஹோட்டல் மேனேஜரை நேரில் பார்த்து விசாரியுங்கள். இந்தப் பெண்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவரும்.’

இந்த துண்டறிக்கை பள்ளி மாணவிகளுக்குத் தெரியவந்தது. அனைவரும் பதறிப் போயினர்.
அடுத்தது நான்தான்!

2011-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி நான் 14-ம் வயதில் அடியெடுத்து வைத் தேன். இஸ்லாம் முறைப்படி இனி நான் பெரியவளாகக் கருதப்படுவேன். அந்த நாளில்தான் ஸ்வாட், கான்டினென்ட் ஓட் டல் அதிபரை தீவிரவாதிகள் கொன்று விட்ட செய்தி வெளியானது. அவர், அமைதிக் குழு உறுப்பினராக இருந்தவர்.

அவர்கள் இரண்டு பேரைக் குறி வைத்தனர். ஒன்று ஓட்டல் அதிபர் ஜாகித் கான். இன்னொருவர் என் தந்தை. ஆகஸ்ட் 3-ம் தேதி ஓட்டலில் இருந்து வீட்டுக்குத்  ிரும்பிக் கொண்டிருந்தபோது, மசூதி அருகே, முகத்தில் சுடப்பட்டு இறந்துபோனார் ஜாகித் கான்.

செய்தியைக் கேட்டதும் அப்பா அமைதியாகச் சொன்னார் - ''அடுத்தது நான்தான்!'’

அந்த இரவு... அம்மா, அப்பா, தம்பி, குடும்ப உறுப்பினர், கிராமத்தில் இருந்து வந்திருந்த விருந்தினர் எல்லோரும் உறங்கப் போய்விட்டனர். வெளியில் சென்று வீட்டின் கேட் பூட்டப்பட்டிருக்கிறதா என்று சோதித்தேன். எல்லா ஜன்னல்களும் சாத்தப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்தேன். வீட்டின் கூரையை ஓட்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டால்..?

இரவு முழுவதும் கடவுளிடம் வேண்டியபடியே இருந்தேன். 'எங்களைக் காப்பாற்று.. அப்பா, குடும்பத்தினர், எங்கள் தெரு எல்லாவற்றையும் காப்பாற்றுஎன்று முதலில் வேண்டினேன்.

பிறகு, கிராமத்தைக் காப்பாற்ற வேண்டினேன். பிறகு... ஸ்வாட். 'இல்லை.. எல்லா முஸ்லிம்களையும் காப்பாற்றுஎன்றேன். பிறகு, திருத்திச் சொன்னேன்... 'முஸ்லிம்கள் மட்டு மல்ல, எல்லா மனிதர்களையும் காப்பாற்று’!
- தமிழ்மகன்  sooddram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக