புதன், 16 அக்டோபர், 2013

மறைந்த மாலைமுரசு ஆசிரியன் பா , ராமச்சந்திர ஆதித்தன் ! ஒரு சமுக நீதி காவலர் !

மாலைமுரசு நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:– சி.பா. ஆதித்தனார் அவர்களின் மூத்த மைந்தர், அருமை நண்பர், பா. ராமச்சந்திர ஆதித்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன். தமிழ், தமிழர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பவற்றில் என்றைக்கும் குறையாத அக்கறையும் ஆர்வமும் கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தன்.> நான் முதல்–அமைச்சராக ஆன போது மிகவும் பெருமைப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்–அமைச்சராக ஆகியிருக்கிறார் என்றெல்லாம் பாராட்டியவர். அவர் மறைவு, தமிழ்ச் சமுதாயத்திற்கும், பத்திரிகை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும், அவருடைய அருமைச் செல்வன் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மாலை முரசு இதழில் பணியாற்றும் தொழிலாளத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய மந்திரி ஜி.கே.வாசன்:– தந்தை வழியை பின்பற்றி பத்திரிகை துறையில் தனி முத்திரை பதித்தவர். பாமரர்களும் படிக்கும் வகையில் பத்திரிகை நடத்தி வந்தார். மிகவும் எளிமையானவர். அன்பாக பழகக் கூடியவர். அவரது மறைவு பத்திரிகை துறைக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத் தினருக்கு, அவரைச் சார்ந்த பத்திரிகை ஊழியர்களுக்கும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:–

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் தலைமகன், மாலைமுரசு ஏட்டின் அதிபர் ராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கியது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன். தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலைமுரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார்.

துன்பப்படுகின்றவர்களுக்கு உதவுகின்ற இரக்க சுபாவம் மிக்கவர். அன்னாரது இளவலான சிவந்தி ஆதித்தனார் மறைந்த ஆறு மாத காலத்திற்குள் ராமச்சந்திர ஆதித்தனாரும் மறைந்த துக்கம் பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டது.

அவரது மறைவால் துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மாலைமுரசு ஏட்டின் செய்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் ம.தி.மு.க.வின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–

மாலைமுரசு நாளிதழ் மற்றும் தேவி வார இதழின் அதிபரும், கொடையாளருமான பா.ராமச்சந்திர ஆதித்தனார் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன்.

காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்த செய்திகளை அதிக முக்கியத்துவம் அளித்து தமது ஏடுகளில் வெளியிடச் செய்தவர். நாடார் சமுதாயத்துக்கு சொந்தமான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை மீட்டு சாதனை படைத்தவர். மிகவும் எளிமையானவர். தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர். தமிழர் கலைகள், தமிழிசை, தமிழர் விளையாட்டுக்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். ஏழைகளுக்கும், தமிழுக்காக உழைப்பவர்களுக்கும் உதவிகளை வாரி வழங்கியவர்.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட ராமச்சந்திர ஆதித்தனாரின் மறைவு பத்திரிகை உலகிற்கு மட்டுமின்றி, தமிழ் நாட்டிற்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன்:–

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் பெரியவர் பா.ராமச்சந்திர ஆதித்தன் காலமானதை அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். விடுதலை சிறுத்தைகள் சார்பில் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். தமிழ் மொழி, தமிழ் இனத்துக்காக, தமிழ் ஈழத்துக்காக சிந்தித்தவர். செயல்பட்டவர். தமிழ் ஈழத்துக்காக பாடுபட்ட அனைவருக்கும் ஊக்கம் அளித்தவர். அவரது மறைவு பேரிழப்பு. தமிழ் ஈழத்தை வென்றெடுப்பதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:–

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த புதல்வராக பிறந்து, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று தந்தையார் வழியில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபட்டவர் பா.ராமச்சந்திர ஆதித்தனார். அனைவருடனும் பண்போடும், அன்போடும் பழகும் எளிமையானவர்.

தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வாழ்ந்து மறைந்துள்ளார். தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று கனவு கண்டு அதைக் கொள்கையாக தன் பத்திரிகை மூலம் கடைப்பிடித்தவர். இவ்வுலகம் உள்ளவரை அவர் புகழ் மறையாது. அவரது குடும்பத்தினருக்கும் பத்திரிகை ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:–

மாலை முரசு நாளிதழின் நிறுவனர் பா.ராமச்சந்திர ஆதித்தன் இயற்கை எய்தி விட்டார் என்ற தகவல் அறிந்து மிகவும் துயரமடைந்தேன். அனைத்து கட்சித் தலைவர்களின் பேரன்புக்கும் பாத்திரமானவர். அவரது இழப்பு தமிழக மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் மோகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:–

பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணமடைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பத்திரிகை உலகில் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்கிற தாரக மந்திரத்திற்கு ஏற்ப தாமும் புதிய பத்திரிகைகள் தொடங்கி திறம்பட நடத்தி வந்தார். நம் சமுதாயத்திற்காக பாடுபட்ட அன்னாருடைய மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:–

பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைவு பேரிழப்பாகும். எங்களைப் போன்ற தமிழ் நடிகர்களுக்கு மாபெரும் ஆதரவாக இருந்தவர். குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். அடிக்கடி அவரை சந்திப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக