புதன், 23 அக்டோபர், 2013

சாமியார்களின் புருடாக்களை நம்பி தங்கம் தோண்டும் நாளைய வல்லரசு ! வீரமணி கண்டனம் !

  • சாமியார் ஒருவர் கிளப்பிய புருடாவை நம்பி தங்கம் கிடைக்கும் என்று  பூமியைத் தோண்டும் வேலையில் ஈடுபடுவதா?
  • மத்திய அரசு இதற்குத் துணை போகலாமா?
அரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக்கூறும்
இலட்சணம் இதுதானா? நாடு எங்கே போகிறது?
மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் தமிழர் தலைவரின் அறிக்கை
ஏதோ ஒரு சாமியார் பூமிக்குள் தங்கம் இருக்கிறது என்று அவிழ்த்துவிட்ட புருடாவை  நம்பி தொல்பொருள் துறை பூமியைத் தோண்டுவதும் உச்சநீதிமன்றம் இதற்குத் துணை போவதும் சரியானது தானா? அரசமைப்புச் சட்டம் கூறும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக் கூறும் இலட்சணம் இதுதானா? நாடு எங்கே போகிறது? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்; அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டி சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கிய நல்ல தம்பி திரைப்படத்தில் பல்வேறு அரிய தொலைநோக்குச் சிந்தனைகளை கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும், அவரது வாழ்விணையர் டி.ஏ. மதுரமும் சேர்ந்து கூறிடும் அறிவுரைக் காட்சிகள் ஏராளம் உண்டு.
பகுத்தறிவுப் புலவர் உடுமலை நாராயண கவி அவர்களது கருத்தமைந்த பாடல்களும் மேற்கூறிய முற்போக்குப் புரட்சிகர கருத்துக்களுக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்தன.
அதில் ஒரு பாடல் எட்டு, ஏழு, ஆறு, என்று தொடங்கும்; அதன் வரிகள் சிறப்பான கருத்துக்களைக் கூறும்.
பல்லவி: எட்டு... ஏழு... ஆறு... ஓர்
எட்டு... ஏழு... ஆறு... எல்லாம் தங்கம்...
ஈயாத பேரு ஏமாற்றும் தங்கம்...
சரணம்: தேசிங்குராஜன் செத்தான் - அவனது
தேசம் அழிஞ்ச பின்னாலே...
மாசில்லாத தங்கக் குவியல்
மறைஞ்சிருக்குது மண்ணாலே...
எட்டடி நீளம்.... ஏழடி அகலம்...
கட்டி கட்டியாய் தங்கப் பாளம்
வெட்டிப் பார்த்தால் புதையல் இருக்கும்
வேறெவரிடமும் சொல்லாதே!
என்று டி.ஏ. மதுரம் அம்மையார் பாடுவார்!
ஏராளமான தங்கம் தரையில் உள்ளது என்று ஒருவர் புரளி கிளப்பி, அதனை உண்மை என நம்பி, பலரும் மண்வெட்டிகளைத் தூக்கிக் கொண்டு, நிலத்தை வெட்டி, உழுது பார்த்திட கூட்டம் கூட்டமாகக் கிளம்பி விடுவர்.
அதுதான் பாட்டின் முதல் வரியாகும்; சோம்பேறிகளாக இருந்த மக்களை உசுப்பி விட்டு, தரிசாக இருந்த நிலங்களை உழுது பண்படுத்திடும் நிலையை உருவாக்குவர் என்பது அப்பாட்டின் மய்யக் கருத்தாகும்!
சாமியார் கிளப்பிய புருடா
உலகத்தின் எந்த மூலையிலும் தங்கப் புதையல் வேட்டை நடத்துவது எப்போதாவது நடப்பதுதான் என்ற போதிலும், அண்மையில் எவரோ ஒரு சாமியார் கனவில் ஒருவர் வந்தார்; புதையல் இருப்பதாகச் சொன்னார் என்று கிளப்பிய புருடாவை முன் வைத்து, உ.பி. அரசாங்கம், தொல் பொருள் துறையும் இப்படி இறங்கியிருப்பது, அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்வது மகா மகா வெட்கக் கேடான மூடநம்பிக்கை அல்லவா?
இந்தப் புரட்டுப் பிரச்சாரத்தை உ.பி. அரசோ, மத்திய அரசோ (தொல் பொருள் துறையினரும்) இதில் இறங்க லாமா?
உச்சநீதிமன்ற தீர்ப்பு உகந்தது தானா?
இதுபற்றி உச்சநீதிமன்ற வழக்கொன்றில், உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருப்பது அதைவிட வேதனையான, ஏற்க முடியாத நிலையாகும்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு - அறிவியல் மனப்பான்மையைப் பரப்பிட வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை என்கிறபோது, அந்தப் பொறுப்பு, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, கடமைகளை நினைவூட்ட வேண்டியது உச்சநீதிமன்றத்தின் முக்கிய கடமை அல்லவா?
அரசின் கொள்கை முடிவுகளிலும் முக்கிய வழக்கு களிலும்கூட கருத்துக் கூறி வேறு வகையான தீர்ப்புக் களை கூறும் உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு, அரசமைப்புச் சட் டத்தின் 51A(h) பிரிவுக்கு உடன் பாடானதாக நமக்கு தெரியவில்லை.
தலைக்குப்புற வீழ்ந்த நரேந்திர மோடி!
அரசியல்வாதிகள் குறிப்பாக பிரதமர் வேட்பாளராக பெரும் அளவில் ஊடகங்களாலும், பா.ஜ.க., வாலும் பெரிதாக விளம்பர வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் மோடி, இந்த தங்கப் புதையல் வேட்டையை சில நாள்களுக்குமுன்பு கண்டித்துப் பேசி விட்டு, இப்போது தலைக்குப்புற அந்தர் பல்டி அடித்து, அந்த சாமியாரைப் புகழ்ந்து தள்ளியிருப்பது, மோடி எப்படிப்பட்ட பேசு நா இரண் டுடைய அரசியல்வாதி என்பதை நாடு புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது!
மின்னணுவியல் - அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து, செவ்வாய்க் கோளுக்கு, விண்கலத்தை, இந்தியா அனுப்பும் அளவுக்கு உள்ள நிலையில், இப்படி ஒரு தங்க வேட்டை என்று சாமியார்களை - மோசடி மன்னர்களை உயர்த்திக் காட்டுவது, அப்பாவி மக்கள் ஏமாறுவது எல்லோரையும் திருவாளர் 420 (ஏமாற்று மோசடி வேலை)  செய்ய வைப்பது விரும்பத்தக்கதா?
இந்த தங்க வேட்டைக் கனவின் கதையும், அதை ஒட்டிய நடப்பும் நம் நாட்டு அரசியலில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆட்சி புரிகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது; இது அண்மைக்கால விசித்திரங்களில் தலையானதாக உள்ளது!
ஒரு மத்திய அமைச்சரின் முடை நாற்றம் எடுக்கும் மூடத்தனம்!
மத்திய உணவு பதப்படுத்தும் துறையின் இணையமைச் சரான சரண்தாஸ் மகந்த என்பவரிடம் ஒரு சாது (சாமியார்) கூறினாராம்: இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி - ரூபாய் நாணய மதிப்பின் வீழ்ச்சி - நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த இடத்தில் தங்கப் புதையலைத் தோண்டினால், அரசு நிதி நெருக்கடிப் பிரச்சினை தீரக் கூடும்; என்று. உடனே இந்த அமைச்சர், பிரதமர், நிதியமைச்சர், உள்துறையமைச்சர், சுரங்கத்துறை அமைச்சர், தொல் பொருள் துறை அமைச்சர், அய்.மு. கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி,  புவி ஆய்வுத்துறை GSI (Geologicial Servey of India) எல்லாவற்றிற்கும் எழுதிய பிறகே இது முக்கியத்துவம் பெற்று, பூமி தோண்டும் பணி துவங்கி யுள்ளது. என்றால், இதைவிட (அரசே) இப்படிப்பட்ட கேலிக் கூத்தில் ஈடுபடும் மூடத்தனத்தின் முடைநாற்றம் வேறு உண்டா?
இதைவிட, இஸ்ரேல் போன்ற நாட்டினர் பாலை வனத்தை விவசாயப் பூமியாக்கி உள்ளனரே, அந்தத் தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்தாலாவது பயன் அளிக்காதா?
நாடு எங்கே போகிறது?
உழைப்பைத் தொலைத்துவிட்டு, ஊர் மக்களை பேராசைப் பிடித்தவர்களாக்கி விடும் நிலையை மத்திய, மாநில அரசுகளே உருவாக்கிடலாமா? இதற்கு உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளும்கூட துணை போகலாமா? நாடு எங்கே போகிறது?
மதச்சார்பற்ற அரசு என்பதும், அறிவியல் மனப்பான்மையை பெருக்குதலும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
வெட்கம்! வேதனை- தேசிய அவமானம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக