சனி, 19 அக்டோபர், 2013

சிறுநீரகக் கோளாறு, டயாலிசிஸ் தொடர்பாக பத்ரியின் கருத்து


நேற்று மருத்துவர் புரூனோவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.
விவாதத்தின் சுருக்கத்தைக் கீழே தருகிறேன். என் புரிதலில் தவறுகள் இருந்தால் புரூனோ அவற்றைச் சரி செய்துவிடுவார் என நம்புகிறேன். நாங்கள் முக்கியமாகச் சந்தித்தது, டயாலிசிஸ் பற்றிப் பேச. ஞாநி தனக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றும் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். இந்தியா முழுவதிலும் சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் தேவைப்படுவோர் சுமார் 1.5 லட்சம் பேர் என்றும் எழுதியிருந்தார். அதே நிலைத்தகவலில் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஒரு டயாலிசிஸ் மையம் அமைக்கப்படும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகச் சொல்லியிருந்தார். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 6,000 பேர் இந்நிலையில் உள்ளதாக புரூனோ சொன்னார்.
இந்த 6,000 பேரில் சுமார் 1,000 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துகொள்கின்றனராம். கேடாவேர் டிரான்ஸ்பிளாண்டேஷன் என்ற முறையில் ‘மூளை இறந்த’ மனிதர்களின் உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து மாற்றிவைப்பதன்மூலம் சுமார் 600 பேருக்கு ஓராண்டில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தமுடிகிறதாம். இன்னொரு 1,000 பேர் தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொள்ள முடிவெடுப்பவர்கள். மீதமுள்ள 4,000 பேர் மாற்று சிகிச்சைகள் என்ற பேரிலும் சிகிச்சைகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமலும் தங்கள் உயிருக்கு ஆபத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.


* க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் உள்ளவர்கள், டயாலிசிஸ் செய்துகொண்டால்தான் வாழ்க்கையைத் தொடர முடியும். வாரத்துக்கு இருமுறை செய்துகொள்ளவேண்டும். மாதம் 8 முறை. ஒரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ள ரூ. 1,000 ஆகிறது. எனவே ஒரு மாதச் செலவு என்பது கிட்டத்தட்ட ரூ. 10,000 ஆகிவிடும். டயாலிசிஸ் என்பது தாற்காலிகமே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் ஒரே வழி.

* சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு, சிறுநீரகம் தானம் செய்வோர் வேண்டும். அது மூளை இறந்தோரிடமிருந்து கிடைக்கலாம்; உறவினர்களிடமிருந்து கிடைக்கலாம் அல்லது ‘திருட்டு வழிகளில்’ சிறுநீரகத்தை விலைக்கு வாங்குவதிலிருந்து கிடைக்கலாம். இதில் மூன்றாவது வழிமுறையை தமிழக அரசு கடுமையான சட்டங்கள்மூலம் தடுத்திருக்கிறது. ஆனால் மூளை இறந்தோரிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவது அதிகரித்தால்தான், தேவைப்படும் அனைவருக்கும் மாற்றுச் சிறுநீரகம் பொருத்த முடியும்.

* ஸ்பெயின், அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகளில் மூளை இறந்தோரிடமிருந்து பெறுவது மிக அதிகம் - ஒவ்வொரு மில்லியன் மக்கள் தொகைக்கும் சுமார் 25-35 பேரிடமிருந்து உறுப்புகள் பெறப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 0.05-க்கும் குறைவான அளவிலேயே உறுப்பு தானம் கிடைக்கிறது.

* அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை. க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கருவிகள் இல்லை. இருக்கும் கருவிகள், தாற்காலிகமாக சிறுநீரகம் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவம் செய்யவே பயனாகின்றன.

* மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்தினால், மாதத்துக்கு 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியும். இந்த அமைப்பை ஏற்படுத்த ஒருமுறை செலவாக ரூ. 55 லட்சம் ஆகும். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புச் செலவு, சம்பளம் என்று சுமார் ரூ. 20 லட்சம் தேவை.

* இப்போதைக்கு தமிழகத்தில் 4,000 பேருக்கு டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றால், இதில் ஒரு ஆயிரம் பேருக்காவது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக டயாலிசிஸ் செய்யவேண்டும் என்றால் மொத்தம் 100 டயாலிசிஸ் இயந்திரங்கள் தேவை.

* அரசு இப்போதைக்கு இதில் முதலீடு செய்யும் என்று சொல்ல முடியாது. எனவே தனியார்கள் சேர்ந்து இந்த இயந்திரங்களை வாங்கிக்கொடுத்தால் அரசு மருத்துவமனையில் அவற்றைப் பொருத்திக்கொள்ள அரசு இடம் கொடுக்கும்.

* ஆனால், இதனை இயக்குவதற்கான பணியாளர்கள், இந்த இயந்திரத்தைப் பராமரிக்கத் தேவையான செலவு ஆகியவற்றையும் தனியார்தான் செய்யவேண்டும். (என்னென்ன தேவை, எவ்வளவு செலவாகும் என்று அனைத்தையும் புரூனோ அனுப்பியுள்ளார்.)

மாதம் சுமார் ரூ. 10,000 செலவழித்து டயாலிசிஸ் செய்துகொள்வது என்பது மேல் நடுத்தர மக்களுக்கு மட்டுமே சாத்தியம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது இன்றைய தேதியில் தேவையான அனைவருக்கும் சாத்தியமில்லாததாக உள்ளது. அரசிடமிருந்து டயாலிசிஸ் இலவசமாகச் செய்வதற்கான தீர்வு உடனடியாகச் சாத்தியமில்லை.

எனவே நாம் என்ன செய்யலாம்?
  1. ஓர் அறக்கட்டளை தொடங்கி, பணம் வசூலிக்கலாம்.
  2. இந்த அறக்கட்டளை, தமிழக அரசுடன் ஒரு MoU போட்டுக்கொள்ளவேண்டும். அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை இந்த அறக்கட்டளை ஏற்படுத்தும்.
  3. இடத்தை தமிழக அரசு தரும்.
  4. இயந்திரங்களை இயக்க டெக்னீஷியன்களை அறக்கட்டளையே வேலைக்கு எடுக்கும்.
  5. டயாலிசிஸ் தேவைப்படுவோர் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  6. ஆண்டுச் செலவுகளுக்கான பணத்தையும் அறக்கட்டளை தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
இது தொடர்பாக உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக