ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கிளிநொச்சி குழந்தைகள் : எந்தவொரு காரியத்தையும் விமர்சிப்பது சுலபம். அதை நடத்திக் காட்டுவதுதான் கடினம்.

இசைவாணி செல்வகுமார் என்ற 5 வயது சிறுமி, “அப்பா, அப்பா” என்று
அழைக்க, குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறார், அந்த 58 வயது மனிதர். இவர், இசைவாணிக்கு மட்டும் அப்பா அல்ல… சுமார் 300 குழந்தைகள் இவரை அப்பா என்று அழைக்கின்றன.
இந்த 300 குழந்தைகளும், இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் பிறந்தவர்கள்தான். ஆனால் அந்த யுத்தத்தின் பின்னணி பற்றிய பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியாது.
யுத்தம் நடந்துகொண்டிருந்த ஒருகாலத்தில், ‘அப்பா’ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுச் செயல்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தார் என்பதும் தெரியாது.
அந்த அப்பாதான், விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த பல ராணுவ வெற்றிகளுக்காக பின்னணியில் இயங்கியவர். ஆம், கே.பி. என அறியப்பட்ட செல்வராசா பத்மநாதன்தான் அவர்.

சர்வதேச அளவில் கே.பி. செய்த பல வேலைத் திட்டங்கள்தான், விடுதலைப் புலிகளை புதியதொரு பரிமாணத்துக்கு கொண்டு சென்றது. ஆனையிறவு தாக்குதல் நடந்து அந்த முகாமை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பின், தமது தளபதிகளிடம் பேசிய விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், “கே.பி. இல்லாவிட்டால், இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது” என்றார்.
யுத்தம் நடந்த கிளிநொச்சியில்தான் கே.பி. தற்போது வசிக்கிறார். ஆனால், அவரை சூழ யுத்த சூழ்நிலை இல்லை. ‘அப்பா’ என்று அன்புடன் அழைக்கும் குழந்தைகள்தான் நிறைந்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் பெரிய வெடியோசைகள் கேட்டுக் கொண்டிருந்த இதே வன்னிப் பகுதியில், இப்போது அமைதியான முறையில், மூன்று சிறுவர் இல்லங்களை கே.பி. நடத்தி வருகிறார். கிளிநொச்சியில் உள்ள செஞ்சோலை, முல்லைத்தீவில் அன்பு இல்லம், பாரதி இல்லம் ஆகிய மூன்றிலும் சேர்த்து, 300 குழந்தைகள் உள்ளனர்.
“இப்போது நான் யுத்தம் பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை, குழந்தைகளின் கல்வி பற்றி சிந்திக்கிறேன். எதிர்கால சந்ததிக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன்” என்று கூறும் கே.பி., யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்.
யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளின்பின், இலங்கையில் நடப்பவை குறித்து, வெவ்வேறு மீடியாக்களில் வெவ்வேறு வித தகவல்களை பார்க்க முடிகிறது. அரசியல்வாதிகளும், வேறு செயல்பாட்டாளர்களும், வெவ்வேறு நோக்கங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலரும், இந்த சூழ்நிலையை தமது சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அரசியலிலும், சிலரது சுயநலத்திலும், யுத்தத்தில் உயிர் தப்பிய குழந்தைகளை கவனிக்க யாருமில்லை.
நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து அரசியல் செய்யும் சிலரை கேட்டால், “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாங்கள் அது செய்வோம்… இது செய்வோம்..” என்று நீட்டி முழக்குவார்கள். சரியாகக் கவனித்துப் பாருங்கள், அவர்கள் “இனி செய்வோம்” என்று ‘எதிர்காலத்தில்’ கூறுவார்கள். இதுவரை என்ன செய்தோம் என்பதை கூற மாட்டார்கள்.
ஏதாவது செய்திருந்தால்தானே கூறுவதற்கு?
எப்போது உதவி செய்யப் போகிறோம் என்றும் கூற மாட்டார்கள். ஏனென்றால், ஈழம் அமைத்தபின்தான் அவர்கள் உதவி செய்வார்களாம்!
சரி. 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தில் கிடைக்காத ஈழம், யுத்தத்தில் தோல்வியடைந்தபின், இவர்களுக்கு ‘ஜீபூம்பா அதிஷ்டமாக’ கிடைக்கிறது என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.
அந்த நாள்வரை இந்தக் குழந்தைகள் காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ முடியுமா?
யுத்தத்தில் தமது பெற்றோர்களில் இருவரையும் இழந்த குழந்தைகளும் கே.பி. நடத்தும் இல்லங்களில் உள்ளார்கள், ஒருவரை இழந்த குழந்தைகளும் இங்கு உள்ளார்கள், முன்னாள் போராளிகளின் குழந்தைகளும் உள்ளார்கள். அனேகமாக அனைத்து குழுந்தைகளுக்கும், யுத்தத்தில் யாராவது உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்.
மிகச்சிறிய வயதில் நேரில் யுத்தத்தை கண்ட தாக்கத்தில் இருந்து இந்த குழந்தைகள் விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அதற்கு அவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கை சூழ்நிலை அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவுக்கு போராட்டம், பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை என்ற ரீதியில் இருந்தால், அவர்களால் யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து எப்படி விடுபட முடியும்?
அப்படியொரு சரியான வாழ்க்கை சூழ்நிலையைத்தான் அமைத்து கொடுக்கிறார் கே.பி.
இந்த குழந்தைகள் இல்லங்கள் ஒன்றும் முள்வேலிக் கம்பிகளுக்கு பின்னால் இல்லை. யாரும் இந்த இல்லங்களுக்கு நேரில் சென்று பார்வையிடலாம். அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடலாம். அவர்கள் அங்கு எப்படி பராமரிக்கப்படுகிறார்கள் என நேரில் பார்வையிடலாம்.
அதற்கும் ஒருபடி மேலாக, அவர்களுக்கு கொடுக்கப்படும் அதே உணவுதான், அங்கு பார்வையிட வரும் விருந்தினர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அந்த உணவு எப்படியுள்ளது என்றும் சுவைத்துப் பார்க்கலாம்.
எந்தவொரு காரியத்தையும் விமர்சிப்பது சுலபம். அதை நடத்திக் காட்டுவதுதான் கடினம்.
இந்த இல்லங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சிலவற்றை தொகுத்துக் கொடுத்துள்ளோம். கண்களை மூடிக்கொண்டு யாரையும் விமர்சிக்குமுன், இந்த போட்டோக்களைப் பாருங்கள், அந்தக் குழந்தைகள் எப்படி பராமரிக்கப்படுகிறார்கள் என்று பாருங்கள். இதைவிட அதிகம் நீங்கள் செய்திருந்தால், தாராளமாக விமர்சியுங்கள்.

viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக