திங்கள், 21 அக்டோபர், 2013

குழந்தைகளை அடமானம் வைக்கும் பரிதாபம்! பிழைப்பு தேடி குடும்பத்துடன் வெளிமாநிலம் செல்வோர் !

சேலம் மாவட்டத்தில் இருந்து, பிழைப்பு தேடி, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு
செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை, பாதுகாப்புக்காகவும், பணத்துக்காகவும் மளிகை கடை, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில், அடமானம் வைப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிற மாநிலங்களுக்கு...:
சேலம் மாவட்டம், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர் உட்பட, பல இடங்களில் இருந்து, தொழிலாளர்கள் பலர், பிழைப்பு தேடி, குடும்பத்துடன், கேரளா மற்றும் ஆந்திராவுக்கு செல்கின்றனர். இந்த தொழிலாளர்கள், பெரும்பாலும், கேரளாவில், ரப்பர் தோட்டம், தேயிலை எஸ்டேட்களிலும், ஆந்திராவில், கல்குவாரிகளிலும் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள், ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என, வேலைக்கு செல்லும் இடங்களில் முகாமிட்டு வேலை செய்து விட்டு, தங்கள் ஊருக்கு திரும்புகின்றனர். பிழைப்பு தேடி வெளியூர் செல்லும் பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை வயதான பெற்றோர் மற்றும் உறவினர் வீட்டில் விட்டு
செல்கின்றனர். முதலில் இங்கிருந்து வெளி மாநிலம் செல்லும் ஏழை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துங்கள்,பிறகு ஏன் அவர்கள் குழந்தைகளை அடமானம் வைக்க போகிறார்கள் நீங்களும் ஏன் குழந்தைகளை மீட்க போகிறீர்கள்.
வயதான பெற்றோர், உறவினர் இல்லாத தொழிலாளர் பலர், குழந்தைகளை விட்டு செல்ல இடமில்லாமல் தவிப்புக்கு உள்ளாகின்றனர். அதே சமயம், பாதுகாப்பு கருதியும், பணத்துக்காகவும் தங்கள் குழந்தைகளை, மளிகை கடை, ஓட்டல், ஜவுளிக்கடை உட்பட, பல இடங்களில், சொற்ப பணத்தை பெற்று கொண்டு, ஆறு மாதம், ஒரு ஆண்டுக்கு அடமானம் வைத்து விட்டு, வெளிமாநிலத்துக்கு செல்கின்றனர்.ஊர் திரும்பிய பின், குழந்தையை மீட்டு, சில மாதம் வரை, குழந்தைகளை தங்களுடன் வைத்து கொண்டு, மீண்டும், குழந்தைகளை அடகு வைத்து விட்டு, வெளிமாநிலத்துக்கு சென்று விடுகின்றனர். இதனால், அடமானம் வைக்கப்படும் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த, தமிழ்நாடு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் இருந்து, பக்கத்து மாநிலங்களான, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுக்கு, பிழைப்பு தேடி செல்லும் பெற்றோர் பலருக்கு, தங்கள் குழந்தைகளை, சொந்த ஊரில் பாதுகாப்பாக வளர்த்து, பள்ளிக்கு அனுப்பும் அளவுக்கு உறவினர்கள் இருப்பதில்லை. குழந்தைகளை தங்களுடன் அழைத்து வரும் பெற்றோரை வெளிமாநிலத்தைச் சேர்ந்த, பெரும்பாலான குவாரி உரிமையாளர்கள், எஸ்டேட் அதிபர்கள் அனுமதிப்பதில்லை.

பட்டறைகளில் அடமானம்:

வேறுவழியின்றி, பெற்றோர், பணத்துக்காகவும், பாதுகாப்பு கருதியும், குழந்தைகளை புரோக்கர்கள் அல்லது தெரிந்த வர் மூலம், வசிப்பிடம் அருகில்உள்ள ஓட்டல், மளிகை கடை மற்றும் பட்டறைகளில் அடமானம் வைத்து விடுகின்றனர். அந்த குழந்தைகள், பெற்றோர் திரும்பி வரும் வரை, அங்கேயே சாப்பிட்டு, வேலை செய்யும் அவலம் நீடிக்கிறது.இதுபோன்று அடமானம் வைத்த, 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை, நாங்கள் மீட்டுள்ளோம்.

நடவடிக்கை அவசியம்:

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது, அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடமானம் வைப்பதை தடுக்க முடியும்.பெரும்பாலான இடங்களில், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் உள்ளது. ஆனால், வேலைக்கு செல்லும் ஏழை பெற்றோர்களின் குழந்தைகளை தங்க வைத்து, பள்ளிக்கு அனுப்பும் விடுதிகள் கிடையாது என்பது இப்பிரச்னைக்கு காரணம்.இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக