ஞாயிறு, 13 அக்டோபர், 2013

மலாலா ஒபாமாவை சந்தித்தார் ! அடுத்த பெனசிர் புட்டோ உருவாகிறார் ?

வாஷிங்டன்:பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட சிறுமி மலாலா,
அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷல் ஆகியோரை சந்தித்து பேசினார்.பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக பிரசாரம் செய்த சிறுமி மலாலா யூசுப்ஸாய் என்ற 16 வயது மாணவியை, தலிபான்
தீவிரவாகிகள் சுட்டனர். தலையில் பலத்த காயமடைந்த மலாலா லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார். எனினும், பெண் கல்விக்காக துணிந்து பிரசாரம் செய்த மலாலாவுக்கு சர்வதேச
அளவில் ஆதரவு பெருகியது. அதே வேளையில் தலிபான்கள் அவரது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல் அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு கிடைக்கும் என்று உலகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கடைசி நேரத்தில் அமெரிக்காவின் ரசாயன ஆயுத கண்காணிப்பு மையத்துக்கு சென்றது.


இதற்கிடையில் நான் மலாலா என்ற பெயரில் மலாலா தனது சொந்த அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் அவரது புத்தகம் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது புத்தகத்தை விற்பனை செய்ய கூடாது என்றும், வாய்ப்பு கிடைத்தால் இஸ்லாமுக்கு எதிராக செயல்படும் மலாலாவை மீண்டும் சுட்டு தள்ளுவோம் என்றும் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷல் ஆகியோரை மலாலா தனது தந்தையுடன் சென்று நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அவரது தன்னம்பிக்கை மிகுந்த செயல்பாடுகளை ஒபாமா பாராட்டினார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பாடுபடும் மலாலாவின் கனவுகளை நிறைவேற்ற அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்என்று தெரிவித்துள்ளது.

அதன்பின் டிவிக்கு அளித்த பேட்டியில் மலாலா கூறுகையில், பாகிஸ்தானின் நிலைமையை பார்க்கும் போது நான் பிரதமராக வர விரும்புகிறேன். அப்போதுதான் அங்கு அனைவருக்கும் கல்வியை அளிக்க என்னால் ஆன உதவிகளை செய்ய முடியும். முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோதான் எனக்கு ரோல் மாடல் என்று தெரிவித்தார்.
- See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=49241#sthash.FyfNyLB0.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக