வெள்ளி, 25 அக்டோபர், 2013

தமிழகத்தின் முதல் தமிழ் பிராமி சமணர் பாறை: கிரானைட் கும்பலால் வெடிவைத்து தகர்ப்பு ?

திருநெல்வேலி: நெல்லை அருகே, 2000 ஆண்டுகள் பழமையான, 'சமணர்
படுகை' கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 'கிரானைட்' கற்களுக்காக, பாறையை வெடிவைத்து தகர்த்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ளது மருகால்தலை. இங்குள்ள பாறைக் குன்று ஒன்றில், சமணர்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தங்கியதன் அடையாளமாக, 'சமணர் படுகை' கள் உள்ளன. இதை, 1906ம் ஆண்டில், எல்.ஏ.கேமைட் என்ற ஆங்கிலேய தொல்லியலார் கண்டறிந்தார். தமிழகத்தில் முதன்முறையாக, 'தமிழ் பிராமி' இங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது
காவலாளி கிடையாது: இங்குள்ள பாறை, யானையின் உடல்பகுதி போல வளைந்திருக்கும். அதன் தென்திசையில், மழை பெய்தாலும் தண்ணீர் புகாதபடி, தங்குமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் படுகைகளும், பாறைகளில் தண்ணீர் சேமிக்கும் குழிகளும் உள்ளன. அந்த பாறையின் மேல் பகுதியில், 'வெண்காசிபன் கொடுபித கல்கஞ்சனம்' என்ற, 'தமிழ் பிராமி' எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள், 'காசியில் இருந்து வந்த மாணவர்' அல்லது, 'வெண்காசிபன் என்ற மாணவர்' சமணர்களுக்காக ஏற்படுத்திய படுகை என்பதாகும். தென்மாவட்டங்களில், சமணர் படுகைகள், பள்ளிகள் இருந்தாலும் தொல்லியல் ஆய்வில், மருகால்தலை பழமையானதாகும்.
அம்பாசமுத்திரம் அருகே அய்யனார்குளம்பட்டியில் உள்ள 'சமணர் படுகை' 2000ம் ஆண்டுகளில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள கல்வெட்டில், 'பள்ளி செய்வித்தான் கடிகை கோவின் மகன் பெருங்கூற்றன்' என்ற, 'தமிழ் பிராமி' எழுத்துகள் உள்ளன. இதன் பொருள், 'வடமாநிலத்தை சேர்ந்த பல்கலைக்கழக தலைவரின் மகன், அங்கு வந்து சமணர்களிடம் கல்வி பயின்றுள்ளான்' என்பதேயாகும். எனவே, தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம் கருதி, 2011 ல், மருகால்தலையில், தமிழக அரசு சார்பில், வேலி அமைக்கப்பட்டது. அங்குள்ள 'தமிழ் பிராமி' எழுத்தின் முக்கியத்துவம் குறித்து, தமிழிலும், ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், காவலாளி நியமிக்கப்படவில்லை. அந்த இடம் வெறுமனே காடுபோல கிடந்தபோது, யாருமே அங்கு வந்ததில்லை. ஆனால் சுற்றுச்சுவர் எழுப்பிய பிறகு, சமணர் கூடத்தில், கரிக்கட்டையாலும், கற்களாலும் தங்கள் பெயரை எழுதும் அலங்கோலம் அரங்கேறுகிறது. பொதுமக்களுக்கு, அதன் தொன்மை தெரியாததாலும், சேதப்படுத்தியுள்ளனர். தொல்லியல் துறையில், பல மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரி என, இருப்பதால், தொல்லியல் சின்னம் சேதப்படுத்தப்பட்டிருப்பது கூட, தெரியவில்லை. மேலும், இதே பாறையில், 'கிரானைட்' கற்களுக்காக, பாறையின் மேல்பகுதியில் வெடிவைத்து தகர்த்து, துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.



கவனிப்பதே இல்லை:
'பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில், சுற்று வட்டாரங்களில், 200 மீட்டர் தூரத்திற்கு, 'கிரானைட்' குவாரி உள்ளிட்ட எத்தகைய சேதப்படுத்துதலும் கூடாது' என, தொல்லியல் துறை, அறிவிப்பு பலகை வைத்துள்ளது. தொல்லியல் துறையின் சார்பில், லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டும், அவற்றை கண்டும் காணாமல் இருப்பது, ஆர்வலர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சென்னையில் உள்ள தொல்லியல் துறை ஆணையர் டாக்டர் வசந்தியிடம் கேட்டபோது, ''புராதன சின்னங்களை சேதப்படுத்தக்கூடாது. இதுகுறித்து, நெல்லை மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியை அங்கு அனுப்பி, மேல்நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார்.

கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும், நெல்லை பல்கலை முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான தொ.பரமசிவன் கூறியதாவது: நம் பழமையை நூறு ஆண்டுகளுக்கு முன், ஒரு ஆங்கிலேயே கலெக்டர் கண்டுபிடித்து, நமக்கு அளித்துள்ளார். வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு இருந்த மொழிப்பற்று கூட தமிழருக்கோ, நமது அரசுக்கோ இல்லை. தமிழக அரசு அதிகாரிகள், இத்தகைய தொல்லியல் சின்னங்களை எப்போதுமே கவனிப்பதில்லை. எனவே, மத்திய அரசின் தொல்லியல் துறையில் ஒப்படைத்தால் மட்டுமே, நமது பழமையை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக