வெள்ளி, 18 அக்டோபர், 2013

மீண்டும் தமிழகத்தில் கந்து வட்டி கொடுமை அதிகரிப்பு ! 5 லட்சம் கடனுக்கு 21 லட்சம் செலுத்தவேண்டும்

பெரம்பூர் சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் ஜான்பாஸ்கோ. பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி ஜோரியா (52). மகன் டோமினிக் (29) என்ஜினீயர். மாதம் ரூ. 45 ஆயிரம் சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மகள் நான்சி (22). மண்ணடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணி செய்கிறார். ஜோரியா கொளத்தூர் யுனைடெட் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் ரூ. 5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினார்.
வட்டி கட்டி வந்த அவரால் பணத்தை முழுவதும் கொடுக்க முடியவில்லை. இதனால் ரூ. 5 லட்சம் கடன் வட்டி சேர்த்து ரூ. 21 லட்சமாக மாறியது. நேற்று முன்தினம் இரவு சரவணன், ஜான்போஸ்கோ வீட்டிற்கு வந்து வட்டி மற்றும் கடன் தொகையை உடனே செலுத்த வேண்டும் என கூறினார்.

இதனால் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி சென்றதாக தெரிகிறது. நேற்று காலை மீண்டும் சரவணன் தனது அடியாட்களுடன் வந்து பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்து சென்றார்.
நேற்று இரவு ஜான்போஸ்கோ பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த ஜோரியா, டோமினிக், நான்சி ஆகியோர் கந்து வட்டி மிரட்டலால் மனவேதனையில் இருந்தனர்.
தினமும் கந்துவட்டி மிரட்டலால் அவமானப்படுவதை விட தற்கொலை செய்யலாம் என முடிவு செய்தனர். 3 பேரும் வீட்டில் இருந்த மாத்திரைகள் அனைத்தையும் தின்றனர். பின்னர் அனைவரும் கத்தியால் தங்களது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றனர்.
அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் ஜோரியாவும், டோமினிக்கும் மயங்கி விழுந்தனர். வலியால் துடித்த நான்சி தற்கொலைக்கு முயன்றது குறித்து அதே பகுதியில் உள்ள மாமா வில்லியமுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு உயிருக்கு போராடிய ஜோரியா உள்பட 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் டோமினிக்கின் நிலைமை மோசமாக உள்ளது.
இதுகுறித்து செம்பியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டி வழக்குப்பதிவு செய்து கந்து வட்டி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக