திங்கள், 21 அக்டோபர், 2013

ஒரு குள்ளநரிக் கொடியவனின் வெளி வராத இரகசியங்கள்-4

குமார் பொன்னம்பலம்!  இலங்கை அரசாங்கத்தால் பயங்கரவாதிகள் என்று கைது செய்யப்பட்டிருந்த‌ ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு எதிராக‌ நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளில் இவரே ஆஜராகி இலவசமாக வாதாடினார்.. அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 சத‌வீதமான வழக்குகளை இவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது.. இவருடைய இந்த செயல்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவரது இமேஜை தமிழ் மக்கள் மத்தியில் உயர்ந்திருந்தது…
இப்படி புலம் பெயந்த தமிழர்களின் மத்தியிலும்.. இலங்கை தமிழர்கள் மத்தியிலும் அவர் ஏற்படுந்தியிருந்த இந்த நெருக்கமான தொடர்பு பிரபாகரனின் சந்தேகத்தை கிளறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. மேலும் பிரபாகரனை தமிழர்களின் தனிப் பெரும் தலைவர் என்றோ.. அல்லது அவரது சொல்லுக்குத்தான் அனைவரும் கீழ்ப்படிய வேண்டுமென்றோ குமார் பொன்னம்பலம் எந்த சந்தர்ப்பங்களிலும் கூறியிருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது..
ஒரு உண்மைக்கு ஒரு முகம் மட்டுமே!.. ஆனால் ஒரு பொய்மைக்கோ பல முகங்கள்!.. ஒரு உண்மையை எந்த காலத்தில் எழுதினாலும் அது தன் நிலையை மாற்றிக் கொள்வதில்லை!.. ஆனால் ஒரு பொய்மையோ காலத்திற்கு காலம் மாறுபட்டு விடுகிறது!..
ஒரு உண்மை என்றும் தன் நிலை தவறாமல் நிலைத்திருப்பதற்கு காரணம் அது நடந்து முடிந்த ஒரு காரியத்தை அப்படியே மீண்டும் பிரதிபலிக்கும் ஒரே காரணத்தை கொண்டிருப்பதால்தான்!..
ஆனால் ஒரு பொய்மையோ அதை முன்னொரு காலத்தில் சொன்னதை போல.. இன்னொரு காலத்தில் சொல்ல முடியாது.. அதை எப்படியோ மாற்றியமைக்க‌ வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டு விடுகிறது..
இதற்கு காரணம்.. ஒரு உண்மையை மூடி மறைத்து ஒரு பொய்யை சொல்லும் போது.. அது பொய்யென்று மற்றவர்கள் சந்தேகிக்க முற்படும் சமயங்களில்.. அதை மறைக்க‌ இன்னொரு பொய்யை சொல்லி நிலைமையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது..
அப்படித்தான் புலிகளின் தலைவரால் திட்டமிட்டு செய்யப்பட்ட‌ செல்லக்கிளி அம்மானின் படுகொலையும் இதே பாணியில்தான் இன்றைய காலம்வரை மூடி மறைக்கப்பட்டு வந்திருக்கிறது.. ஆனால் எப்படித்தான் செல்லக்கிளி அம்மானின் படுகொலையை மூடி மறைத்து பல பொய்களை புலிகள் கூறினாலும்.. அந்த பொய்களின் ஊடாக சில‌ உண்மைகள் கசியத்தான் செய்கிறது..

செல்லக்கிளியின் கடந்தகால‌ நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால்.. 1978 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் வைத்து.. விடுதலைப்புலிகளின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டிருந்த‌ உமா மகேஸ்வரனுடன், பிரபாகரனும் செல்லக்கிளியும்  இணைந்து.. தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து விலகி ஜெயவர்த்தாவின்  அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட பொத்துவில்  எம்.பி கனகரத்தினத்தை கைத்துப்பாக்கியால் சுட முயன்ற நிகழ்ச்சியே.. இதுவே தென்னிலங்கையில் புலிகள் நிகழ்த்தியிருந்த‌ முதலாவது தாக்குதலாகும்…
இந்த படுகொலையில் உயிர் தப்பிய கனரத்தினம் அவர்கள் சுமார் 3 மாதங்களின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்து.. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்..
இவர் கொடுத்திருந்த‌ வாக்கு மூலத்தில் தன்னை மிக அருகில் இருந்து சுட்ட பிரபாகரனையும் உமாமகேஸ்வரனையும் மட்டும்தான் அடையாளம் காட்டியிருந்தார்..
அதுவும் தன்னை சுட்டவர்களின் பெயரை மறைத்து அவர்களில் ஒருவர் நெட்டையானவர் எனவும் மற்றவர் குட்டையானவர் எனவும் தான் கூறியிருந்தார்..
இவர்கள் இருவரும் கனரத்தினத்தினதிற்கு முதலே அறிமுகமானவர்கள் தான்.. எனினும் அவர்கள் பெயரை அவர் கூறாமல் மறைத்ததற்கு காரணம்.. சிலவேளைகளில் இவர்களால் தனது உயிருக்கு ஏதிர்காலத்தில் மீண்டும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக அது இருந்திருக்கலாம்..
ஆனால் இந்த கொலை முயற்சியில் அவர் அறியப்படாத ஒரு நபர் இருந்தார்.. அந்த நபர் வெகுதூரத்தில் இருந்து குறி தவறாமல் அவரை சுட்ட இந்த செல்லக்கிளி அம்மான் தான்.. பிரபாகரனின் குறியும் உமா மகேஸ்வரனின் குறியும் தவறிய நிலையில்.. செல்லக்கிளியின் குறிதான் அவரைத் தாக்கியிருந்தது..
பிற்காலத்தில் இந்த உண்மையை புலிகளின் பல இணையத்தளங்கள் மறைத்து.. அன்று உமாமகேஸ்வரன் கனகரெத்தினத்திற்கு வைத்த குறி தவறி.. அது பிரபாகரனின் காதை உரசியபடி சென்றதாகவும்.. ஆனால் பிரபாகரனின் குறியே சரியாக கனகரத்தை சுட்டு நிலத்தில் வீழ்த்தியது என்றும் பெருமையடித்துக் கொண்டன..
இந்த அறிக்கைகளில் செல்லக்கிளியின் பெயர் முற்றாக தவிர்க்கப்பட்டிருந்தது.. ஆனால் தற்போது புலிகளால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “தமிழீழ மாவீரர்” (Tamil Eelam Heroes) என்ற முகநூல் (Face Book) இணையத்தளத்தில் மாவீரர் வரிசையில் வரும் செல்லக்கிளி அம்மானின் வரலாற்றில்.. செல்லக்கிளியின் குண்டுதான் கனகரத்தினத்தை அன்று வீழ்த்தியிருந்தது என்ற உண்மையை கசிய விட்டிருக்கிறார்கள்..
இந்த இடத்தில்.. பிரபாகரனால் வெறுக்கப்பட்ட ஒருவரான செல்லக்கிளியை ஏன் இன்றுவரை புலிகள் தங்கள் மாவீரர் வரிசையில் வைத்திருக்கிறார்கள்?.. அவரை அதிலிருந்து நீக்கி விடலாமே!.. என்று கேட்பதற்கு இங்கே இடமிருக்கிறது..
இதில்தான் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பஞ்ச‌தந்திரம் அடங்கியிருக்கிறது.. அதாவது தாங்கள் செய்த ஒரு கொலையை மறைப்பதற்காக அந்த நபருக்கு “மாவீரர்” பட்டமோ அல்லது “மாமனிதர்” பட்டமோ அளித்து.. அந்த கொலைப் பழியை வேறு ஒருவர் தலையில் இலகுவாக சுமத்தி விடுவது பிரபாகரன் தனது ஆரம்ப காலம் முதல் கடைப்பிடித்து வரும் ஒரு சாமர்த்தியமான‌ வழிமுறையாகும்..
இந்த வழி முறையை பின்பற்றித்தான் அன்று பிரபாகரனால் திட்டமிட்டு நடத்தப்பட்ட செல்லக்கிளி அம்மானின் படுகொலை.. அன்று இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தான் அவர் குண்டடிபட்டு இறந்தார்.. என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தார்கள்..
இதற்கு சான்றாக இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடலாம்.. கொழும்பில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர் குமார் பொன்னம்பலம், புலிகளுக்கு ஆதரவாக.. ஆனால் பிரபாகரனின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனியாக இயங்கிக் கொண்டிருந்த காலப்பகுதியாகிய 2000 ஆண்டு  ஜனவரி மாதம் 5 ம் திகதி புதன்கிழமை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்..
இவர் கொல்லப்படுவதற்கு சுமார் 18 நாட்களுக்கு முன் 1999 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி வெள்ளிக்கிழமை சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் பிரச்சார கூட்டத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த சமயத்தில்.. இவரை கொலை செய்யும் நோக்கத்தில் புலிகளால் நடத்தப்பட்ட‌ கரும்புலி தாக்குதலில் சிக்கி.. அதிஸ்டவசமாக‌ தனது கண்ணொன்றை மட்டும் இழந்த நிலையில் உயிர் பிழைத்தார்.. இதனால் அவருக்கு பார்வை நரம்பில் ஏற்பட்ட‌ நிரந்தர‌ சேதத்தினால்.. அவருக்கு செயற்கை கண்ணாடி கண் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது..
இந்த கொலை முயற்சி நடந்து சரியாக 18 நாட்களின் பின் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார்.. ஆகவே இந்த படுகொலை நிட்சயம் சந்திரிக்காவின் கைவரிசையாகத்தான் இருக்கும் என்பதை எவரும் நம்பி விடும் சூழ்நிலை அப்போது உருவாகியிருந்தது.. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவரை ஏற்கெனவே கொல்லும் திட்டத்தில் இருந்த‌ ஒருவர் இதை செய்து முடித்தாரா? என்று சந்தேகப்படுவதற்கு இங்கே நிறைய இடமிருக்கிறது!..
இந்த காலப் பகுதியில் குமார் பொன்னம்பலம் அவர்கள் இலங்கை தமிழர்கள் மத்தியிலும்.. புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் மிகுந்த பிரபலம் அடையத் தொடங்கியிருந்தார்.. குறிப்பாக ஐரோப்பிய கனடிய தமிழ் வானொலிகள் மூலம் அவர் ஏற்படுத்தியிருந்த தொடர்புகளால்.. புலம்பெயர் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த்து பெறுவதற்குரிய சட்டமூல அறிவுரைகளும்.. தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய தனது திட்டங்கள் பற்றியும் அவர் விரிவாக விளக்கமளித்தும் வந்திருந்தார்..
அதுமட்டுமல்ல.. இலங்கை அரசாங்கத்தால் பயங்கரவாதிகள் என்று கைது செய்யப்பட்டிருந்த‌ ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு எதிராக‌ நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளில் இவரே ஆஜராகி இலவசமாக வாதாடினார்.. அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 சத‌வீதமான வழக்குகளை இவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது.. இவருடைய இந்த செயல்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவரது இமேஜை தமிழ் மக்கள் மத்தியில் உயர்ந்திருந்தது…
இப்படி புலம் பெயந்த தமிழர்களின் மத்தியிலும்.. இலங்கை தமிழர்கள் மத்தியிலும் அவர் ஏற்படுந்தியிருந்த இந்த நெருக்கமான தொடர்பு பிரபாகரனின் சந்தேகத்தை கிளறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. மேலும் பிரபாகரனை தமிழர்களின் தனிப் பெரும் தலைவர் என்றோ.. அல்லது அவரது சொல்லுக்குத்தான் அனைவரும் கீழ்ப்படிய வேண்டுமென்றோ குமார் பொன்னம்பலம் எந்த சந்தர்ப்பங்களிலும் கூறியிருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது..
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.. அவருடைய மரணத்தின் பின்னர்.. பிரபாகரனால் அவருக்கு “மாமனிதர்” பட்டம் வழங்கப்பட்டு.. அவரை தங்கள் பிரச்சாரத்திற்கு சரியான முறையில் உபயோகித்தார்கள் வெளிநாட்டு புலிகள்.. இந்த “மாமனிதர்” பட்டத்தின் மூலம் அவருக்கு ஆதரவாக இருந்த மக்களை தங்கள் பக்கம் திருப்புவது புலிகளுக்கு இலகுவான ஒரு காரியமாக இருந்திருக்கிறது..
அத்துடன்.. இலங்கை தமிழர்களை தனது ஆயுத பலத்தின் மூலம் அடக்கி ஒடுக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரபாகரனால்.. புலம் பெயர் தமிழர்களை அப்படி அடக்கி ஒடுக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை…. ஆனால் அவரது வெளிநாட்டு புலிப் பினாமிகள் செய்து வரும் பிரச்சாரங்கள் மட்டுமே அவரை ஒரு பெரும் தலைவர் என்ற மாயையை அவருக்கு உருவாக்கிக் கொடுத்திருந்தது…
ஆகவே புலிகளுக்கு மட்டும் செவிசாய்த்து வந்த புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு.. அவர்கள் மத்தியில் புதிதாக‌ அவதாரம் எடுத்திருக்கும் குமார் பொன்னம்பலத்தின் பக்கம் திசை திருப்பப்படலாம் என்ற பிரபாகரனின் கணிப்பு அவரை தீர்த்துக்கட்டும் திட்டத்தை பிரபாகரனுக்குள் உருவாகியிருக்கலாம்..
மேலும் குமார் பொன்னம்பலத்தின் இந்த அசுர‌ வழர்ச்சியால்.. தமிழர்கள் அவரையும் தன்னைப் போல் ஒரு தனிப்பெரும் தலைவராக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில்.. அது தன் தலைமைக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சவாலாக‌கூட பிரபாகரன் எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இருந்திருக்கிறது…
ஆகவேதான் குமார் பொன்னம்பலம் என்னும் அந்த தடைக்கல்லை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அகற்றும் பணியை.. சந்திரிக்கா அம்மையாரின் மேல் கரும்புலி தாக்குதல் நடத்தப்பட்ட 18 நாட்களுக்குள் முடிக்கப்பட்டிருக்கிறது என்று சந்தேகிப்பதற்கு இங்கே இடமிருக்கிறது.. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தங்களை எவரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்பதும்.. பழியை சந்திரிக்காவின் தலையில் சுமத்துவதும் சுலபம் என்பதும் அந்த புலித் தலைவருக்கு நன்கு தெரிந்த விடயங்களாகும்..
மிகுந்த சாதுர்யத்துடனும்.. புத்திக் கூர்மையுடனும் திட்டமிட்டு நடத்தப்பட்ட‌ இந்த‌ கொலையில் பல மர்மங்கள் அடங்கியிருக்கின்றன.. அந்த புதன்கிழமை காலை 11 மணி வேளையில் அவரை வந்து சந்தித்த அந்த மர்ம நபர் யார்? முன்பின் தெரியாத அந்த நபருடன் அன்று அவர் வெளியில் செல்ல சம்மதித்தது ஏன்? கொலை நடந்தபின் குமார் பொன்னம்பலத்தின் தோட்டக்காரர் கொடுத்த வாக்கு மூலத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன?.. என்பதை பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் மேலும் விரிவாக ஆராய எண்ணியிருக்கிறேன்..
ஆகவே ஒரு படுகொலையை செய்யும் போது.. எவரும் சந்தேகப்படாத அந்த சூழ்நிலையில் தனக்கு வேண்டப்படாத ஒருவரையும் கூடவே போட்டுத் தள்ளி.. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் பறிக்கும் கில்லாடித்தனம் பிரபாகரனுக்கு குமார் பொன்னம்பலத்தின் காலத்தில் மட்டுமல்ல.. ஆரம்பகாலம் முதலே இருந்து வந்திருக்கிறது என்பதற்கு செல்லக்கிளியின் படுகொலையும் ஒரு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது..
இதே போல தமிழர் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம்.. மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்ட காலப் பகுதியை ஆராய்ந்து பார்த்தால்.. அவர்களையும் எவரும் சந்தேகப்பட முடியாத ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரபாகரன் திட்டமிட்டு படுகொலை செய்திருந்தார் என்ற உண்மை தெரியவரும்..
1989 ம் ஆண்டு ஜூலை மாதம் 13 ம் திகதி வியாழக்கிழமை தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களும், யோகேஸ்வரன் அவர்களும் யோகேஸ்வரனின் இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள்.. இவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன் 1989 ம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார்.. ஜே.ஆரின் பாசறையில் வழர்ந்த ரணசிங்க பிரேமதாசா..
பிரேமதாசா ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் கழிந்த நிலையில்.. இந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பும் பணியில் தீவிரமாக இறங்கியிருந்தார்.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரேமதாசாவை அவரது பிரத்தியேக இல்லமாகிய “சுசீந்ரா” வில் சென்று சந்தித்தார் புலிகளின் பேச்சாளரான அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.. இந்த சந்திப்பு 1989 ம் ஆண்டு யூலை 4 ம் திகதி வியாழக்கிழமை இடம் பெற்றது..
இந்த இரகசிய‌ சந்திப்பிற்கான முக்கிய நோக்கம் இந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து விரட்டியடிக்க பிரேமதாசாவிடம் ஆயுதங்கள் பெற்றுக் கொள்வதும்.. அதே சமயத்தில் தமது புலிகளை ஆயுதங்களுடன் கொழும்பில் நடமாட அனுமதிப்பதுமாகும்.. இந்த அனுமதி பிரேமதாசாவினால் உடனடியாக வழங்கப்பட்டது..
இந்த சந்திப்பு நடந்த கால‌கட்டத்தில் இன்னொரு சம்பவமும் நடந்திருந்தது.. மாகாணசபை அமைப்பில் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த புலிகளிடம் இருந்து தங்கள் உயிரையும் மாகாண நிர்வாகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் கொழும்பில் தஞ்சம் புகுந்திருந்தார்கள்..
இவர்களுடன் சேர்த்து மற்றைய சில‌ ஆயுத குழுவினருக்கும் தற்பாதுகாப்புக்காக‌ ஆயுதங்களை வைத்திருப்பதற்கு பிரேமதாச அனுமதி வழங்கியிருந்ததால் அவர்கள் அனைவருமே சுதந்திரமாக கொழும்பில் நடமாடித் திரிந்தனர்..
அதே சமயத்தில்.. தமிழர் விடுதலை கூட்டணியினர் தமிழர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் முயற்சியில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முகமாக‌ யோகேஸ்வரனை அனுப்பி வைத்திருந்தார்கள்.. அவரும் பலமுறை பிரபாகரனை நேரில் சந்தித்து இது பற்றி பேசியிருந்தார்.. ஆகவே   இந்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் சம்மதிப்பதாக கூறிய பிரபாகரன் அவர்களை புல்லர்ஸ் வீதியில் அமைந்திருந்து யோகேஸ்வரனின் இல்லத்தில் வந்து சந்திப்பதாக கூறி.. சிரித்து முகத்துடன் யோகேஸ்வரனை வழியனுப்பி வைத்தார்..
ஆனால் அந்த சிரிப்பின் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை உணராத யோகேஸ்வரன் இதை அமிர்தலிங்கத்திடம் கூறி.. 1989 ம் ஆண்டு ஜூலை மாதம் 13 ம் திகதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது..
இவர்கள் வரவுக்காக மாடியில் அமிர்ந்தலிங்கமும்.. யோகேஸ்வரனும்.. சிவசிதம்பரமும் காத்திருந்தார்கள்.. குறித்த நேரத்திற்கு சற்று முன்னரே வந்திருந்த புலிகள் உறுப்பினர்களை வாசலில் நின்ற அமிர்தலிங்கத்தின் மெய்பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.. அவர்களுடன் தாங்கள் அமிர்தலிங்கத்தை சந்திக்க வந்திருப்பதாக கூறி அவர்கள் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தார்கள் வந்தவர்கள்..
வாசலில் ஏதோ பேச்சுக் குரல்கள் பலமாக‌ கேட்பதை உணர்ந்த அமிர்ந்தலிங்கம்.. மாடி வராந்தாவிற்கு வந்து அங்கு நின்றபடியே..”அவர்கள் எங்கள் பிள்ளைகள் தான் அவர்களைஉள்ளே வர‌ அனுமதியுங்கள்”.. என்று ஆங்கிலத்தில் கூறி.. அந்த‌ இயம தூதர்களை தானே அந்த இல்லத்திற்குள் வரவழைத்துக் கொண்டார்..
அன்று வந்திருந்த அந்த‌ புலிகளை.. அந்த மெய்பாதுகாவலர் உள்ளே செல்ல‌ அனுமதிக்காததற்கு காரணம்.. தனது உறுபினர்கள் அன்று அவர்களை சந்திக்க இருப்பதை எந்த காரணம் கொண்டும் எவரிடமும் கூற வேண்டாம் எனவும்.. அந்த சந்திப்பை மிகவும் இரகசியமாக வைத்திருக்கும்படியும் யோகேஸ்வரனிடம் பிரபாகரன் கூறியிருந்தார்.. அதன் பின்னணியில் மறைந்திருக்கும் பயங்கரத்தை யோகேஸ்வரன் அன்று அறிந்திருக்க சந்தர்ப்பமில்லை என்பது பரிதாபம்..
அவர்களை சந்திக்க வந்திருந்த மூன்று புலி உறுப்பினர்களான பீட்டர் அலோசியஸ் லியோன்.. விசு என்று அழைக்கப்படும் இராசையா அரவிந்தராஜ்.. அறிவு என்று அழைக்கப்படும் சிவகுமார் ஆகிய மூவரில் சிவகுமார் வெளியில் நிற்க மற்றைய இருவரும் உள்ளே சென்றார்கள்..
அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்ற அமிர்தலிங்கம் குழுவினர்.. வரவேற்பறையில் அமர்ந்தபடி வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.. பேச்சின் நடுவே அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்கரசி அம்மையார் தேநீரும் சிற்றுண்டியும் கொண்டு வந்து வந்திருந்தர்களுக்கு கொடுத்து விட்டு.. அந்த அறையில் ஒரு மூலையில் நின்றபடி அவர்கள் பேசுவதை அவதானித்துக் கொண்டிருந்தார்..
மிகவும் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது அந்த உரையாடல்.. திடீரென்று எவரும் எதிர்பாராத சமயத்தில்.. தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்த‌ விசு எதிரில் அமர்ந்திருந்த அமிர்தலிங்கத்தை தலையிலும் மார்பிலும் சுட்டார்.. அமர்ந்திருந்த சோபாவில் பேச்சு மூச்சின்றி அப்படியே சாய்ந்தார் அமிர்தலிங்கம்..
“ஐயோ” என்று அலறியபடி சோபாவில் இருந்து எழுந்திருந்த‌ யோகேஸ்வரனை தமது கைத்துப்பாக்கிகளால் மாறி மாறி சுட்டார்கள் விசுவும் அலோசியசும்.. அடியற்ற மரம்போல் அப்படியே தரையில் சாய்ந்தார் யோகேஸ்வரன்.. அவர்கள் இருவரின் உயிரும் அந்த இடத்திலேயே பிரிந்தது..
இந்த துப்பாக்கி சத்தங்கள் வெளியில் நின்றிருந்த அமிர்ந்தலிங்கத்தின் மெய்பாதுகாவலர்களுக்கு கேட்டது.. படபடவென்று மேல்மாடியை நோக்கி அவர்கள் விரைந்து வருவற்குள்.. விசுவும் அலோசியசும் அங்கிருந்து மாடிப்படி வழியாக‌ தப்பியோடுவதற்கு முயன்றனர்.. அப்படி தப்பியோடும்போது சிவசிதம்பரத்தை நோக்கி சுட்டார்கள்.. ஆனால் அவசரத்தில் சுட்டதால்.. அதிஸ்டவசமாக‌ அது குறி தவறி அவரது இடது பக்க தோளை மட்டுமே பதம் பார்த்தது..
மாடிப்படி வழியாக தப்பியோடும் அவர்கள் இருவரையும்.. தனது இயந்திர துப்பாக்கியை இயக்கியபடி விரட்டிச் சென்ற ஒரு மெய்பாதுகாவலர்.. அவர்கள் இருவரையும் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக் கொன்றார்.. அதே சமயத்தில் இவர்களுக்காக வெளியில் காத்திருந்த சிவகுமாரும் தப்பி ஓட முயற்சிக்கையில்.. அவனை நோக்கி திரும்பிய அந்த மெய்பாதுகாவலரின் துப்பாக்கி அவனையும் பரலோகம் அனுப்பி வைக்க தயங்கவில்லை..
இந்த படுகொலைகளை தாங்கள் நடத்தவில்லை என்று புலிகள் ஆரம்பத்தில் திட்டவட்டமாக மறுத்திருந்தார்கள்.. ஆனால் அன்று அமிர்ந்தலிங்கம் குழுவினரை சந்திக்க வந்தவர்கள் புலிகள்தான் என்று ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்ட போது அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை..
சந்தர்ப்பம் சூழ்நிலை அறிந்து அதை சரியான முறையில் உபயோகித்து.. தனக்கு வேண்டாதவர்களை போட்டுத் தள்ளி வந்த‌ பிரபாகன்.. அன்று தனது கொலையாளிகள் மூவரும் தான் போட்டிருந்த திட்டத்தின்படி அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் சுட்டுக் கொன்றபின் தப்பியோடியிருந்தால்.. யாருமே அறியாதபடி இந்த படுகொலை மூடி மறைத்திருப்பார்..
மேலும் மாகாணசபை அமைப்பதற்கு தடையாக “தமிழீழ” பிரச்சாரம் செய்ததால் தான் அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் ஈ‍.பி.ஆர்.எல்.எவ் குழுவினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றோ.. அல்லது கொழும்பிலிருந்த வேறு ஏதாவது ஆயுதக் குழுவினரால் கொல்லப்பபட்டிருக்கிறார்கள் என்றோ..அந்த பழியை தூக்கி தனது எதிரிகளின் தலையில் போட்டு.. தந்திரமாக‌ தப்பியிருப்பார்..
ஆனால் துரதிஸ்டவசமாக‌ இவர் ஒன்றை நினைக்க.. வேறு ஏதோ ஒன்று நடந்து இவர் மாட்டுப்பட்டது விதியின் விளையாட்டு என்றுதான் கூற வேண்டும்.. இப்படி அவர் அன்று மாட்டுப்படாமல் இருந்திருந்தால்..”தமிழீழ இலட்சியத்திற்காக சாத்வீக வழியில் அயராது உழைத்த அவர்கள் இருவரும் தமிழ் மக்கள் மத்தியில் போற்றப்பட வேண்டியவர்கள் என்று கூறி அவர்களுக்கு “மாமனிதர்” பட்டமளித்து.. அவர்கள் பக்கம் இருந்த மக்கள் ஆதரவையும் தன் பக்கம் திருப்பியிருப்பார்..
இந்த நிகழ்வுகளை நான் இங்கே குறிப்பிடுவதன் காரணம்.. சுமார் முப்பது வருடங்களுக்கு முன் நடந்த செல்லக்கிளியின் படுகொலையையும் இதே போன்றதொரு பாணியில்தான் பிரபாகரன் நடத்தியிருந்தார் என்பதை தெளிவுபடுத்துவதற்காகத்தான்..
சுமார் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட அந்த இரவில்.. அவர்களுடன் சேர்த்து 14 வது நபராக கொல்லப்பட்டவர் தான் இந்த செல்லக்கிளி அம்மானும்.. ஒரு கல்லில் அடிக்கப்பட்ட இரண்டாவது மாங்காய் அவன்..
செல்லக்கிளியின் படுகொலையை சரியாக புரிந்து கொள்வதற்கு..பிரபாகரனின் குள்ளநரித்தனமான‌ மன ஓட்டங்களை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக.. பல கடந்தகால நிகழ்வுகளை இந்த வாரம் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இந்த கட்டுரை சற்று நீளமாகி விட்டது.. ஆகவே செல்லக்கிளியின் படுகொலையின் தொடர்ச்சியை எனது அடுத்து வரும் பாகத்தில் தொடர்கிறேன் (தொடரும்).. ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக