திங்கள், 14 அக்டோபர், 2013

ஒரு குழந்தையை தத்தெடுக்க, 25 பெற்றோர் காத்திருப்பு!

மதுரை:ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உடன்படிக்கையில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உலகில் உயிர்வாழும் உரிமை உள்ளது.
குடும்பத்தோடுதான் குழந்தைகள் இருக்க வேண்டும். எனவே, குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை. மதுரையில், சராசரியாக ஒரு குழந்தையை தத்தெடுக்க, 25 பெற்றோர் காத்திருக்கின்றனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.பத்துமாத பந்தத்தை பத்திரமாய் கைகளில் அள்ளிச் சுமக்கும் வாய்ப்பு... நல்ல பெற்றோருக்கு கிடைக்காமல் போகிறது.மழலையின் சிரிப்பை பார்க்கும் போதெல்லாம், நம் வீட்டிலும் இந்த சிரிப்புச் சத்தம் கேட்காதா என, ஏங்கித் தவிக்கின்றனர், இவர்கள். இந்த வலியும், வேதனையும் ஒருபுறம்.இன்னொரு புறமோ வேண்டாமென்றாலும் குழந்தைகள் உருவாகின்றன. அவை சிலநேரங்களில் கருவாக கலைக்கப்படுகின்றன. அப்படியே உருவானாலும், வேண்டாப் பொருளாய் தூர எறியப்படுகின்றன. இப்படி ரோட்டில் வீசி எறியும் எண்ணற்ற மழலைகள் இறப்பது தான், தாங்க முடியாத வேதனை.மழலையில்லா பெற்றோருக்கு தத்தெடுப்பதில் இன்னமும் தயக்கம் நிலவுகிறது. அதற்கான நடைமுறைகள் அதிகமோ... நமக்கு குழந்தை கிடைக்குமோ என்ற சிந்தனையும் காரணம். தத்தெடுக்கும் நடைமுறை எளிது தான். மழலையர்களும் நல்ல பெற்றோருக்காக காத்திருக்கின்றனர்.


மதுரையில், கிரேஸ்கென்னட் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மழலை இல்லத்தில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு, தத்து கொடுக்கப்படுகின்றனர். தத்து கொடுக்கும் நடைமுறைகள் குறித்து, மழலை இல்ல திட்டத் தலைவரான டாக்டர் அகஸ்டஸ் சாமுவேல் டாட் கூறியதாவது:பிறந்த குழந்தை முதல், 12 வயது வரையுள்ள குழந்தைகள் 20 பேர் தற்போது உள்ளனர். 1978லிருந்து தத்து கொடுக்கிறோம். கடந்த 15 ஆண்டுகளாக, நான் நிர்வகிக்கிறேன்.ஆண்டுக்கு 40 குழந்தைகள் வரை தத்து கொடுக்கிறோம். மருத்துவமனை மூலம்கிடைக்கும் வருமானத்தில் தான் மையத்தை நடத்துகிறோம்.

வெளிநாட்டு நிதிநிறுவனத்திடம் நன்கொடைவசூலிப்பதில்லை. நியாயமான பெற்றோரிடம் குழந்தை சேரவேண்டும் என்பது தான் ஆசை. இங்கே குழந்தைக்காக ஒரு குடும்பத்தை, பெற்றோரை அமைத்துக் கொடுக்கிறோமே தவிர, பெற்றோருக்காக குழந்தைகளை தருவதில்லை. ஒருசிலர் நிறம், அழகு இவற்றைப் பார்த்து தேர்வு செய்வர். பெரும்பாலானோர் குழந்தையை பார்த்தமாத்திரத்தில் தேர்வு செய்து விடுவர். ஏனென்றால் பிள்ளை இல்லாத வலி, அவர்களுக்கு தான் தெரியும்.

தத்து கொடுக்கும் குழந்தைகள் உண்மையிலேயே நல்ல நிலைமையில் வளர்கின்றன. உண்மையான பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் கூட சில விஷயங்களில் நம்மோடு முரண்படலாம். உறவை இழந்த குழந்தைக்கும் பெற்றோரின் அருமை தெரியும். குழந்தை இல்லாத பெற்றோருக்கும் பிள்ளையின் அருமை புரியும். இந்த புரிதல் இருப்பதால், குழந்தைகள் நன்றாகவே வளர்கின்றன.

ஒரு குழந்தைக்கு 25 பெற்றோர் வீதம் காத்திருக்கின்றனர். 100க்கு 98 சதவீதம் பேர், பெண் குழந்தைகளை தத்தெடுக்கவே விரும்புகின்றனர். ஏனென்றால் பெண் குழந்தைகள் அன்பையும், அரவணைப்பையும்அதிகம் விரும்புகின்றனர். இருதய நோய் பாதிப்பு,ஊனத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளை இங்குள்ள பெற்றோர் விரும்புவதில்லை. மேலும் அவர்களுக்கு அதிகபட்சமாக மருத்துவ செலவும் செய்ய வேண்டி வரும்.இத்தகைய குழந்தைகளை வெளிநாட்டு பெற்றோர் ஆர்வமாக தத்தெடுத்து பாதுகாப்பர். ஆண்டுக்கு இரண்டு குழந்தைகள், இப்படி வெளிநாட்டுக்கு செல்கின்றன.

அரசு மருத்துவமனை தொட்டில் திட்டத்தில், பெற்றோரால் கைவிடப்படுவது, தானாக வந்து ஒப்படைப்பது என, குழந்தைகள் மூன்று விதங்களில் கிடைக்கின்றனர். குழந்தை வேண்டாமென்றால், இங்கேயே வந்து பெற்றோர் கையெழுத்திட்டு ஒப்படைத்துச் செல்லலாம். அந்த குழந்தை நிம்மதியாக வேறொரு பெற்றோரிடம் வளரும். அதை விட்டு, எங்கேயோ சாகும் நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டாமே. இவ்வாறு கூறினார்.

தத்தெடுக்க தகுதி வேண்டுமா?

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.
தம்பதியரின் கூட்டு வயது 90க்குள் இருந்தால் மட்டுமே, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க முடியும்.
திருமணமாகாமல் தனியாக வாழும் ஆண், பெண்கள்25 முதல் 50 வயதுக்குள் இருந்தால், மூன்று வயது வரை தத்தெடுக்கலாம்.
திருமணமாகாத ஆண்கள், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
குழந்தையை பராமரிப்பதற்கு தேவையான பொருளாதார வசதி இருக்க வேண்டும்.
அருகில் உள்ள தத்தெடுப்பு மையங்களை அணுகி, பெயரை பதிவு செய்ய வேண்டும்.
adoptionindia.nic.in இணையதளத்தில் பெயரை பதிவு செய்யலாம்.
மதுரையில் கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் - மழலைஇல்லம், 8, கென்னட் ரோடு, எல்லீஸ்நகர், மதுரை - 625 016. போன்:0452 - 260 1767. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக