புதன், 30 அக்டோபர், 2013

டெல்லியில் 14 கட்சிகள் மோடிக்கு எதிராக கூடின ! ஐ. ஜனதா தளம், சமாஜ்வாடி , இடதுசாரிகள் , தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட

இடது சாரிகள் மூன்றாவது அணி அமைப்பது குறித்து தீவிர முயற்சி எடுத்து
வருகின்றன. புதுடெல்லியில் இன்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, தேசிய வாத காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மதவாத கட்சியான பாரதிய ஜனதாவிற்கும் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் எதிராகவே இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதற்காகவே நாம் இங்கு இணைந்திருக்கிறோம். பாசிச கட்சிகளை தோற்கடிக்க கூடுமான வரை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார். சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் பேசியபோது, மூன்றாவது அணியை சேர்ந்த ஒருவரே நாட்டின் அடுத்த பிரதமராக வருவார். ஆனால், 2014 தேர்தலுக்கு பிறகே இது முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல் கூறுகையில், இது மூன்றாவது அணி அமைப்பதற்கான கூட்டம் என்பதை விட மோடிக்கு எதிரான அணி என்று கூறலாம் என்றார். இக்கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க.  பிரதிநிதிகள்  கலந்துகொண்டனர். மதச்சார்பின்மை என்பது மற்றவர்களை நசுக்கி சமூகத்தின் ஒரு பிரிவினரை திருப்தி படுத்துவதல்ல என்று அக்கட்சி கூறி வருவது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் பாரதிய ஜனதாவுடன் நெருக்கமாக இருக்கும் சந்திரபாபு நாயுடு இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக