திங்கள், 2 செப்டம்பர், 2013

இரவில் பெட்ரோல் பங்குகளை மூட உத்தேசம் ! சிக்கன நடவடிக்கியாம் !

எரிபொருள் தேவையைச் சமாளிப்பதற்காக, பெட்ரோல் பங்க்குகளை இரவு
நேரங்களில் மூடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூரில் இருந்து அவர் பி.டி.ஐ. செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியது:
எரிபொருள் தேவையை 3 சதவீத அளவுக்கு குறைத்து, ரூ.16,000 கோடியை மிச்சப்படுத்துவதற்காக பெட்ரோலிய அமைச்சகம் இம்மாதம் 16ஆம் தேதி முதல் பெரிய அளவிலான எரிபொருள் சேமிப்புத் திட்டத்தை தொடங்க உள்ளது.

ரூ. 17.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த சிறப்புத் திட்டத்தில் ஊடகங்கள் மூலம் பிரசாரம், தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிரைவர்களுக்கு எரிபொருள் சிக்கனம் குறித்து பயிற்சி அளிப்பது, எரிபொருள் விற்பனை நிலையங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பது ஆகியவை அடங்கும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் எண்ணெய் இறக்குமதி மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் தேவையைச் சமாளிப்பதற்கு பல்வேறு யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்க்குகளை இரவு நேரங்களில் மூடுவதும் அவற்றில் ஒன்றாகும். ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த யோசனை எனது கருத்து அல்ல. எனினும், இதை நெடுஞ்சாலைகளில் அமல்படுத்த இயலாது. நாம் இப்போது பொருளாதார ரீதியாக கடினமான காலகட்டத்தைக் கடந்து வருகிறோம். நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் சேமிப்புக்காக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். அவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. எரிபொருளை சேமிக்கும்படி மக்களையும் வலியுறுத்தி வருகிறோம் என்றார் வீரப்ப மொய்லி.
ரூபாய் மதிப்பு வீழ்ந்து வருவது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது ஆகியற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு எடுக்க உள்ள சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாக பெட்ரோல் பங்க்குகளை இரவில் மூடும் திட்டம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
எனினும், பெட்ரோலியத்துறை செயலர் விவேக் ரே கூறுகையில், ""பெட்ரோல், டீசல் தேவையைக் குறைப்பதற்காக பெருநகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பெட்ரோல் பங்க்குகளை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கும் திட்டம் எதுவும் அமைச்சகத்திடம் இல்லை'' என்றார்.
முன்னதாக, மொய்லி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஈரானில் இருந்து கூடுதலாக எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறுக்கீடாக இருக்காது என்று தெரிவித்திருந்தார்.
பாஜக விமர்சனம்: அமைச்சரின் வீரப்ப மொய்லியின் கருத்து குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசேனிடம் கேட்டபோது, ""பெட்ரோல் பங்க் என்ன, இந்த அரசு நாட்டையே மூடிவிடும். இரவில் பெட்ரோல் பங்க் மூடப்படும் என்றால் மக்கள் தங்கள் கார்களுக்கு காலையிலேயே பெட்ரோலை நிரப்பிவிட மாட்டார்களா? வீரப்ப மொய்லியின் யோசனை வேடிக்கையாக உள்ளது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசிடம் யோசனைகள் தீர்ந்துபோய் விட்டன என்றால், பாஜகவிடம் இருந்து யோசனைகளை அரசு கேட்டுப் பெறலாம்'' என்று தெரிவித்தார் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக