திங்கள், 5 ஆகஸ்ட், 2013

SRM பச்சமுத்து ஜெயமோகனுக்கு விருது ! மீதியை வினவு ! அறம் தின்ற ஜெயமோகன் !

அறம் - ஜெயமோகன்எஸ் ஆர் எம், புதிய தலைமுறை பாரிவேந்தர் பச்சமுத்து அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகளை படித்துவிட்டு ரூ. 1.50 இலட்சம் பாக்கெட் மணி கொடுத்த கதை!லிகாலம் முத்திடுச்சி. பசங்க எல்லாம் பெரியவங்க சொன்னா கேட்கறதில்ல. அது அது ஜீன்ஸ் பேன்டும், டி-ஷர்ட்டும் போட்டுக்குதுங்க, ராத்திரி எல்லாம் பார்ட்டின்னு கும்மாளம் அடிக்குதுங்க, வெளிநாட்டு பண்டமா தின்னாத்தான் செரிக்கும்னு அலையுதுங்க. பெரியவங்களுக்கு மரியாதையே இல்ல. எப்ப பார்த்தாலும் பேஸ்புக்லையே விழுந்து கிடக்கிறாங்க. சீரியசா வாசிப்பே இல்லாம ஆகிட்டிருக்கு. தமிழ் இலக்கியம் தொடருமா என்ற அச்சமாயிருக்கிறது.”

இப்படி எல்லாம் உலகம் ‘சீரழிந்து’ கொண்டிருந்தாலும், யுக யுகமாக உலகைத் தாங்கிப் பிடித்து நிற்கும் ஒரு விழுமியம் இருக்கிறது. அதுதான் அறம்.
தொலைக்காட்சியின் விளம்பர விளக்கு வெளிச்சங்களுக்கு அப்பால், பத்திரிகைச் செய்திகளின் பரபரப்பை தொட்டு விடாத மூலைகளில், சிறு கிராமங்களின் கால் படாத பசுமை வெளிகளில், நகர காங்கிரீட் காடுகளின் நிழல் தொடாத விழுதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில அபூர்வ மனிதர்கள் பலர் அறத்தின் இலக்கணமாக வாழ்கிறார்கள். அதுதான் இந்த உலகை பெரிய பிரச்சினைகள் இன்றி சுமூகமாக இயக்கிக் கொண்டிருக்கிறது. உன்னத இலக்கியங்களை படைக்கவும் வைக்கிறது. சலிப்புறும் மனித குலத்தை தட்டிக் கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சமாச்சாரத்தை சமஸ்கிருதத்தில் தருமம் என்று சொல்கிறார்கள். சமஸ்கிருத அறிவில் கூட ஷத்திரிய தருமம், பிராமண தருமம், வைஸ்ய தருமம், சூத்திர தருமம் என்று குலத்துக்கு ஏற்ப தருமம் வேறுபடுகிறது. ஆனால், தமிழில் பயன்படுத்தப்படும் அறம் என்ற சொல்லுக்கு ஒரு பொருள்தான் உண்டு என்பதோடு அதன் பொருள் விளக்கமும் மிக மிக ஆழமானது. காலத்தைத் தாண்டி, இடங்களைத் தாண்டி மனித உள்ளங்களில் மின்சாரமில்லாமல் ஒளிரும் உள்ளொளி அது. அந்த உள்ளொளிதான் பில்கேட்சை தூண்டி விட்டு மைக்ரோ சாப்ட் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ வைத்திருக்கிறது. ஜெயமோகனைப் போன்றோரை எழுத வைத்திருக்கிறது.
மனித குலத்தின் இலட்சியமனைத்தையும் அந்த இலட்சியவாதத்திற்காக செய்யப்படும் தியாகத்தையும், அத்தகைய தியாகத்தை பொருள் கூறி புகழ் பாடுவதும் என அறத்தின் விளக்கம் விரிந்து சென்று கொண்டே இருக்கும்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களை கொன்று போடும் வல்லமை உடையது என்று சிலப்பதிகாரத்தில் அறம் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பால்களில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவு படுத்தும் எவரையும் அறம் பாடி ஒழிக்கும் வல்லமையை தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அந்த வரிசையில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன், அறம் என்ற பெயர் சூட்டபட்ட வரிசையில் சில சிறுகதைகள் எழுதினார். அந்தக் கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாகவும் வெளி வந்தன. அவரது வாசகரிடையே அக்கதைகள் பெருத்த வரவேற்பை பெறுவதற்கு அறம் குறித்த மானுடத்தின் தொன்ம தொடர்ச்சியே காரணம் என்றாலும் அந்தத் தொடர்ச்சியை கதறக் கதற பிடித்து வந்து அடையாளம் காட்டிய ஜெயமோகனது மேதைமை சாதாரணமான ஒன்றல்ல.
அப்போது நாங்களும் கூட அறம் சிறுகதைகளை படித்து மதிப்புரை ஒன்றை எழுதுவது என்று முடிவு செய்து விவாத அமர்வுகளை நடத்தினோம். இரண்டு அமர்வுகளாக பல மணி நேரம் நீடித்த அந்த விவாதங்களை தொகுத்து கட்டுரையாக எழுத வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். அது தொடர்பான குறிப்புகள் சில ஆயிரம் சொற்களுக்கு நீண்டிருந்தன. என்ன இருந்தாலும் அறம் அல்லவா? ஒரு குறுகிய நேரத்தில், குறு வடிவில் அறம் குறித்து ‘விவாதி’க்க முடியாது என்பது எங்களது அனுபவம். பல்வேறு வேலைகளுக்கு நடுவில் அறம் சிறுகதைகள் பற்றி எழுத வேண்டிய கனமான வேலைக்கு போதுமான நேரம் ஒதுக்க முடியாமல் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி அந்த குறிப்புகள் சேமிப்பில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் எங்களது நேரப்பற்றாக்குறையை கண்டு இறங்கிய விஷ்ணுபுரத்து தேவதை ஒன்று, “தம்பி வினவு இனி அறம் கதைகள் குறித்து எழுதும் தேவையிருக்காது, அறம் கொல்லப்பட்டு விட்டது, படித்தாயா அந்த செய்தியை” என்று எழுப்பியது.
எழுத்தாளர் ஜெயமோகனது அறம் சிறுகதை தொகுப்புக்கு பாரி வேந்தர் பச்சமுத்துவின் எஸ்ஆர்எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப்பேராய விருது அளிக்கப்பட்ட தகவல்தான் மேற்கண்ட தேவதையின் செய்தி. இந்த விருது ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது என்று ஜெயமோகன் தளத்தில் வெளியான சந்தோஷக் குறிப்பு தெரிவிக்கிறது. அறம் குறித்து அவரது தளத்தில் வெளியான பாராட்டுக்களில் இதுதான் இலட்சியவாதத்தை பாராட்டிய இலட்சம் என்பது முக்கியமானது.
இப்படி அறத்தை விருது கொடுத்து பாராட்டும் அந்த பெருந்தகை குறித்தும் நாம் பேச வேண்டுமல்லவா! எனினும் பாரிவேந்தர் பச்சமுத்துவின் அருமை, பெருமைகளை நாம் பெரிதாக விவரிக்க வேண்டியதில்லை. கல்வி, பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, மருத்துவமனை, போக்குவரத்து என்று பல்வேறு துறைகளிலும் தனது கறை படிந்த வியாபார கரங்களை பரப்பி நிற்கிறது எஸ்ஆர்எம் குழுமம். அதன் ‘பேரும் புகழும்‘ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவையே.
ஜெயமோகன், பச்சமுத்துஅந்தக் குழுமத்தின் ஒரு பகுதியாக தமிழ்ப் பேராய விருது என்பது நடைமுறையில் இருப்பதும் சமகால தமிழ் இலக்கியத்தின் சாதனைகளை அங்கீகரிப்பது அதன் பணியாக இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லைதான். எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் முனைவர் த. இரா. பச்சமுத்து தமிழ்ப்பேராயத்தின் புரவலராகவும், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ தலைவராகவும் உள்ளார் என்று தமிழ்ப் பேராயத்தைப் பற்றிய விக்கிபீடியா குறிப்பு தெரிவிக்கிறது. அதாவது அண்ணல் பச்சமுத்து அவர்கள் தமிழ்ப் பேராய நடவடிக்கைகளில் நேரடியாக ஆர்வம் காட்டுகிறார்.
தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வெகுமதியுடன் புதுமைப் பித்தன் பெயரில் படைப்பிலக்கிய விருது, பாரதியார் பெயரில் கவிதை விருது, அழ வள்ளியப்பா பெயரில் குழந்தை இலக்கிய விருது என்ற வரிசையின் உச்சமாக, இறுதியாக 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பச்சமுத்து பைந்தமிழ் விருதும் வழங்கப்படுகிறது. ஆக, ஆண்டுக்கு மொத்தம் ரூ 20.5 லட்சம் முதலீட்டில் இலக்கியப் பணி செய்து வருகிறார் வள்ளல் பச்சமுத்து.
எதற்கு எடிட்டிங்? விருது குறித்த செய்தியை  முழுமையாகவே தருகிறோம்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தமிழ்ப் பேராயம் சார்பில் வழங்கப்படும் “பாரிவேந்தர் பைந்தமிழ்’ விருதுக்கு தமிழறிஞர் தமிழண்ணல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்துவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 24-ல் நடைபெறும் விழாவில், தமிழ் பேரறிஞரும், வாழ்நாள் சாதனையாளருமான தமிழண்ணலுக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், பாராட்டுப் பட்டயமும் வழங்கி கெüரவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தரும், தமிழ்ப் பேராயம் தலைவருமான எம்.பொன்னவைக்கோ கூறினார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான தமிழ்ப் பேராய விருதுகள் பெறுவோர் பட்டியலை எம்.பொன்னவைக்கோ வெளியிட, பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயம் புரவலருமான டி.ஆர்.பச்சமுத்து பெற்றுக் கொண்டார்.
பின்னர் பொன்னவைக்கோ செய்தியாளர்களிடம் கூறியது:
பாரிவேந்தர்
தமிழ்ப் பேராயம் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பட்டியலை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பச்சமுத்துவிடம் வழங்குகிறார் தமிழ்ப் பேராயம் தலைவர் எம். பொன்னவைக்கோ. உடன் தமிழ்ப் பேராயம் செயலர் பி.எம். அபிபுல்லா, ஒருங்கிணைப்பாளர் பாக்யவதி ரவி. (படம் : நன்றி தினமணி)
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் பேராயம் அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் மற்றும் சாதனையாளர்களைத் தேர்வு செய்து மொத்தம் ரூ. 20 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பரிசு விருதும், பாராட்டுப் பட்டயமும் வழங்கி கௌரவித்து வருகிறோம். கடந்த ஆண்டு பாரிவேந்தர் பைந்தமிழ் விருது தமிழறிஞர் இளங்குமரனாருக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது “அறம்’ நூலாசிரியர் ஜெயமோகனுக்கும், பாரதியார் கவிதை விருது “பெருநயப்புரைத்தல்’ நூலாசிரியர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்துக்கும், அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெ.கருணாகரன், கொ.மா.கோதண்டம், கமலா கந்தசாமி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும்.
ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது “அசடன்’ நூலாசிரியர் எம்.ஏ.சுசீலாவுக்கும், பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது “நேனோ-அடுத்த புரட்சி’ நூலாசிரியர் மோகன் சுந்தரராஜனுக்கும், ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது “இராஜராஜேச்சரம்’ நூலாசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கும், முத்துத் தாண்டவர் தமிழிசை விருது “பண்ணும் இலயமும்’ நூலாசிரியர் இ.அங்கயற்கண்ணிக்கும், வளர்தமிழ் விருது “திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்’ நூலாசிரியர் க.ஜவகருக்கும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் தலா ரூ.1.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும். அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கான விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது “அமெரிக்கக்காரி’ நூலாசிரியர் அ.முத்துலிங்கத்துக்கும் வழங்கப்படுகிறது.
பரிதிமாற்கலைஞர் விருது கோவை ஞானிக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயம் புரவலருமான டி.ஆர்.பச்சமுத்து பேசும்போது, சிறந்த தமிழ் அறிஞர்களையும், நூலாசிரியர்களையும் கெüரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்ப் பேராயம் விருதுகள் வழங்கி கெüரவித்து வருகிறது. விருதுகளுக்கான நூலாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை நீதியரசர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளனர் என்றார்.
தமிழ்ப் பேராயம் செயலர் பி.அபிபுல்லா, ஒருங்கிணைப்பாளர் பாக்யவதி ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஜெயமோகனது அறம் சிறுகதைகளில் வழிந்தோடும் இலட்சியவாதத்தை பாராட்டிய இலட்சங்களின் யோக்கியதை என்ன?
கர்நாடகாவில் இரும்புச் சுரங்க ஊழலில் கொள்ளை அடித்த கூட்டத்தைச் சேர்ந்தவர் தன் மகளை எஞ்சினியரிங் படிக்க வைக்க கொடுத்த கல்வி நன்கொடையும், ஆந்திராவில் விவசாயிகளை சுரண்டிய பண்ணையார் தனது மகனை மருத்துவ கல்லூரியில் படிக்க கொடுத்த கல்விக் கட்டணமும், இப்படியாக இந்தியாவின் பெரும் பணக்கார சிகாமணிகளின் நன்கொடை எனும் கொள்ளைப் பணத்தை வைத்து எஸ் ஆர் எம் எனும் கொள்ளைக் கம்பெனியை நடத்தப் பயன்படும் நிதிதான் அறம் சிறுகதை தொகுப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் பயன்படுகிறது என்பதை அறிந்து மெய் மறந்து நிற்கிறோம்.
அறம் கதைகளில் ஊடும் பாவுமாக மனதைத் தொடும் இலட்சியவாதம் எனும் அபூர்வ விழுமியத்தின் மதிப்பை பாரிவேந்தர் படித்து ருசித்து உணர்ந்த படியாலேயே விருது கொடுக்க முடிவாகியிருக்கிறது எனும் போது என்ன தோன்றுகிறது?
விஷ்ணுபுரத்து தேவதை “தம்பி வினவு, இனி நீ அறம் கதை குறித்து எழுதத் தேவையில்லை” என்று சொன்னதன் தாத்பரியம் இப்போது விளங்குகிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக